Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.112 திருப்பல்லவனீச்சரம் - ஈரடி

திருஞானசம்பந்தர்

3.112

திருப்பல்லவனீச்சரம் - ஈரடி பண் - பழம்பஞ்சுரம்

1201

பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தரசு பேணிநின் றாரி வர்தன்மை யறிவா ரார்.

1202

பட்ட நெற்றியர் நட்ட மாடுவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் திட்ட மாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1203

பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தழக ராயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1204

பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தண்ண லாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1205

பல்லி லோட்டினர் பலிகொண் டுண்பவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தெல்லி யாட்டுகந் தாரி வர்தன்மை யறிவா ரார்.

1206

பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் திச்சை யாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1207

பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தெங்கு மாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1208

பாதங் கைதொழ வேத மோதுவர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தாதி யாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1209

படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் தடிக ளாயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1210

பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர் பட்டி னத்துறை பல்லவ னீச்சரத் திறைவ ராயிருப் பாரி வர்தன்மை யறிவா ரார்.

1211

வான மாள்வதற் கூன மொன்றிலை மாதர் பல்லவ னீச்ச ரத்தானை ஞான சம்பந்தன் நற்ற மிழ்சொல்ல வல்லவர் நல்லரே.