திருக்கொச்சைவயம் பண் - பியந்தைக்காந்தாரம்
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.89 திருக்கொச்சைவயம்
திருஞானசம்பந்தர்
அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற் பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார் மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக் கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில் எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும் வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர் வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங் கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.
கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர் பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர் கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார் ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக் கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.
மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற் துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற் கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே. (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப் பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய் குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும் பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங் கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.
குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர் பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங் கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன் சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய் முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.