Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.49 சீகாழி

திருஞானசம்பந்தர்

2.49

சீகாழி பண் - சீகாமரம்

524

பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறும் கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப் பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு மானை யெம்பெரு மானென் றென்றுன்னும் அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.

525

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங் கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி வண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.

526

நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற் காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழி தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும் வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே.

527

மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங் கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி ஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர் உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.

528

மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக் கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி வலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திட மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே.

529

மற்று மிவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங் கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி நெற்றி மேலமர் கண்ணி னானைநி னைந்தி ருந்திசை பாடுவார் வினை செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே.

530

தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில் கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென் றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.

531

மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங் கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி அத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல் பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே.

532

பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள் கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழி திருவின் நாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகிய இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.

533

பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்டுகி லாடை போர்த்தவர் கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித் தொண்டை வாயுமை யோடுங் கூடிய வேடனே சுட லைப்பொ டியணி அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே.

534

பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ் கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி நயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே.