Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.45 திருக்கைச்சினம்

திருஞானசம்பந்தர்

2.45

திருக்கைச்சினம் பண் - சீகாமரம்

481

தையலோர் கூறுடையான் தண்மதிசேர் செஞ்சடையான் மையுலா மணிமிடற்றன் மறைவிளங்கு பாடலான் நெய்யுலா மூவிலைவே லேந்தி நிவந்தொளிசேர் கையுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே.

482

விடமல்கு கண்டத்தான் வெள்வளையோர் கூறுடையான் படமல்கு பாம்பரையான் பற்றாதார் புரமெரித்தான் நடமல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் கடமல்கு மாவுரியான் உறைகோயில் கைச்சினமே.

483

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடுஞ் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலான் அங்கை அனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

484

பண்டமரர் கூடிக் கடைந்த படுகடல்நஞ் சுண்டபிரான் என்றிறைஞ்சி உம்பர் தொழுதேத்த விண்டவர்கள் தொன்னகரம் மூன்றுடனே வெந்தவியக் கண்ட பிரான் மேவியுறை கோயில் கைச்சினமே.

485

தேய்ந்துமலி வெண்பிறையான் செய்யதிரு மேனியினன் வாய்ந்திலங்கு வெண்ணீற்றான் மாதினையோர் கூறுடையான் சாய்ந்தமரர் வேண்டத் தடங்கடல்*நஞ் சுண்டனங்கைக் காய்ந்தபிரான் மேவியுறை கோயில் கைச்சினமே. * நஞ்சுண்டு--அனங்கை எனப்பிரித்து, அனங்கை என்பதினுக்கு அனங்கனையெனப்பொருள் கொள்க.

486

மங்கையோர் கூறுடையான் மன்னு மறைபயின்றான் அங்கையோர் வெண்டலையான் ஆடரவம் பூண்டுகந்தான் திங்களொடு பாம்பணிந்த சீரார் திருமுடிமேற் கங்கையினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

487

வரியரவே நாணாக மால்வரையே வில்லாக எரிகணையால் முப்புரங்கள் எய்துகந்த எம்பெருமான் பொரிசுடலை யீமப் புறங்காட்டான் போர்த்ததோர் கரியுரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.

488

போதுலவு கொன்றை புனைந்தான் திருமுடிமேல் மாதுமையா ளஞ்ச மலையெடுத்த வாளரக்கன் நீதியினா லேத்த நிகழ்வித்து நின்றாடுங் காதலினான் மேவியுறை கோயில் கைச்சினமே.

489

மண்ணினைமுன் சென்றிரந்த மாலும் மலரவனும் எண்ணறியா வண்ணம் எரியுருவ மாயபிரான் பண்ணிசையா லேத்தப் படுவான்றன் நெற்றியின்மேற் கண்ணுடையான் மேவியுறை கோயில் கைச்சினமே. (*) இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

490

தண்வயல்சூழ் காழித் தமிழ்ஞான சம்பந்தன் கண்ணுதலான் மேவியுறை கோயில் கைச்சினத்தைப் பண்ணிசையா லேத்திப் பயின்ற இவைவல்லார் விண்ணவரா யோங்கி வியனுலக மாள்வாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கைச்சினநாதர், தேவியார் - வேள்வளையம்மை.