Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.29 திருப்புகலி - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

2.29

திருப்புகலி - திருவிராகம் பண் - இந்தளம்

306

முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும் பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந் துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ் சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.

307

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப் பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர் புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத் தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.

308

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர் பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத் தேவண விழாவளர் திருப்புகலி யாமே.

309

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக் கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர் செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித் தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.

310

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப் பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில் புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச் செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.

311

வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர் கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத் தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.

312

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர் பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச் செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.

313

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால் அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர் நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச் செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.

314

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல் ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும் நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித் தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.

315

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர் பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ் செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.

316

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல் அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப் பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.