Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.14 திருவெண்ணியூர்

திருஞானசம்பந்தர்

2.14

திருவெண்ணியூர் பண் - இந்தளம்

143

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும் விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை உடையானை யல்லதுள் காதென துள்ளமே.

144

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம் ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில் நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.

145

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும் முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில் இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.

146

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க் காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.

147

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத் தாரானைத் தையலோர் பாகமு டையானைச் சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.

148

முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத் தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.

149

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப் பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின் மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.

150

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச் செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப் பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.

151

மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங் கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில் அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.

152

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின் விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில் தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.

153

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன் திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார் பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வெண்ணிநாயகர், தேவியார் - அழகியநாயகியம்மை.