திருப்புறவம் பண் - குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.97 திருப்புறவம்
திருஞானசம்பந்தர்
எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச் செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும் பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.
மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும் மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப் போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.
வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர் பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.
துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப் பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.
தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங் காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம் அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர் பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.
எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக் கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப் பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர் புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.
பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத் துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும் அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற் புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.
மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும் மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங் கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர் பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.
வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான் மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம் கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர் பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.
பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன் இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.