Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.93 திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்

திருஞானசம்பந்தர்

1.93

திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி

1003

நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை நன்றும் ஏத்துவீர்க், கென்றும் இன்பமே.

1004

அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர் நித்தம் ஏத்துவீர்க், குய்த்தல் செல்வமே.

1005

ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று கைகள் கூப்புவீர், வைய முமதாமே.

1006

ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர் வாச மலர்தூவப், பாச வினைபோமே.

1007

மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர் பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே.

1008

மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார் பொய்யா ரிரவோர்க்குச், செய்யாள் அணியாளே.

1009

விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார் படையா யினசூழ, உடையா ருலகமே.

1010

பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே.

1011

இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே.

1012

தேரர் அமணருஞ், சேரும் வகைஇல்லான் நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.

1013

நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன் ஒன்றும் உரைவல்லார், என்றும் உயர்வோரே.