Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.84 திருக்கடனாகைக்காரோணம்

திருஞானசம்பந்தர்

1.84

திருக்கடனாகைக்காரோணம் பண் - குறிஞ்சி

904

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.

905

பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி அண்ணா மலைநாடன் ஆரூ ருறையம்மான் மண்ணார் முழவோவா மாட நெடுவீதிக் கண்ணார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

906

பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும் ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான் தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

907

மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல் அழிசூழ் புனலேற்ற அண்ண லணியாயப் பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக் கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.

908

ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச் சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான் பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.

909

ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல் ஞானத் துறைவல்லார் நாளும் பணிந்தேத்தக் கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.

910

அரையார் அழல்நாகம் அக்கோ டசைத்திட்டு விரையார் வரைமார்பின் வெண்ணீ றணியண்ணல் வரையார் வனபோல வளரும்வங்கங்கள் கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

911

வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோ ள் இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான் பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக் கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.

912

திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப் பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச் செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.

913

நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான் பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.

914

கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன் உரையார் தமிழ்மாலை பாடு மவரெல்லாங் கரையா வுருவாகிக் கலிவான் அடைவாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலாயதாட்சியம்மை.