Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.77 திருஅச்சிறுபாக்கம்

திருஞானசம்பந்தர்

1.77

திருஅச்சிறுபாக்கம் பண் - குறிஞ்சி

831

பொன்றிரண் டன்ன புரிசடை புரள பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மின்றிரண் டன்ன நுண்ணிடை யரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவ மாயவெம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

832

தேனினு மினியர் பாலன நீற்றர் தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார் ஊன்நயந் துருக உவகைகள் தருவார் உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார் வானக மிறந்து வையகம் வணங்க வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார் ஆனையி னுரிவை போர்த்தவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

833

காரிரு ளுருவ மால்வரை புரையக் களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி நீறணிந் தேறுகந் தேறிய நிமலர் பேரரு ளாளர் பிறவியில் சேரார் பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ ஆரிருள் மாலை ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

834

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் மலைமக ளவளொடு மருவின ரெனவும் செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார் தம்மல ரடியொன் றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர அம்மலர்க் கொன்றை யணிந்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

835

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும் விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும் பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும் பலபுக ழல்லது பழியில ரெனவும் எண்ணலா காத இமையவர் நாளும் ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற அண்ணலா னூர்தி ஏறுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

836

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித் தோடொரு காதினிற் பெய்துவெய் தாய சுடலையி லாடுவர் தோலுடை யாகக் காடரங் காகக் கங்குலும் பகலுங் கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த ஆடர வாட ஆடுமெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

837

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி இளங்கிளை யரிவையொ டொருங்குட னாகிக் கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங் குளிரிள மதியமுங் கூவிள மலரும் நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழிள வன்னியும் இவைநலம் பகர ஆறுமோர் சடைமேல் அணிந்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

838

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர் கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும் பிச்சமும் பிறவும் பெண்ணணங் காய பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப் பச்சமும் வலியுங் கருதிய வரக்கன் பருவரை யெடுத்ததிண் டோ ள்களை யடர்வித் தச்சமும் அருளுங் கொடுத்த வெம்மடிகள் அச்சிறு பாக்கம தாட்சி கொண்டாரே.

839

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும் நுகர்புகர் சாந்தமோ டேந்திய மாலைக் கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் எய்தலா காததோர் இயல்பினை யுடையார் தோற்றலார் மாலும் நான்முக முடைய தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள் ஆற்றலாற் காணா ராயவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

840

வாதுசெய் சமணுஞ் சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினை யாளர் ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் உள்கலா காததோர் இயல்பினை யுடையார் வேதமும் வேத நெறிகளு மாகி விமலவே டத்தொடு கமலமா மதிபோல் ஆதியும் ஈறும் ஆயவெம் மடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.

841

மைச்செறி குவளை தவளைவாய் நிறைய மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப் பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப் பதியவ ரதிபதி கவுணியர் பெருமான் கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண் டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும் அன்புடை யடியவர் அருவினை யிலரே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாக்கபுரேசர், தேவியார் - சுந்தரமாதம்மை.