திருத்தோணிபுரம் பண் - பழந்தக்கராகம்
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.60 திருத்தோணிபுரம்
திருஞானசம்பந்தர்
வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்டரங்க இசைபாடும் அளிஅரசே ஒளிமதியத் துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகால் பகராயே.
எறிசுறவங் கழிக்கானல் இளங்குருகே என்பயலை அறிவுறா தொழிவதுவும் அருவினையேன் பயனன்றே செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.
பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக் கண்பகத்தின் வாரணமே கடுவினையேன் உறுபயலை செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்துறையும் பண்பனுக்கென் பரிசுரைத்தால் பழியாமோ மொழியாயே.
காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற் பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய உணர்த்தாயே.
பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த காராரும் செழுநிறத்துப் பவளக்கால் கபோதகங்காள் தேராரும் நெடுவீதித் திருத்தோணி புரத்துறையும் நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே.
சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறீரே.
முன்றில்வாய் மடல்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை அன்றில்காள் பிரிவுறும்நோய் அறியாதீர் மிகவல்லீர் தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறீரே.
பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி ஏனோர்க்கும் இனிதாக மொழியுமெழில் இளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை என்னிடத்தே வரவொருகாற் கூவாயே.
நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன் பொற்பமைந்த வாயலகின் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே.
சிறையாரும் மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவேன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.
போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங் கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.