Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.43 திருக்கற்குடி

திருஞானசம்பந்தர்

1.43

திருக்கற்குடி பண் - தக்கராகம்

459

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாங் கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

460

அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும் பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர் சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.

461

நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத் தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர் போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில் காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.

462

ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண் டிருங்கள மார விடத்தை இன்னமு துன்னிய ஈசர் மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக் கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.

463

போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப் பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார் ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்குங் கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.

464

உலந்தவ ரென்ப தணிந்தே ஊரிடு பிச்சைய ராகி விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார் நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.

465

மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார் ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார் தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக் கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.

466

வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த் தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர் தாளமர் வேய்தலைப் பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க் காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.

467

தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை அளந்து கொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர் வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.

468

மூத்துவ ராடையி னாரும் (*)மூசு கருப்பொடி யாரும் நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமி லராமதி வைத்தார் ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாங் காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே. (*) மூசு கடுப்பொடி என்றும் பாடம்.

469

காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன் பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள் பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - முத்தீசர், தேவியார் - அஞ்சனாட்சியம்மை.