திருவையாறு பண் - மேகராகக்குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.130 திருவையாறு
திருஞானசம்பந்தர்
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.
விடலேறு படநாகம் அரைக்கசைத்து வெற்பரையன் பாவையோடும் அடலேறொன் றதுவேறி அஞ்சொலீர் பலியென்னு மடிகள்கோயில் கடலேறித் திரைமோதிக் காவிரியி னுடன்வந்து கங்குல்வைகித் திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தங் கீன்றலைக்குந் திருவையாறே.
கங்காளர் கயிலாய மலையாளர் கானப்பே ராளர்மங்கை பங்காளர் திரிசூலப் படையாளர் விடையாளர் பயிலுங்கோயில் கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால் இறகுலர்த்திக் கூதல்நீங்கி செங்கால்நன் வெண்குருகு பைங்கானல் இரைதேருந் திருவையாறே.
ஊன்பாயு முடைதலைக்கொண் டூரூரின் பலிக்குழல்வார் உமையாள்பங்கர் தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார் தழலுருவர் தங்குங்கோயில் மான்பாய வயலருகே மரமேறி மந்திபாய் மடுக்கள்தோறுந் தேன்பாய மீன்பாய செழுங்கமல மொட்டலருந் திருவையாறே.
நீரோடு கூவிளமும் நிலாமதியும் வெள்ளெருக்கும் நிறைந்தகொன்றைத் தாரோடு தண்கரந்தைச் சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில் காரோடி விசும்பளந்து கடிநாறும் பொழிலணைந்த கமழ்தார்வீதித் தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம்பயிலுந் திருவையாறே.
வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் நெறிகாட்டும் விகிர்தனாகிப் பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங்கோயில் காந்தார மிசையமைத்துக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித் தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
நின்றுலா நெடுவிசும்பில் நெருக்கிவரு புரமூன்றும் நீள்வாயம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில் குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த அரக்கர்கோன் தலைகள்பத்தும் மஞ்சாடு தோள்நெரிய அடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில் இஞ்சாயல் இளந்தெங்கின் பழம்வீழ இளமேதி இரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.
மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை மிகவகழ்ந்து மிக்குநாடும் மாலோடு நான்முகனு மறியாத வகைநின்றான் மன்னுங்கோயில் கோலோடக் கோல்வளையார் கூத்தாடக் குவிமுலையார் முகத்தினின்று சேலோடச் சிலையாடச் சேயிழையார் நடமாடுந் திருவையாறே.
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு சாக்கியருங் குணமொன்றில்லா மிண்டாடு மிண்டருரை கேளாதே யாளாமின் மேவித்தொண்டீர் எண்டோ ளர் முக்கண்ணர் எம்மீசர் இறைவரினி தமருங்கோயில் செண்டாடு புனல்பொன்னிச் செழுமணிகள் வந்தலைக்குந் திருவையாறே.
அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம் பெருமானை அந்தண்காழி மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான சம்பந்தன் மருவுபாடல் இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால் ஈசனடி யேத்துவார்கள் தன்னிசையோ டமருலகில் தவநெறிசென் றெய்துவார் தாழாதன்றே.