Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.103 திருக்கழுக்குன்றம்

திருஞானசம்பந்தர்

1.103

திருக்கழுக்குன்றம் பண் - குறிஞ்சி

1112

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1113

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங் காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1114

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங் கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1115

துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம் இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக் கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1116

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1117

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர் உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங் கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

1118

ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின் நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங் காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1119

இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந் தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம் மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக் கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1120

தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ் சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர் காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

1121

கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதகிரீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.