திருக்கண்ணார்கோயில் பண் - குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.101 திருக்கண்ணார்கோயில்
திருஞானசம்பந்தர்
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் பெண்ணாணாய பேரருளாளன் பிரியாத கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம் நண்ணாவாகும் நல்வினையாய நணுகும்மே.
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் வந்தமர்தெண்ணீர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக் கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே.
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் இடமென்பர் கொல்லையின்முல்லை மல்லிகைமௌவற் கொடிபின்னிக் கல்லியல்இஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே.
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் மருவளர்கோதை அஞ்சவுரித்து மறைநால்வர்க் குருவற்ஆல நீழலமர்ந்தீங் குரைசெய்தார் கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே.
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச் செறுமாவலிபால் சென்றுலகெல்லாம் அளவிட்ட குறுமாணுருவன் தற்குறியாகக் கொண்டாடும் கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே.
விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும் கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே.
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கீழால் நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னீந்த திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே.
செங்கமலப்போ திற்திகழ்செல்வன் திருமாலும் அங்கமலக்கண் நோக்கரும்வண்ணத் தழலானான் தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளத் தங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே.
தாறிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணூல் சேர்மார்பன் ஏறுடையன்பரன் என்பணிவான்நீள் சடைமேலோர் ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே.
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த பூமருசோலைப் பொன்னியல்மாடப் புகலிக்கோன் நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன் பாமருபாடல் பத்தும்வல்லார்மேல் பழிபோமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கண்ணாயிரேசுவரர், தேவியார் - முருகுவளர்கோதையம்மை.