Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

2.01 தில்லை வாழ் அந்தணர் புராணம்

சேக்கிழார்

350

ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி

351

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம் சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி

352

போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன் நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம் போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்

353

பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும் தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணித் தலை நின்று உய்த்தே அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார்

354

வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும் அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார் திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்

355

மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார் அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார் உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார் பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார்

356

ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார் தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார் ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும் மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்

357

செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்

358

இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்

359

அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம்