Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

11.01 பத்தாராய்ப் பணிவார் புராணம்

சேக்கிழார்

4147

ஈசருக்கே அன்பு ஆனார் யாவரையும் தாம் கண்டால் கூசி மிகக் குது குதுத்துக் கொண்டாடி மனம் மகிழ்வுற்று ஆசையினால் ஆவின்பின் கன்று அணைந்தால் போல் அணைந்து பேசுவன பணிந்த மொழி இனியனவே பேசுவார்

4148

தாவரிய அன்பினால் சம்பு வினை எவ்விடத்தும் யாவர்களும் அர்ச்சிக்கும் படி கண்டால் இனிது உவந்து பாவனையால் நோக்கினால் பலர் காணப் பயன் பெறுவார் மேவரிய அன்பினால் மேலவர்க்கும் மேல் ஆனார்

4149

அங்கணனை அடியாரை ஆராத காதலினால் பொங்கிவரும் உவகையுடன் தாம் விரும்பிப் பூசிப்பார் பங்கய மா மலர் மேலான் பாம்பு அணையான் என்று இவர்கள் தங்களுக்கும் சார்வரிய சரண் சாரும் தவம் உடையார்

4150

யாதானும் இவ் உடம்பால் செய்வினைகள் ஏறுயர்த்தார் பாதார விந்தத்தின் பால் ஆக எனும் பரிவால் காதார் வெண் குழையவர்க்காம் பணி செய்வார் கருக்குழியில் போதார்கள் அவர் புகழ்க்குப் புவனம் எல்லாம் போதாவால்

4151

சங்கரனைச் சார்ந்த கதை தான் கேட்கும் தன்மையராய் அங்கணனை மிக விரும்பி அயல் அறியா அன்பினால் கங்கை நதி மதி இதழி காதலிக்கும் திருமுடியார் செங்கமல மலர்ப் பாதம் சேர்வதனுக்கு உரியார்கள்

4152

ஈசனையே பணிந்து உருகி இன்பம் மிகக் களிப்பு எய்தி பேசினவாய் தழுதழுப்பக் கண்ணீரின் பெருந் தாரை மாசிலா நீறு இழித்து அங்கு அருவி தர மயிர் சிலிப்பக் கூசியே உடல் கம்பித்திடுவார் மெய்க் குணம் மிக்கார்

4153

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒரு காலும் மறவாமை குன்றாத உணர்வு உடையார் தொண்டராம் குணம் மிக்கார்

4154

சங்கரனுக்காளான தவம் காட்டித் தாம் அதனால் பங்கம் அறப் பயன் துய்யார் படி விளக்கும் பெருமையினார் அங்கணனைத் திருவாரூர் ஆள்வானை அடிவணங்கிப் பொங்கி எழும் சித்தம் உடன் பத்தராய்ப் போற்றுவார்