வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர் பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
6.01 திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் /முதல் பகுதி
சேக்கிழார்
சென்னி வளர் மதி அணிந்த சிலம்பு அணி சேவடியார் தம் மன்னிய சைவத் துறையின் வழி வந்த குடி வளவர் பொன்னி வளம் தரு நாடு பொலிவு எய்த நிலவியதால் கன்னி மதில் மருங்கு முகில் நெருங்கும் கழுமல மூதூர்
அப் பதி தான் அந்தணர் தம் கிடைகள் அரு மறை முறையே செப்பும் ஒலி வளர் பூகச் செழும் சோலை புறம் சூழ ஒப்பில் நகர் ஓங்குதலால் உகக் கடை நாள் அன்றியே எப்பொழுதும் கடல் மேலே மிதப்பது என இசைந்து உளதால்
அரி அயனே முதல் அமரர் அடங்க எழும் வெள்ளங்கள் விரி சுடர் மா மணிப் பதணம் மீது எறிந்த திரை வரைகள் புரிசை முதல் புறம் சூழ்வ பொங்கு ஓதம் கடை நாளில் வரி அரவி மந்தரம் சூழ் வடம் போல வயங்குமால்
வளம் பயிலும் புறம் பணைப் பால் வாசப் பாசடை மிடைந்த தளம் பொலியும் புனல் செந்தாமரைச் செவ்வித தட மலரால் களம் பயில் நீர்க் கடல் மலர்வது ஒரு பரிதி எனக் கருதி இளம் பரிதி பல மலர்ந்தாற் போல்ப உள இலஞ்சி பல
உளம் கொள் மறை வேதியர் தம் ஓமத் தூமத்து இரவும் கிளர்ந்த திரு நீற்று ஒளியில் கெழுமிய நண் பகலும் அலர்ந்து அளந்து அறியாப் பலூழி ஆற்றுதலால் அகல் இடத்து விளங்கிய அம்மூதூர்க்கு வேறு இரவும் பகலும் மிகை
பரந்த விளைவயல் செய்ய பங்கயமாம் பொங்கு எரியில் வரம்பில் வளர் தேமாவின் கனி கிழிந்த மது நறு நெய் நிரந்தரம் நீள் இலைக் கடையால் ஒழுகுதலால் நெடிது அவ்வூர் மரங்களும் ஆகுதி வேட்கும் தகைய என மணந்து உளதால்
வேலை அழல் கதிர் படிந்த வியன் கங்குல் வெண்மதியம் சோலை தொறும் நுழைந்து புறப்படும் பொழுது துதைந்த மலர்ப் பால் அணைந்து மதுத் தோய்ந்து தாது அளைந்து பயின்று அந்தி மாலை எழும் செவ்வொளிய மதியம் போல் வதியுமால்
காமர் திருப்பதி அதன் கண் வேதியர் போல் கடி கமழும் தாமரையும் புல்லிதமும் தயங்கிய நூலும் தாங்கித் தூமரு நுண் துகள் அணிந்து துளி வருகண்ணீர் ததும்பித் தேமரு மென் சுரும்பு இசையால் செழும் சாமம் பாடுமால்
புனைவார் பொன் குழை அசையப் பூந்தானை பின் போக்கி வினை வாய்ந்த தழல் வேதி மெழுக்குற வெண் சுதை ஒழுக்கும் கனை வானமுகில் கூந்தல் கதிர் செய் வடமீன் கற்பின் மனை வாழ்க்கைக் குலமகளிர் வளம் பொலிவ மாடங்கள்
வேள்வி புரி சடங்கு அதனை விளையாட்டுப் பண்ணை தொறும் பூழியுற வகுத்து அமைத்துப் பொன் புனை கிண்கிணி ஒலிப்ப ஆழி மணிச் சிறு தேர் ஊர்ந்த அவ்விரதப் பொடியாடும் வாழி வளர் மறைச் சிறார் நெருங்கியுள மணி மறுகு
விடு சுடர் நீள் மணி மறுகின் வெண் சுதை மாளிகை மேகம் தொடு குடுமி நாசி தொறும் தொடுத்த கொடி சூழ் கங்குல் உடுஎனு நாள் மலர் அலர உறு பகலில் பல நிறத்தால் நெடு விசும்பு தளிப்பது என நெருங்கியுள மருங்கு எல்லாம்
மடை எங்கும் மணிக்குப்பை வயல் எங்கும் கயல் வெள்ளம் புடை எங்கும் மலர்ப் பிறங்கல் புறம் எங்கும் மகப் பொலிவு கிடை எங்கும் கலைச் சூழல் கிளர் எங்கும் முரல் அளிகள் இடை எங்கும் முனிவர் குழாம் எயில் எங்கும் பயில் எழிலி
பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெம் குரு நீர்ப் பொருவில் திருத் தோணிபுரம் பூம்தராய் சிரபுரம் முன் வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம் பரவு திருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்
அப்பதியின் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசில் மறை கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் செப்பும் நெறி வழிவந்தார் சீவபாத இருதயர் என்று இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்
மற்றவர் தம் திரு மனையார் வாய்ந்த மரபின் வரு பெற்றியினார் எவ்வுலகும் பெறற்கு அரிய பெருமையினார் பொற்புடைய பகவதியார் எனப் போற்றும் பெயர் உடையார் கற்பு மேம்படு சிறப்பால் கணவனார் கருத்து அமைந்தார்
மரபு இரண்டும் சைவ நெறி வழிவந்த கேண்மையினார் அரவு அணிந்த சடை முடியார் அடியலால் அறியாது பரவு திருநீற்று அன்பு பாலிக்கும் தன்மையராய் விரவு மறை மனை வாழ்க்கை வியப்பு எய்த மேவு நாள்
மேதினி மேல் சமண் கையர் சாக்கியர் தம் பொய்ம்மிகுந்த ஆதி அருமறை வழக்கம் அருகி அரன் அடியார் பால் பூதி சாதன விளக்கம் போற்றல் பெறாது ஒழியக் கண்டு ஏதமில் சீர் சிவ பாத இருதயர் தாம் இடர் உழந்தார்
. மனை அறத்தில் இன்பம் உறு மகப் பெறுவான் விரும்புவார் அனையநிலை தலை நின்றே ஆய சேவடிக் கமலம் நினைவுற முன் பர சமயம் நிராகரித்து நீர் ஆக்கும் புனை மணிப்பூண் காதலனைப் பெறப் போற்றும் தவம் புரிந்தார்
பெருத்து எழும் அன்பால் பெரிய நாச்சியார் உடன் புகலித் திருத்தோணி வீற்று இருந்தார் சேவடிக் கீழ் வழிபட்டுக் கருத்து முடிந்திடம் பரவும் காதலியார் மணி வயிற்றில் உருத் தெரிய வரும் பெரும் பேறு உலகு உய்ய உளதாக
ஆள் உடையாளுடன் தோணி அமர்ந்த பிரான் அருள் போற்றி மூளும் மகிழ்ச்சியில் தங்கள் முதல் மறைநூல் முறைச் சடங்கு நாள் உடைய ஈரைந்து திங்களினும் நலம் சிறப்பக் கேளிர் உடன் செயல் புரிந்து பேர் இன்பம் கிளர்வ்வுறுநாள்
அருக்கன் முதல் கோன் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத் திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்கப் பரசமயத் தருக்கொழியச் சைவம் முதல் வைதிகமும் தழைத்து ஓங்க
தொண்டர் மனம் களி சிறப்பத் தூய திருநீற்று நெறி எண் திசையும் தனி நடப்ப ஏழ் உலகும் குளிர் தூங்க அண்டர் குலம் அதிசயிப்ப அந்தணர் ஆகுதி பெருக வண் தமிழ் செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல் வாய்ப்ப
திசை அனைத்தின் பெருமை எலாம் தென் திசையே வென்று ஏற மிசை உலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்ல அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல இசை முழுதும் மெய் அறிவும் இடம் கொள்ளும் நிலை பெருக
தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற நாளுடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க வாளுடைய மணிவீதி வளர்காழிப் பதிவாழ ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக
அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பரசமயப் பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்பட நல் ஊழி தொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தாவில் சராசரங்கள் எலாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் திரு அவதாரம் செய்தார்
அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர் எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றி மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே ஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார்
சிவன் அருள் எனப் பெருகும் சித்தம் மகிழ் தன்மை இவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான் அவன் வருநிமித்தம் இது என்று அதிசயித்தார்
பூ முகை அவிழ்ந்து மணம் மேவும் பொழில் எங்கும் தே மருவு தாதோடு துதைந்த திசை எல்லாம் தூ மருவு சோதி விரியத் துகள் அடக்கி மா மலய மாருதமும் வந்து அசையும் அன்றே
மேலை இமையோர்களும் விருப்பொடு கரப்பில் சோலை மலர் போல மலர் மா மழை சொரிந்தே ஞாலம் மிசை வந்து வளர் காழி நகர் மேவும் சீல மறையோர்கள் உடன் ஓம வினை செய்தார்
பூத கண நாதர் புவி வாழ அருள் செய்த நாதன் அருளின் பெருமை கண்டு நலம் உய்ப்பார் ஓதும் மறையோர் பிறிது உரைத்திடினும் ஓவா வேத மொழியால் ஒலி விளங்கி எழும் எங்கும்
பயன் தருவ ப·றருவும் வல்லிகளும் மல்கித் தயங்கு புனலும் தெளிவ தண்மையுடன் நண்ணும் வயங்கு ஒளி விசும்பு மலினம் கழியும் மாறா நயம் புரிவ புள் ஒலிகள் நல்ல திசை எல்லாம்
அம்கண் விழவில் பெருகு சண்பை அகல் மூதூர்ச் சங்கம் படகம் கருவி தாரை முதலான எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும் மங்கல முழக்கு ஒலி மலிந்த மறுகு எல்லாம்
இரும் புவனம் இத்தகைமை எய்த அவர் தம்மைத் தரும் குல மறைத் தலைவர் தம் பவன முன்றில் பெரும் களி வியப்பொடு பிரான் அருளினாலே அரும் திரு மகப் பெற அணைந்த அணி செய்வார்
காதல் புரி சிந்தை மகிழக் களி சிறப்பார் மீது அணியும் நெய் அணி விழாவொடு திளைப்பார் சூத நிகழ் மங்கல வினைத் துழனி பொங்கச் சாதக முறைப் பல சடங்கு வினை செய்வார்
மா மறை விழுக்குல மடந்தையர்கள் தமில் தாம் உறு மகிழ்ச்சியோடு சாயல் மயில் என்னத் தூ மணி விளக்கொடு சுடர்க் குழைகள் மின்னக் காமர் திரு மாளிகை கவின் பொலிவு செய்வார்
சுண்ணமொடு தண் மலர் துதைந்த துகள் வீசி உண்ணிறைந்த விருப்பின் உடன் ஓகை உரை செய்வார் வெண் முளைய பாலிகைகள் வேதி தொறும் வைப்பார் புண்ணிய நறும் புனல் கொள் பொன் குடம் நிரைப்பார்
செம் பொன் முதலான பல தான வினை செய்வார் நம்பர் அடியார் அமுது செய்ய நலம் உய்ப்பார் வம்பலர் நறும் தொடையல் வண்டொடு தொடுப்பர் நிம்பம் முதலான கடி நீடு வினை செய்வார்
ஐயவி உடன் பல அமைத்த புகையாலும் நெய் அகில் நறுங்குறை நிறைத்த புகையாலும் வெய்ய தழல் ஆகுதி விழுப் புகையினாலும் தெய்வ மணம் நாறவரு செய் தொழில் விளைப்பார்
ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர் நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்த தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின் மேய விதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்
நாம கரணத்து அழகு நாள் பெற நிறுத்திச் சேம உதயப் பரிதியில் திகழ் பிரானைத் தாமரை மிசைத் தனி முதல் குழவி என்னத் தூ மணி நிரைத்து அணி செய் தொட்டில் அமர்வித்தார்
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் அரு மறை குழைத்த அமுது செய்து அருளுவாரைத் தருமிறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே திருமுலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்
ஆறுலவு செய்ய சடை ஐயர் அருளாலே பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு வேறு பல காப்பு மிகை என்று அவை விரும்பார் நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்
தாயர் திரு மடித்தலத்தும் தயங்கு மணித் தவிசினிலும் தூய சுடர்த் தொட்டிலினும் தூங்கு மலர்ச் சயனத்தும் சேய பொருள் திருமறையும் தீம் தமிழும் சிறக்க வரு நாயகனைத் தாலாட்டும் நலம் பல பாராட்டினார்
வரும் முறைமைப் பருவத்தில் வளர் புகலிப் பிள்ளையார் அரு மறைகள் தலை எடுப்ப ஆண்ட திருமுடி எடுத்துப் பெரு மழுவர் தொண்டு அல்லால் பிரிது இசையோம் என்பார் போல் திருமுக மண்டலம் அசையச் செங்கீரை ஆடினார்
நாம் அறியோம் பர சமயம் உலகிர் எதிர் நாடாது போம் அகல என்று அங்கை தட்டுவதும் புனிதன் பால் காமரு தாளம் பெறுதற்கு ஒத்துவதும் காட்டுவ போல் தாமரைச் செங்கை களினால் சப்பாணி கொட்டினார்
விதி தவறுபடும் வேற்றுச் சமயங்கள் இடை விழுந்து கதி தவழ இரு விசும்பு நிறைந்த கடிவார் கங்கை நதி தவழும் சடை முடியார் ஞானம் அளித்திட உரியார் மதி தவழ் மாளிகை முன்றின் மருங்கு தவழ்ந்து அருளினார்
சூழ வரும் பெருஞ்சுற்றத்துத் தோகையரும் தாதியரும் காழியர் தம் சீர் ஆட்டே கவுணியர் கற்பகமே என்று ஏழ் இசையும் எவ் உலகும் தனித் தனியே வாழ வரும் அவர் தம்மை வருக வருக என அழைப்ப
திரு நகையால் அழைத்து அவர் தம் செழு முகங்கள் மலர்வித்தும் வருமகிழ்வு தலை சிறப்ப மற்றவர் மேல் செலவுகைத்தும் உருகி மனம் கரைந்து அலைய உடன் அணைந்து தழுவியும் முன் பெருகிய இன்புற அளித்தார் பெரும் புகலிப் பிள்ளையார்
வளர் பருவ முறை ஆண்டு வருவதன் முன் மலர் வரிவண்டு உளர் கரு மென் சுருள் குஞ்சியுடன் அலையச் செந்நின்று கிளர் ஒலி கிண்கிணி எடுப்பக் கீழ்மை நெறிச் சமயங்கள் தளர் நடை இட்டு அறத் தாமும் தளர் நடை இட்டு அருளினார்
தாதியர் தங்கைப் பற்றித் தளர் நடையின் அசைவு ஒழிந்து சோதி அணி மணிச் சதங்கை தொடுத்த வடம் புடை சூழ்ந்த பாத மலர் நிலம் பொருந்தப் பருவ முறை ஆண்டு ஒன்றின் மீது அணைய நடந்து அருளி விளையாடத் தொடங்கினார்
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை நறு நுதல் பேதையார் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்
மங்கையோடு உடன் ஆகி வளர் தோணி வீற்று இருந்த திங்கள் சேர் சடையார் தம் திரு அருட்குச் செய் தவத்தின் அங்குரம் போல் வளர்ந்து அருளி அரு மறையோடு உலகு உய்ய எங்கள் பிரான் ஈர் ஆண்டின் மேல் ஓர் ஆண்டு எய்து தலும்
நாவாண்ட பல கலையும் நா மகளும் நலம் சிறப்பப் பூவாண்ட திருமகளும் புண்ணியமும் பொலிவு எய்த சேவாண்ட கொடியவர் தம் சிரபுரத்துச் சிறுவருக்கு மூவாண்டில் உலகு உய்ய நிகழ்ந்தது அதனை மொழிகின்றேன்
பண்டு திருவடி மறவாப் பான்மையோர் தமைப் பரமர் மண்டு தவ மறைக் குலத்தோர் வழிபாட்டின் அளித்து அருளத் தொண்டின் நிலை தர வருவார் தொடர்ந்த பிரிவு உணர்வு ஒருகால் கொண்டு எழலும் வெருக் கொண்டாற் போல் அழுவார் குறிப்பு அயலாய்
மேதகைய இந் நாளில் வேறு ஒரு நாள் வேத விதி நீதி முறைச் சடங்கு நெறி முடிப்பதற்கு நீர் ஆடத் தாதையார் போம் பொழுது தம் பெருமான் அருள் கூடச் சோதி மணி மனை முன்றில் தொடர்ந்து அழுது பின் சென்றார்
பின் சென்ற பிள்ளையார் தமை நோக்கிப் பெருந்தவத்தோர் முன்செல்கை தனை ஒழிந்து முனிவார் போல் விலக்குதலும் மின் செய் பொலங் கிண் கிணிக் கால் கொட்டி அவர் மீளாமை உன் செய்கை இது ஆகில் போ என்று அங்கு உடன் சென்றார்
கடை உகத்தில் தனி வெள்ளம் பல விரிக்கும் கருப்பம் போல் இடை அறாப் பெரும் தீர்த்தம் எவற்றினுக்கும் பிறப்பு இடமாய் விடை உயர்த்தார் திருத் தோணிப் பற்று விடா மேன்மை அதாம் தடம் அதனில் துறை அணைந்தார் தருமத்தின் தலை நின்றார்
பிள்ளையார்தமைக் கரையில் வைத்துத் தாம் பிரிவு அஞ்சித் தெள்ளு நீர்ப் புக மாட்டார் தேவியொடும் திருத்தோணி வள்ளலார் இருந்தாரை எதிர் வணங்கி மணி வாவி உள்ளிழிந்து புனல் புக்கார் உலகு உய்ய மகப் பெற்றார்
நீர் ஆடித் தருப் பிடித்து நியமங்கள் பல செய்வார் நீர் ஆடும் திரு மகனார் காண்பதன் முன் செய்து அதன்பின் ஆராத விருப்பினால் அகமர் உடம்படிய நீர் பேராது மூழ்கினார் பெரும் காவல் பெற்றாராய்
மறை முனிவர் மூழ்குதலும் மற்றவர் தம்மைக் காணாது இறை தெரியார் எனும் நிலைமை தலைக்கு ஈடா ஈசர் கழல் முறை புரிந்த முன் உணர்வு மூள அழத் தொடங்கினார் நிறை புனல் வாவிக் கரையில் நின்று அருளும் பிள்ளையார்
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அமுது அருளினார்
மெய்ம் மேல் கண் துளி பனிப்ப வேறு எங்கும் பார்த்து அழுவார் தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளை மைதானோ செம் மேனி வெண் நீற்றார் திருத் தோணி சிகரம் பார்த்து அம்மே அப்பா என்று என்று அழைத்து அருளி அழுது அருள
அந்நிலையில் திருத்தோணி வீற்று இருந்தார் அருள் நோக்கால் முன் நிலைமைத் திருத் தொண்டு முன்னி அவர்க்கு அருள் புரிவான் பொன் மலை வல்லியும் தாமும் பொருவிடை மேல் எழுந்து அருளிச் சென்னி இளம் பிறை திகழச் செழும் பொய்கை மருங்கு அணைந்தார்
திரு மறைநூல் வேதியர்க்கும் தேவியர்க்கும் தாம் கொடுத்த பெருகு வரம் நினைந்தோ தான் தம் பெருமை கழல் பேணும் ஒரு நெறியில் வரு ஞானம் கொடுப்ப அதனுக்கு உடன் இருந்த அரு மறையாள் உடையவளை அளித்து அருள அருள் செய்வார்
அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருள் கருணை எழுகின்ற திரு உள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும் தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித் துணை முலைகள் பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டு என்ன
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவான சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி
எண்ணரிய சிவஞானத்தின் இன் அமுதம் குழைத்து அருளி உண் அடிசில் என ஊட்ட உமை அம்மை எதிர் நோக்கும் கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொன் கிண்ணம் அளித்து அண்ணலை அங்கு அழுகை தீர்த்த அங்கணனார் அருள் புரிந்தார்
யாவர்க்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார் ஆவதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில தேவருக்கும் முனிவர்க்கும் தெரிஅரிய பொருளாகும் தாவில் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்
சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமை இலாக் கலை ஞானம் உணர்வு அரிய மெய்ஞ் ஞானம் தவ முதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்
எப்பொருளும் ஆக்குவான் ஈசனே எனும் உணர்வும் அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் எனும் அறிவும் இப்படியால் இது அன்றித் தம் இசைவு கொண்டு இயலும் துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்து எழுந்தார்
சீர் மறையோர் சிவபாத இருதயரும் சிறு பொழுதில் நீர் மருவித் தாம் செய்யும் நியமங்கள் முடித்து ஏறி பேர் உணர்வில் பொலிகின்ற பிள்ளையார்தமை நோக்கி யார் அளித்த பால் அடிசில் உண்டது நீ என வெகுளா
எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டு என்று கைச் சிறியது ஒருமாறு கொண்டோச்சக் கால் எடுத்தே அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண் துளி பெய்து உச்சியினில் எடுத்து அருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி
விண் நிறைந்த பெருகு ஒளியால் விளங்கு மழ விடைமேல் பண் நிறைந்த அருமறைகள் பணிந்து ஏத்தப் பாவை உடன் எண் நிறைந்த கருணையினால் நின்றாரை எதிர் காட்டி உள் நிறைந்து பொழிந்து எழுந்த உயர் ஞானத் திருமொழியால்
எல்லை இலா மறை முதல் மெய்யுடன் எடுத்த எழுது மறை மல்லல் நெடும் தமிழால் இம் மா நிலத்தோர்க்கு உரை சிறப்ப பல் உயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால் செல்லு முறை பெறுவதற்குத் திருசெவியைச் சிறப்பித்து
செம்மை பெற எடுத்த திருத் தோடுடைய செவியன் எனும் மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார் தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு எம்மை இது செய்த பிரான் இவன் அன்றே என இசைத்தார்
மண் உலகில் வாழ்வார்கள் பிழைத்தாலும் வந்தடையின் கண் நுதலான் பெரும் கருணை கைக் கொள்ளும் எனக்காட்ட எண்ணம் இலா வல் அரக்கன் எடுத்து முறிந்து இசைபாட அண்ணல் அவற்கு அருள் புரிந்த ஆக்கப்பாடு அருள் செய்தார்
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத் தொழார் வழுவான மனத்தாலே மாலாய மால் அயனும் இழிவாகும் கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்து உய்ந்த படி விரித்தார்
வேத காரணராய வெண் பிறை சேர் செய்ய சடை நாதன் நெறி அறிந்து உய்யார் தம்மிலே நலம் கொள்ளும் போதம் இலாச் சமண் கையர் புத்தர் வழியாக்கும் ஏதமே என மொழிந்தார் எங்கள் பிரான் சம்பந்தர்
திருப்பதிகம் நிறைவித்துத் திருக்கடைக் காப்புச் சாத்தி இருக்கு மொழிப் பிள்ளையார் எதிர் தொழுது நின்று அருள அருள் கருணைத் திருவாளனார் அருள் கண்டு அமரர் எலாம் பெருக்க விசும்பினில் ஆர்த்துப் பிரசமலர் மழை பொழிந்தார்
வந்து எழும் மங்கலமான வான் அகத் துந்துபி முழக்கும் கந்தருவர் கின்னரர்கள் கான ஒலிக் கடல் முழக்கும் இந்திரனே முதல் தேவர் எடுத்து ஏத்தும் இசைமுழக்கும் அந்தம் இல் பல் கண நாதர் அர எனும் ஓசையின் அடங்க
மறைகள் கிளர்ந்து ஒலி வளர முழங்கிட வானோர் தம் நிறை முடி உந்திய நிரை மணி சிந்திட நீள் வானத்து உறை என வந்து உலகு அடைய நிறைந்திட ஓவாமெய்ப் பொறை பெருகும் தவமுனிவர் எனும் கடல் புடை சூழ
அணைவுற வந்து எழும் அறிவு தொடங்கின அடியார் பால் இணை இல் பவம் கிளர் கடல்கள் இகந்திட இரு தாளின் புணை அருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் பாகத்து துணையொடு அணைந்தனர் சுருதி தொடர்ந்த பெரும் தோணி
அண்ணல் அணைந்தமை கண்டு தொடர்ந்து எழும் அன்பாலே மண்மிசை நின்ற மறைச் சிறு போதகம் அன்னாரும் கண் வழி சென்ற கருத்து விடாது கலந்து ஏகப் புண்ணியர் நண்ணிய பூமலி கோயிலின் உள் புக்கார்
ஈறில் பெரும் தவம் முன் செய்து தாதை எனப் பெற்றார் மாறு விழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்து ஆடி வேறு விளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் கூறும் அரும் தமிழின் பொருளான குறிப் போவார்
தாணுவினைத் தனிகண்டு தொடர்ந்தவர் தம்மைப் போல் காணுதல் பெற்றிலரேனும் நிகழ்ந்தன கண்டு உள்ளார் தோணி புரத்திறை தன் அருள் ஆதல் துணிந்து ஆர்வம் பேணும் மனத்தொடு முன்புகு காதலர் பின் சென்றார்
அப்பொழுது அங்கண் அணைந்தது கண்டவர் அல்லாதார் முப்புரிநூல் மறையோர்கள் உரோமம் முகிழ்ப்பு எய்தி இப்படி ஒப்பதோர் அற்புதம் எங்கு உளது என்று என்றே துப்பு உறழ் வேணியர் கோயிலின் வாயில் புறம் சூழ
பொங்கு ஒளி மால் விடை மீது புகுந்து அணி பொன் தோணி தங்கி இருந்த பெரும் திரு வாழ்வு தலைப்பட்டே இங்கு எனை ஆளும் உடையான் உமையோடும் இருந்தான் என்று அங்கு எதிர் நின்று புகன்றனர் ஞானத்து அமுது உண்டார்
இன் இசை ஏழும் இசைந்த செழும் தமிழ் ஈசற்கே சொன்முறை பாடும் தொழும்பர் அருள் பெற்ற தொடக்கோடும் பல் மறை வேதியர் காண விருப்பொடு பால் நாறும் பொன்மணி வாயினர் கோயிலின் நின்று புறப்பட்டார்
பேணிய அற்புத நீடு அருள் பெற்ற பிரான் முன்னே நீண் நிலையில் திகழ் கோபுர வாயிலின் நேர் எய்தி வாண் நிலவில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வு எய்தும் தோணி புரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்
காழியர் தவமே கவுணியர் தனமே கலை ஞானத்து ஆழிய கடலே அதன் இடை அமுதே அடியார் முன் வாழிய வந்து இம்மண் மிசை வானோர் தனி நாதன் ஏழ் இசை மொழியாள் தன் திரு அருள் பெற்று அனை என்பார்
மறை வளர் திருவே வைதிக நிலையே வளர் ஞானப் பொறை அணி முகிலே புகலியர் புகலே பொருபொன்னித் துறை பெறு மணியே சுருதியின் ஒளியே வெளியே வந்து இறையவன் உமையாள் உடன் அருள் தர எய்தினை என்பார்
புண்ணிய முதலே புனை மணி அரை ஞாணொடு போதும் கண் நிறை கதிரே கலை வளர் மதியே கவின் மேவும் பண் இயல் கதியே பருவமது ஒரு மூவருடத்தே எண்ணிய பொருளாய் நின்றவர் அருள் பெற்றனை என்பார்
என்று இனைய பல கூறி இருக்கு மொழி அந்தணரும் ஏனையோரும் நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி நிரந்த போது சென்று அணைந்த தாதையர் சிவபாத இருதயர் தாம் தெய்வ ஞானக் கன்றினை முன் புக்கு எடுத்துப் பியலின் மேல் கொண்டு களி கூர்ந்து செல்ல
மா மறையோர் குழத்தின் உடன் மல்கு திருத் தொண்டர் குழாம் மருங்கு சூழ்ந்து தாம் அறுவை உத்தரியம் தனி விசும்பில் எறிந்து ஆர்க்கும் தன்மையாலே பூ மறுகு சிவானந்தப் பெருக்காறு போத அதன் மீது பொங்கும் காமர் நுரைக் குமிழி எழுந்து இழிவன போல் விளங்கும் பெரும் காட்சித்தாக
நீடு திருக் கழுமலத்து நிலத்தேவர் மாளிகை மேல் நெருங்கி அங்கண் மாடு நிறை மடவார்கள் மங்கலமாம் மொழிகளால் வாழ்த்தி வாசத் தோடு மலி நறுமலரும் சுண்ணமும் வெண் பொரியினொடும் தூவிநிற்பர் கோடு பயில் குல வரை மேல் மின் குலங்கள் புடை பெயரும் கொள்கைத்தாக
மங்கல தூர் இயந்து வைப்பர் மறைச் சாமம் பாடுவார் மருங்கு வேதிப் பொங்கு மணி விளக்கு எடுத்து பூரண கும்பமும் நிரைப்பார் போற்றி செய்வார் அங்கு அவர்கள் மனத்து எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பொங்கத் தங்கு திரு மலி வீதிச் சண்பை நகர் வலம் செய்து சாரும் காலை
தம் திரு மாளிகையின் கண் எழுந்து அருளிப் புகும் பொழுது சங்க நாதம் அந்தர துந்துபி முதலா அளவில் பெருகு ஒலி தழைப்ப அணைந்து புக்கார் சுந்தரப் பொன் தோணி மிசை இருந்த பிரானுடன் அமர்ந்த துணைவி ஆகும் பைந்தொடியாள் திரு முலையின் பால் அறா மதுர மொழிப் பவள வாயார்
தூ மணி மாளிகையின் கண் அமர்ந்து அருளி அன்று இரவு தொல்லை நாத மா மறைகள் திரண்ட பெரும் திருத் தோணி மன்னி வீற்று இருந்தார் செய்ய கா மரு சேவடிக் கமலம் கருத்திலுற இடையறாக் காதல் கொண்டு நாம நெடும் கதிர் உதிப்ப நண்ணினார் திருத் தோணி நம்பர் கோயில்
காதல் உடன் அணைந்து திருக் கழுமலத்துக் கலந்து வீற்று இருந்த தங்கள் தாதை யாரையும் வெளியே தாங்க அரிய மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து போதம் முலை சுரந்து அளித்த புண்ணியத் தாயாரையும் முன் வணங்கிப் போற்றி மே தகைய அருள் பெற்றுத் திருக்கோலக் கா இறைஞ்ச விருப்பில் சென்றார்
பெருக் கோல் இட்டு அலை பிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த வரிக் கோல வண்டு ஆட மாதரார் குடைந்து ஆடும் மணி நீர் வாவி திருக் கோலக்கா எய்திதித் தேவர்பிரான் கோயில் வலம் செய்து முன் நின்று இருக்கோல் இட்டு அறிவு அரிய திருப்பாதம் ஏத்துவதற்கு எடுத்துக் கொள்வார்
மெய்ந் நிறைந்த செம் பொருளாம் வேதத்தின் விழுப் பொருளை வேணி மீது பைந் நிறைந்த அரவுடனே பசுங்குழவித் திங்கள் பரித்து அருளுவானை மைந் நிறைந்த மிடற்றானை மடையில் வாளைகள் பாய என்னும் வாக்கால் கைந் நிறைந்த ஒத்து அறுத்துக் கலைப் பதிகம் கவுணியர் கோன் பாடும் காலை
கை அதனால் ஒத்து அறுத்துப் பாடுதலும் கண்டு அருளி கருணை கூர்ந்த செய்ய சடை வானவர் தம் அஞ்செழுத்தும் எழுதிய நல் செம்பொன் தாளம் ஐயர் அவர் திரு அருளால் எடுத்த பாடலுக்கு இசைந்த அளவால் ஒத்த வையம் எல்லாம் உய்ய வரு மறைச் சிறுவர் கைத் தலத்து வந்தது அன்றே
காழி வரும் பெரும் தகையார் கையில் வரும் திருத் தாளக் கருவி கண்டு வாழிய தம் திருமுடி மேல் கொண்டு அருளி மனம் களிப்ப மதுர வாயில் ஏழ் இசையும் தழைத்து ஓங்க இன்னிசை வண் தமிழ்ப் பதிகம் எய்தப் பாடித் தாழும் மணிக் குழையார் முன் தக்க திருக் கடைக் காப்புச் சாத்தி நின்றார்
உம்பர் உலகம் அதிசயிப்ப ஓங்கிய நாதத்து அளவின் உண்மை நோக்கித் தும்புரு நாரதர் முதலாம் சுருதி இசைத் துறை உள்ளோர் துதித்து மண் மேல் வம்பு அலர் மா மழை பொழிந்தார் மறை வாழ வந்து அருளும் மதலையாரும் தம் பெருமான் அருள் போற்றி மீண்டு அருளிச் சண்பை நகர் சாரச் செல்வார்
செங்கமல மலர்க் கரத்துத் திருத் தாளத்துடன் நடந்து செல்லும் போது தங்கள் குலத் தாதையார் தரியாது தோளின் மேல் தரித்துக் கொள்ள அங்கு அவர் தம் தோளின் மிசை எழுந்து அருளி அணைந்தார் சூழ்ந்து அமரர் ஏத்தும் திங்கள் அணிமணி மாடத் திருத் தோணி புரத் தோணிச் சிகரக் கோயில்
திருப் பெருகு பெரும் கோயில் சூழ வலம் கொண்டு அருளித் திருமுன் நின்றே அருள் பெருகு திருப்பதிகம் எட்டு ஒரு கட்டளை ஆக்கி அவற்றுள் ஒன்று விருப்புறு பொன் திருத்தோணி வீற்று இருந்தார் தமைப் பாட மேவும் காதல் பொருத்தமுற அருள் பெற்றுப் போற்றி எடுத்து அருளினார் பூவார் கொன்றை
எடுத்த திருப் பதிகத்தின் இசை திருத் தாளத்தினால் இசைய ஒத்தி அடுத்த நடை பெறப் பாடி ஆர்வமுற வணங்கிப் போந்து அலைநீர்ப் பொன்னி மடுத்த வயல் பூந் தராய் அவர் வாழ மழ விளங் கோலத்துக் காட்சி கொடுத்து அருளி வைகினார் குறைவு இலா நிறை ஞானக் கொண்டலார் தாம்
அந் நிலையில் ஆளுடைய பிள்ளையார் தமை முன்னம் அளித்த தாயார் முன் உதிக்க முயன்ற தவத் திரு நன்னி பள்ளி முதல் மறையோர் எல்லாம் மன்னு பெரு மகிழ்ச்சி உடன் மங்கல தூரியம் துவைப்ப மறைகள் ஓதிக் கன்னி மதில் சண்பை நகர் வந்து அணைந்து கவுணியர் கோன் கழலில் தாழ்ந்தார்
மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண் களிப்ப பெற்ற பெரு வார்த்தையாலே எங்கணும் நீள் பதி மருங்கில் இரு பிறப்பாளரும் அல்லா ஏனையோரும் பொங்கு திருத் தொண்டர்களும் அதிசயித்துக் குழாங் கொண்டு புகலியார் தம் சிங்க இளஏற்றின் பால் வந்து அணைந்து கழல் பணியும் சிறப்பின் மிக்கார்
வந்த திருத் தொண்டர்க்கும் மல்கு செழு மறையவர்க்கும் மற்று உளோர்க்கும் சிந்தை மகிழ்வுற மலர்ந்து திருவமுது முதல் ஆன சிறப்பின் செய்கை தம் தம் அளவினில் விரும்பும் தகைமையினால் கடன் ஆற்றும் சண்பை மூதூர் எந்தை பிரான் சிவலோகம் என விளங்கி எவ் உலகும் ஏத்தும் நாளில்
செழும் தரளப் பொன்னி சூழ் திரு நன்னி பள்ளி உள்ளோர் தொழுது திங்கள் கொழுந்து அணியும் சடையாரை எங்கள் பதியினில் கும்பிட்டு அருள அங்கே எழுந்து அருள வேண்டும் என இசைந்து அருளித் தோணி வீற்று இருந்தார் பாதம் தொழும் தகைமையால் இறைஞ்சி அருள் பெற்றுப் பிறபதியும் தொழமுன் செல்வார்
தாது அவிழ் செந்தாமரையின் அக இதழ் போல் சீர் அடிகள் தரையின் மீது போதுவதும் பிறர் ஒருவர் பொறுப்பதுவும் பொறா அன்பு புரிந்த சிந்தை மாதவம் செய் தாதையார் வந்து எடுத்துத் தோளின்மேல் வைத்துக் கொள்ள நாதர் கழல் தம் முடிமேல் கொண்ட கருத்து உடன் போந்தார் ஞானம் உண்டார்
தேன் அலரும் கொண்றையினார் திரு நன்னி பள்ளியினைச் சாரச் செல்வார் வான் அணையும் மலர்ச் சோலை தோன்றுவது எப் பதி என்ன மகிழ்ச்சி எய்திப் பானல் வயல் திரு நன்னி பள்ளி எனத் தாதையர் பணிப்பக் கேட்டு ஞான போனகர் தொழுது நல் தமிழ்ச் சொல் தொடை மாலை நவிலல் உற்றார்
காரைகள் கூகை முல்லை என நிகழ் கலை சேர் வாய்மைச் சீர் இயல் பதிகம் பாடித் திருக் கடைக் காப்புத்தன்னில் நாரியோர் பாகம் வைகும் நனி பள்ளி உள்குவார் தம் பேர் இடர் கெடுதற்கு ஆணை நமது எனும் பெருமை வைத்தார்
ஆதியார் கோயில் வாயில் அணைந்து புக்கு அன்பு கூர நீதியால் பணிந்து போற்றி நீடிய அருள் முன் பெற்றுப் போதுவார் தம்மைச் சூழ்ந்து பூசுரர் குழாங்கள் போற்றும் காதல் கண்டு அங்கு அமர்ந்தார் கவுணியர் தலைவனார் தாம்
அம்பிகை அளித்த ஞானம் அகிலமும் உய்ய உண்ட நம் பெரும் தகையார் தம்மை எதிர் கொண்டு நண்ண வேண்டி உம்பரும் வணங்கும் மெய்ம்மை உயர் தவத் தொண்டரோடு தம் பெரும் விருப்பால் வந்தார் தலைசை அந்தணர்கள் எல்லாம்
காவணம் எங்கும் இட்டுக் கமுகொடு கதலி நாட்டி பூவணை தாமம் தூக்கிப் பூரண கும்பம் ஏந்தி ஆவண வீதி எல்லாம் அலங்கரித்து அண்ணலாரை மா அணை மலர் மென் சோலை வளம் பதி கொண்டு புக்கார்
திரு மறையோர்கள் சூழ்ந்து சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப் பெரு மறை ஓசை மல்கப் பெரும் திருக் கோயில் எய்தி அரு மறைப் பொருள் ஆனாரைப் பணிந்து அணிநல் சங்கத்தின் தரு முறை நெறி அக் கோயில் சார்ந்தமை அருளிச் செய்தார்
கறை அணி கண்டர் கோயில் காதலால் பணிந்து பாடி போந்து மறையவர் போற்ற வந்து திரு வலம் புரத்து மன்னும் இறைவரைத் தொழுது பாடும் கொடியுடை ஏந்தி நிறைபுனல் திருச் சாய்க்காடு தொழுதற்கு நினைந்து செல்வார்
பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடி பொன்னி சூழ் புகாரில் நீடு புனிர்தம் திருச்சாய்க் காட்டு மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்
. வான் அளவு உயர்ந்த வாயில் உள் வலம் கொண்டு புக்குத் தேன் அலர் கொன்றையார் தம் திருமுன்பு சென்று தாழ்ந்து மானிடம் தரித்தார் தம்மைப் போற்றுவார் மண்புகார் என்று ஊன் எலாம் உருக ஏத்தி உச்சி மேல் குவித்தார் செங்கை
சீரினில் திகழ்ந்த பாட்டில் திருக் கடைக் காப்புப் போற்றிப் பாரினில் பொலிந்த தொண்டர் போற்றிடப் பயில்வார் பின்னும் ஏர் இசைப் பதிகம் பாடி ஏத்திப் போந்து இறைவர் வெண்காடு ஆரு மெய்க் காதலோடும் பணிவதற்கு அணைந்தார் அன்றே
பொன்னிதழ்க் கொன்றை வன்னி புனல் இள மதியம் நீடு சென்னியர் திருவெண் காட்டுத் திருத் தொண்டர் எதிரே சென்று இன்ன தன்மையர்கள் ஆனார் என ஒணா மகிழ்ச்சி பொங்க மன்னுசீர் சண்பை ஆளும் மன்னரைக் கொண்டு புக்கார்
முத்தமிழ் விரகர் தாமும் முதல்வர் கோபுரத்து முன்னர்ச் சித்த நீடு உவகை யோடும் சென்று தாழ்ந்து எழுந்து புக்குப் பத்தராம் அடியார் சூழப் பரமர் கோயிலைச் சூழ் வந்து நித்தனார் தம் முன்பு எய்தி நிலம் உறத் தொழுது வீழ்ந்தார்
மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச் செப்பரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி ஒப்பரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்
அருமையால் புறம்பு போந்து வணங்கி அங்கு அமரும் நாளில் திருமுல்லை வாயில் எய்திச் செந்தமிழ் மாலை சாத்தி மருவிய பதிகள் மற்றும் வணங்குவார் மறையோர் ஏத்தத் தருமலி புகலி வந்து ஞானசம்பர் சார்ந்தார்
தோணி வீற்று இருந்தார் தம்மைத் தொழுது முன் நின்று தூய ஆணியாம் பதிகம் பாடி அருள் பெரு வாழ்வு கூரச் சேண் உயர் மாடம் ஓங்கும் திருப்பதி அதனில் செய்ய வேணியார் தம்மை நாளும் போற்றிய விருப்பின் மிக்கார்
வைகும் அந்நாளில் கீழ் பால் மயேந்திரப் பள்ளி வாசம் செய் பொழில் குருகா வூரும் திருமுல்லை வாயில் உள்ளிட்டு எய்திய பதிகள் எல்லாம் இன்புற இறைஞ்சி ஏத்தித் தையலாள் பாகர் தம்மைப் பாடினார் தமிழ்ச் சொல் மாலை
அவ்வகை மருங்கு சூழ்ந்த பதிகளில் அரனார் பொன் தாள் மெய் வகை ஞானம் உண்ட வேதியர் விரவிப் போற்றி உய் வகை மண் உளோருக்கு உதவிய பதிகம் பாடி எவ்வகையோரும் ஏத்த இறைவரை ஏத்தும் நாளில்
திரு நீல கண்டத்துப் பெரும் பாணர் தெள் அமுதின் வருநீர்மை இசைப்பாட்டு மதங்க சூளா மணியார் ஒரு நீர்மையுடன் உடைய பிள்ளையார் கழல் வணங்கத் தரு நீர்மை யாழ் கொண்டு சண்பையிலே வந்து அணைந்தார்
பெரும் பாணர் வரவு அறிந்து பிள்ளையார் எதிர் கொள்ளச் சுரும்பு ஆர் கமல மலர்த் துணைப் பாதம் தொழுது எழுந்து விரும்பு ஆர்வத்தோடும் ஏத்தி மெய்ம் மொழிகளால் துதித்து வரும் பான்மை தரு வாழ்வு வந்து எய்த மகிழ் சிறந்தார்
அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயா நீர் உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே இள நிலா நகை முகிழ்ப்ப இசைத்த அவரை உடன் கொண்டு கள நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்
கோயிலினில் புற முன்றில் கொடு புக்குக் கும்பிடுவித்து ஏயும் இசை யாழ் உங்கள் இறைவருக்கு இங்கு இயற்றும் என ஆய புகழ்ப் பிள்ளையார் அருள் பெற்ற அதற்கு இறைஞ்சி மேய தொடைத் தந்திரி யாழ் வீக்கி இசை விரிக்கின்றார்
தான நிலைக் கோல் வடித்துப் படி முறைமைத் தகுதியினால் ஆன இசை ஆராய்வுற்று அங்கணர் பாணியினை மான முறைப் பாடினியார் உடன் பாடி வாசிக்க ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்
யாழில் எழும் ஓசையுடன் இருவர் மிடற்று இசை ஒன்றி வாழி திருத் தோணி உளார் மருங்கு அணையும் மாட்சியினைத் தாழும் இரு சிறைப் பறவை படிந்த தனி விசும்பு இடை நின்று ஏழ் இசை நூல் கந்தருவர் விஞ்சையரும் எடுத்து இசைத்தார்
எண்ணரும் சீர் திருத்தோணி எம் பெருமான் கழல் பரவிப் பண் அமையாழ் இசை கூடப்பெரும் பாணர் பாடிய பின் கண் நுதலார் அருளினால் காழியர் கோன் கொடு போந்து நண்ணி உறை இடம் சமைத்து நல் விருந்து சிறந்து அளிப்ப
பிள்ளையார் அருள் பெற்ற பெரும்பாணர் பிறை அணிந்த வெள்ள நீர்ச் சடையாரை அவர் மொழிந்த மெய்ப் பதிகம் உள்ளபடி கேட்டலுமே உருகு பெரு மகிழ்ச்சியராய்த் தெள் அமிர்தம் அருந்தினர் போல் சிந்தை களிப்பு உறத் தொழுதார்
காழியர் தவப்பயனாம் கவுணியர் தம் தோன்றலார் ஆழி விடம் உண்டவர் தம் அடி போற்றும் பதிக இசை யாழின் முறைமையின் இட்டே எவ் உயிரும் மகிழ்வித்தார் ஏழ் இசையும் பணி கொண்ட நீல கண்ட யாழ்ப்பாணர்
சிறிய மறைக் களிறு அளித்த திருப்பதிக இசை யாழின் நெறியில் இடும் பெரும் பாணர் பின்னும் நீர் அருள் செய்யும் அறிவரிய திருப்பதிக இசை யாழில் இட்டு அடியேன் பிறிவு இன்றிச் சேவிக்கப் பெற வேண்டும் எனத் தொழுதார்
மற்றதற்குப் பிள்ளையார் மனம் மகிழ்வுற்று இசைந்து அருள பெற்றவர் தாம் தம்பிரான் அருள் இதுவே எனப் பேணிச் சொல் தமிழ் மாலையின் இசைகள் சுருதி யாழ் முறை தொடுத்தே அற்றை நாள் போல் என்றும் அகலா நண்பு உடன் அமர்ந்தார்
சிரபுரத்தில் அமர்ந்து அருளும் திருஞான சம்பந்தர் பரவு திருத் தில்லை நடம் பயில்வாரைப் பணிந்து ஏத்த விரவி எழும் பெரும் காதல் வெள்ளத்தை உள்ளத்தில் தர இசையும் குறிப்பு அறியத் தவ முனிவர்க்கு அருள் செய்தார்
பிள்ளையார் அருள் செய்யப் பெரும் தவத்தால் பெற்று எடுத்த வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம் களிப்ப வெள்ளி மால் வரை என்னத் திருத் தோணி வீற்று இருந்த புள்ளி மான் உரியாரைத் தொழுது அருளால் புறப்பட்டார்
தாழ்வில் யாழ்ப் பாணரொடும் தாதையார் தம்மோடும் மேவிய சீர் அடியார்கன் புடை வர வெம் குரு வேந்தர் பூவின் மேல் அயன் போற்றும் புகலியினைக் கடந்து போய்த் தேவர்கள் தம் பெரும் தேவர் திருத் தில்லை வழிச் செல்வார்
நள்ளிருட்கண் நின்று ஆடுவார் உறை பதி நடுவு கண்டன போற்றி முள்ளிடைப் புற வெள் இதழ்க் கோதை முகிழ் விரி மணம் சூழப் புள்ளிடைத் தடம் பழனமும் படு கரும்பு உடை கழிந்திடப் போந்து கொள்ளிடத் திரு நதிக்கரை அணைந்தார் கவுணியர் குல தீபர்
வண்டிரைத்து எழு செழு மலர்ப் பிறங்கலும் மணியும் ஆரமும் உந்தித் தண் தலைப் பல வளத்தொடும் வருபுனல் தாழ்ந்து சேவடித்தாழ தெண் திரைக் கடல் பவழமும் பணிலமும் செழு மணித் திரள் முத்தும் கொண்டிரட்டி வந்தோதமங்கெதிர் கொளக் கொள்ளிடம் கடந்து ஏறி
பல்கு தொண்டர் தம் குழாத் தொடும் உடன் வரும் பயில் மறையவர் சூழச் செல் கதிப் பயன் காண்பவர் போல் களி சிந்தை கூர் தரக் கண்டு மல்கு தேவரே முதல் அணைத்து உயிர்களும் வணங்க வேண்டின எல்லாம் நல்கு தில்லை சூழ் திரு எல்லை பணிந்தனர் ஞான ஆரமுது உண்டார்
செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கி இத் திருந்து உலகினிற்கு எல்லாம் மங்கலம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கு எங்கும் தங்கு புள்ளொலி வாழ்த்து உரை எடுத்து முன் தாமரை மது வாசப் பொங்கு செம்முகை கரம் குவித்து அலர் முகம் காட்டின புனல் பொய்கை
கலவ மென் மயில் இனம் களித்து தழைத்திடக் கடி மணக் குளிர் கால் வந்து உலவி முன் பணிந்து எதிர் கொளக் கிளர்ந்து எழுந்து உடன் வரும் சுரும்பு ஆர்ப்ப இலகு செந்தளிர் ஒளி நிறம் திகழ் தர இரு குழை புடை ஆட மலர் முகம் பொலிந்து அசைய மென் கொம்பர் நின்று ஆடுவ மலர்ச் சோலை
இழைத் தடம் கொங்கை இமய மாமலைக் கொடி இன் அமுது என ஞானம் குழைத்து அளித்திட அமுது செய்து அருளிய குருளையார் வரக் கண்டு மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவித் தழைத்த பொங்கு எழில் முகம் செய்து வணங்கின தடம் பணை வயல் சாலி
ஞாலம் உய்ந்திட ஞானம் உண்டவர் எழுந்து அருளும் அந் நலம் கண்டு சேல் அலம்பும் தண் புனல் தடம் படிந்து அணை சீத மாருதம் வீசச் சாலவும் பல கண் பெறும் பயன் பெறும் தன்மையில் களி கூர்வ போல் அசைந்து இரு புடைமிடைந்து ஆடின புறம்பு அணை நறும் பூகம்
பவம் தவிர்ப்பவர் தில்லை சூழ் எல்லையில் மறையவர் பயில் வேள்விச் சிவம் தரும் பயன் உடைய ஆகுதிகளின் செழும் புகை பரப்பாலே தவம் தழைப்ப வந்து அருளிய பிள்ளையார் தாம் அணைவுற முன்னே நிவந்த நீல நுண் துகில் விதானத்தது போன்றது நெடுவானம்
கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி அரும்பு மென் மலர் தளிர் பல மூலம் என்று அணைத்தின் ஆகரம் ஆன மருங்கில் நந்தன வனம் பணிந்து அணைந்தனர் மாட மாளிகை ஓங்கி நெருங்கு தில்லை சூழ் நெடுமதில் தென் திரு வாயில் நேர் அணித்தாக
பொங்கு கொங்கையில் கறந்த மெய் ஞானமாம் போனகம் பொன் குன்றம் மங்கை செங்கையால் ஊட்ட உண்டு அருளிய மதலையார் வந்தார் என்று அங்கண் வாழ் பெரும் திருத்தில்லை அந்தணர் அன்பர்களுடன் ஈண்டி எங்கும் மங்கல அணிமிக அலங்கரித்து எதிர் கொள அணைவார்கள்
வேத நாதமும் மங்கல முழக்கமும் விசும்பு இடை நிறைந்து ஓங்க சீத வாச நீர் நிறை குடம் தீபங்கள் திசை எலாம் நிறைந்து ஆரச் சோதி மா மணி வாயிலின் புறம் சென்று சோபன ஆக்கமும் சொல்லிக் கோதிலாதவர் ஞானசம்பந்தரை எதிர் கொண்டு புக்கார்
செல்வம் மல்கிய தில்லை மூதூரினில் தென் திசைத் திருவாயில் எல்லை நீங்கி உள் புகும் திருமருங்கு நின்று எடுக்கும் ஏத்து ஒலி சூழ மல்லல் ஆவண மறுகிடைக் கழிந்து போய் மறையவர் நிறை வாழ்க்கைத் தொல்லை மாளிகை நிரைத் திரு வீதியைத் தொழுது அணைந்தனர் தூயோர்
மலர்ந்த பேர் ஒளி குளிர் தரச் சிவமணம் கமழ்ந்து வான் துகள் மாறிச் சிலம்பு அலம்பு சேவடியவர் பயில் உறும் செம்மையால் திருத்தொண்டு கலந்த அன்பர் தம் சிந்தையில் திகழ் திருவீதி கண் களி செய்யப் பலன் கொள் மைந்தனார் எழுநிலைக் கோபுரம் பணிந்து எழுந்தனர் போற்றி
நீடுநீள் நிலைக் கோபுரத்துள் புக்கு நிலவிய திரு முன்றின் மாடு செம் பொனின் மாளிகை வலம் கொண்டு வானுற வளர் திங்கள் சூடுகின்ற பேரம்பலம் தொழுது போந்து அருமறை தொடர்ந்து ஏத்த ஆடுகின்றவர் முன்புற அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்
நந்தி எம்பிரான் முதல் கண நாதர்கள் நலம் கொள்பவன் முறை கூட அந்தம் இல்லவர் அணுகி முன் தொழுதிரு அணுக்கனாம் திருவாயில் சிந்தை ஆர்வமும் பெருகிடச் சென்னியில் சிறிய செங்கை யேற உய்ந்து வாழ் திரு நயனங்கள் களி கொள்ள உருகும் அன்பொடு புக்கார்
அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ் ஞானமே ஆன அம்பல முந்தம் உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும் கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டு எழும் களிப்பொடும் கடல் காழிப் புண்ணியக் கொழுந்து அனையவர் போற்றுவார் புனிதர் ஆடிய பொற்பு
உணர்வின் நேர் பெற வரும் சிவ போகத்தை ஒழிவு இன்றி உருவின் கண் அணையும் ஐம் பொறி அளவினும் எளிவர அருளினை எனப் போற்றி இணை இல் வண் பெருங் கருணையே ஏத்தி முன் எடுத்த சொல் பதிகத்தில் புணரும் இன் இசை பாடினர் ஆடினர் பொழிந்தனர் விழி மாரி
ஊழி முதல்வர்க்கு உரிமைத் தொழில் சிறப்பால் வாழி திருத் தில்லை வாழ் அந்தணரை முன் வைத்தே ஏழ் இசையும் ஓங்க எடுத்தார் எமை ஆளும் காழியர் தம் காவலனார் கற்றாங் கெரியோம்பி
ண்ணார் பதிகத் திருக் கடை காப்புப் பரவி உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருகும் விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக் கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்
முன் மால் அயன் அறியா மூர்த்தியார் முன் நின்று சொல் மாலையால் காலம் எல்லாம் துதித்து இறைஞ்சி பல் மா மறை வெள்ளம் சூழ்ந்து பரவுகின்ற பொன் மாளிகையை வலம் கொண்டு புறம் போந்தார்
செல்வத் திருமுன்றில் தாழ்ந்து எழுந்து தேவர் குழாம் மல்கும் திருவாயில் வந்து இறைஞ்சி மா தவங்கள் நல்கும் திரு வீதி நான்கும் தொழுது அங்கண் அல்கும் திறம் அஞ்சுவார் சண்பை ஆண்டகையார்
செய்ய சடையார் திருவேட்களம் சென்று கை தொழுது சொல் பதிகம் பாடிக் கழுமலக் கோன் வைகி அருளும் இடம் அங்கு ஆக மன்றாடும் ஐயன் திருக் கூத்துக் கும்பிட்டு அணை உறும் நாள்
கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச் செம்மாலை வேணித் திரு உச்சி மேவியுறை அம்மானைக் கும்பிட்டு அரும் தமிழும் பாடினார்
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்கராம் பேறு அதிசயிப்பார்
ஆங்கு அவர் தம் சீலத்து அளவு இன்மையும் நினைந்தே ஓங்கி எழும் காதல் ஒழியாத உள்ளத்தார் தேன் கமழும் சோலைத் திருவேட்களம் கடந்து பூங்கிடங்கு சூழ் புலியூர் புக்கு அணையும் போழ்தின்கண்
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக் கண்ட அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்
செல்வம் பிரிவு அறியாத் தில்லை வாழ் அந்தணரும் எல்லையில் சீர்ச் சண்பை இளவேறு எழுந்து அருளி ஒல்லை இறைஞ்சா முன் தாமும் உடன் இறைஞ்சி மல்லல் அணி வீதி மருங்கு அணைய வந்தார்கள்
பொங்கி எழும் காதல் புலன் ஆகப் பூசுரர் தம் சிங்கம் அனையார் திரு முடியின் மேல் குவித்த பங்கயத்தின் செவ்வி பழித்து வனப்பு ஓங்கும் செங்கையொடும் சென்று திருவாயில் உட்புக்கார்
ஒன்றிய சிந்தை உருக உயர் மேருக் குன்று அனைய பேர் அம்பலம் மருங்கு கும்பிட்டு மன்று உள் நிறைந்து ஆடும் மாணிக்கக் கூத்தர் எதிர் சென்று அணைந்து தாழ்ந்தார் திருக்களிற்றுப் படிக் கீழ்
ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் என்று எடுத்து ஆர்வத்தால் பாடினார் பின்னும் அப்பதிகத்தினில் பரவிய பாட்டு ஒன்றில் நீடு வாழ் தில்லை நான் மறையோர் தமைக் கண்ட அந் நிலை எல்லாம் கூறுமாறு கோத்து அவர் தொழுது ஏத்துச் சிற்றம் பலம் எனக் கூறி
இன்ன தன்மையில் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்பு ஏத்தி மன்னும் ஆனந்த வெள்ளத்தில் திளைத்து எதிர் வந்து முன் நின்று ஆடும் பின்னுவார் சடைக் கூத்தர் பேர் அருள் பெறப் பிரியாத விடைபெற்றுப் பொன்னின் அம்பலம் சூழ்ந்து தாழ்ந்து எழுந்து போந்து அணைந்தனர் புறமுன்றில்
அப் புறத்து இடை வணங்கி அங்கு அருளுடன் அணிமணித் திருவாயில் பொற்புறத் தொழுது எழுந்து உடன் போதரப் போற்றிய புகழ்ப் பாணர் நற்பதம் தொழுது அடியனேன் பதி முதல் நதி நிவாக்கரை மேய ஒப்பில் தானங்கள் பணிந்திட வேண்டும் என்று உரை செய அது நேர்வார்
பொங்கு தெண்திரைப் புனித நீர் நிவாக்கரைக் குடதிசை மிசைப் போந்து தங்கு தந்தையாருடன் பரிசனங்களும் தவ முனிவரும் செல்லச் செங்கை யாழ்த் திரு நீலக் கண்டப் பெரும் பாணருடன் சேர மங்கையார் புகழ் மதங்க சூளாமணியாருடன் வரவந்தார்
இரும் தடங்களும் பழனமும் கடந்து போய் எருக்கத்தம் புலியூரின் மருங்கு சென்றுற நீல கண்டப் பெரும்பாணர் வணங்கிக் கார் நெருங்கு சோலை சூழ் இப்பதி அடியேன்பதி என நெடிது இன்புற்று அருங்கலைச் சிறு மழ இளங்களிறனார் அங்கணைந்து அருள் செய்வார்
ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்வாறு எனச் சிறப்பு உரைத்து அருளி அச் செழும்பதி இடம் கொண்ட மை கொள் கண்டர் தம் கோயில் உட்புக்கு வலம் கொண்டு வணங்கி பார் உய்ய வந்தவர் செழும் தமிழ்ப் பதிகம் அங்கு இசையுடன் உரை செய்தார்
அங்கு நின்று எழுந்து அருளி மற்றவருடன் அம்பொன்மா மலை வல்லி பங்கர் தாம் இனிது உறையும் நற் பதி பல பரிவொடும் பணிந்து ஏத்தித் துங்க வண்தமிழ்த் தொடை மலர் பாடிப் போய்த் தொல்லை வெங்குரு வேந்தர் செங்கண் ஏற்றவர் திரு முது குன்றினைத் தொழுது சென்று அணைகின்றார்
மொய் கொள் மா மணிக் கொழித்து முத்தாறு சூழ் முது குன்றை அடைவோம் என்று எய்து சொல் மலர் மாலை வண் பதிகத்தை இசையொடும் புனைந்து ஏத்தி செய் தவத் திரு முனிவரும் தேவரும் திசையெலாம் நெருங்கப் புக்கு ஐயர் சேவடி பணியும் அப் பொருப்பினில் ஆதரவுடன் சென்றார்
வான நாயகர் திருமுது குன்றினை வழிபட வலம் கொள்வார் தூ நறும் தமிழ்ச் சொல் இருக்குக் குறள் துணை மலர் மொழிந்து ஏத்தி ஞான போதகர் நம்பர் தம் கோயிலை நண்ணி அங்கு உள்புக்கு தேன் அலம்பு தண் கொன்றை யார் சேவடி திளைத்த அன்பொடு தாழ்ந்தார்
தாழ்ந்து எழுந்து முன் முரசு அதிர்ந்து எழும் எனும் தண் தமிழ் தொடை சாத்தி வாழ்ந்து போந்து அங்கண் வளம்பதி அதன் இடை வைகுவார் மணி வெற்புச் சூழ்ந்த தண் புனல் சுலவு முத்தாறொடு தொடுத்த சொல் தொடை மாலை வீழ்ந்த காதலால் பல முறை விளம்பியே மேவினார் சில நாள்கள்
ஆங்கு நாதரைப் பணிந்து பெண்ணாகடம் அணைந்து அருமறை ஓசை ஓங்கு தூங்கானை மாடத்துள் அமர்கின்ற ஒரு தனிப் பரஞ்சோதிப் பாங்கு அணைந்து முன் வலம் கொண்டு பணிவுற்றுப் பரவு சொல் தமிழ் மாலை தீங்கு நீங்குவீர் தொழுமின்கள் எனும் இசைப் பதிகமும் தெரிவித்தார்
கருவரைப்பில் புகாதவர் கை தொழும் ஒருவரைத் தொழுது உள்ளம் உவந்து போய்ப் பெருவரத்தினில் பெற்றவர் தம் உடன் திரு அரத்துறை சேர்தும் என்று ஏகுவார்
முந்தை நாள்கள் ஒரோ ஒரு கால் முது தந்தையார்பியல் மேல் இருப்பார் தவிர்ந்து அந்தணாளர் அவர் அருகே செலச் சிந்தை செய் விருப்போடு முன் சென்றனர்
ஆதியார் தம் அரத்துறை நோக்கியே காதலால் அணைவார் கடிது ஏகிட தாதையாரும் பரிவுறச் சம்பந்தர் பாத தாமரை நொந்தன பைப்பய
மறை அனைத்தும் ஒரு வடிவாம் என நிறை மதிப் பிள்ளை நீள் நிலம் சேர்ந்து எனத் துறை அலைக் கங்கை சூடும் அரத்துறை இறைவரைத் தொழுவான் விரைந்து ஏகினார்
பாசம் அற்றிலர் ஆயினும் பார் மிசை ஆசை சங்கரர்கு ஆயின தன்மையால் தேசு மிக்க திருவுரு ஆனவர் ஈசனைத் தொழுதே தொழுது ஏகினார்
இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட வந்த வைதிக மாமணி ஆனவர் சிந்தை ஆரமுதாகிய செம் சடைத் தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்
மாறன் பாடி எனும் பதி வந்துற ஆறு செல் வருத்தத்தின் அசைவினால் வேறு செல்பவர் வெய் துறப் பிள்ளையார் ஏறும் அஞ்செழுத்து ஓதி அங்கு எய்திட
உய்ய வந்த சம்பந்தர் உடன் வந்தார்க்கு எய்து வெம்மை இளைப்பு அஞ்சினான் போலக் கைகள் ஆயிரம் வாங்கிக் கரந்து போய் வெய்யவன் சென்று மேல் கடல் வீழ்ந்தனன்
அற்றை நாள் இரவு அப்பதியின் இடைச் சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப் பெற்றம் ஊர்ந்த பிரான் கழல் பேணுவார் வெற்றி மாதவத்தோருடன் மேவினார்
இந்நிலைக் கண் எழில் வளர் பூந்தராய் மன்னனார் தம் வழி வருத்தத் தினை அன்னம் ஆடும் துறை நீர் அரத்துறைச் சென்னியாற்றர் திருவுளம் செய்தனர்
ஏறுதற்குச் சிவிகை இடக்குடை கூறி ஊதக் குலவு பொன் சின்னங்கள் மாறில் முத்தின் படியினால் மன்னிய நீறு வந்த நிமலர் அருளுவார்
நீடு வாழ் பதி யாகும் நெல் வயலின் மாட மாமணை தோறும் மறையோர்க்குக் கூடு கங்குல் கனவில் குலமறை தேடு சேவடி தோன்ற முன் சென்று பின்
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் மான முகத்தின் சிவிகை மணிக் குடை ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் கோன் அவன் பால் அணைந்து கொடும் என
அந்தணாளர் உரைத்த அப்போழ்தினில் வந்து கூடி மகிழ்ந்து அற்புதம் உறும் சிந்தையோடும் செழுநீர் அரத்துறை இந்து சேகரர் கோயில் வந்து எய்தினர்
ஆங்கு மற்ற அருள் அடியாருடன் ஓங்கு கோயில் உள்ளார்க்கும் உண்டாயின ஈங்கு இது என்ன அதிசயம் என்பவர் தாங்கள் அம்மறையோர்கள் முன் சாற்றினார்
சால மிக்க வியப்புறு தன்மையின் பாலர் ஆதலும் பள்ளி எழுச்சியின் காலம் எய்திடக் காதல் வழிப்படும் சீல மிக்கார் திருக்காப்பு நீக்கினார்
திங்கள் நீர்மைச் செழுந் திரள் முத்தினால் துங்க வெண் குடை தூய சிவிகையும் பொங்க ஊதும் பொருவரும் சின்னமும் அங்கண் நாதர் அருளினால் கண்டனர்
கண்டபின் அவர் கை தலை மேல் குவித்து எண்திசைக்கும் விளக்கி இவையாம் எனத் தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்து எழுந்து அண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்
சங்கு துந்துபி தாரை பேரி இம்முதல் பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ அங்கணன் அருளால் அவை கொண்டு உடன் பொங்கு காதல் எதிர் கொளப் போதுவார்
மாசில் வாய்மை நெல் வாயின் மறையவர் ஆசில் சீர்ச் சண்பை ஆண் தகையார்க்கு எதிர் தேசுடைச் சிவிகை முதலாயின ஈசர் இன் அருளால் தாங்கி ஏகினார்
இத்தலை இவர் இன்னணம் ஏகினார் அத்தலைச் சண்பை நாதர்க்கும் அவ் இரா முத்த நற் சிவிகை முதல் ஆயின உய்த்து அளிக்கும் படி முன் உணர்த்துவார்
அள்ளல் நீர் வயல் சூழும் அரத்துறை வள்ளலார் நாம் மகிழ்ந்து அளிக்கும் அவை கொள்ளல் ஆகும் கொண்டு உய்த்தல் செய்வாய் என உள்ளவாறு அருள் செய்ய உணர்ந்த பின்
சண்பை ஆளியார் தாம் கண்ட மெய் அருள் பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர் தொண்டருக்கு அருள் செய்து தொழா முனம் விண் புலப்பட வீங்கு இருள் நீங்கலும்
மாலை யாமம் புலர் உறும் வைகறை வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி கோல மேனியர் ஆய்க் கைம் மலர் குவித்து ஏல அஞ்செழுத்து ஓதி எழுந்தனர்
போத ஞானப் புகலிப் புனிதரைச் சீத முத்தின் சிவிகை மேல் ஏற்றிடக் காதல் செய்பவன் போலக் கருங்கடல் மீது தேரின் வந்து எய்தினன் வெய்யவன்
ஆய போழ்தின் அரவு எனும் ஆர்ப்புடன் தூய முத்தின் சிவிகை சுடர்க் குடை மேய சின்னங்கள் கொண்டு மெய் அன்ப ரோடு ஏய அந்தணர் தாம் எதிர் தோன்றினார்
வந்து தோன்றிய அந்தணர் மாதவர் கந்த வார் பொழில் காழி நல்ன்னாடர் முன் அந்தமில் சீர் அரத்துறை ஆதியார் தந்த பேர் அருள் தாங்குவீர் என்றனர்
என்று தங்களுக்கு ஈசர் அருள் செய்தது ஒன்றும் அங்கு ஒழியாமை உரைத்து முன் நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது மன்று உளரர் அருள் என்று வணங்கினார்
மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால் தம்மை உன்னும் பரிசு தந்து ஆள்பவர் செம்மை நித்தில ஆனச் சிறப்பு அருள் எம்மை ஆளுவிப்பான் இன்று அளித்ததே
எந்தை ஈசன் என எடுத்து இவ்வருள் வந்தவாறு மற்று எவ் வணமோ என்று சிந்தை செய்யும் திருப் பதிகத்து இசை புந்தியார் அப் புகன்று எதிர் போற்றுவார்
பொடி அணிந்த புராணன் அரத்துறை அடிகள் தம் அருளே இதுவாம் எனப் படி இலாத சொல் மாலைகள் பாடியே நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்
சோதி முத்தின் சிவிகை சூழ் வந்து பார் மீது தாழ்ந்து வெண் நீற்று ஒளி போற்றி நின்று ஆதியார் அருள் ஆதலின் அஞ்செஎழுத்து ஓதி ஏறினார் உய்ய உலகு எலாம்
தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள் ஆர்த்தன தொல்லை அண்டர் ஆர்த்தனர் அகிலமும் ஆர்ப்புடன் எய்தக் கொண்டல் ஆர்த்தன முழவமும் ஆர்த்தன குழுமி வண்டு அறாப் பொலி மலர் மழை ஆர்த்தது வானம்
விளையும் ஆர்த்தன வயிர்களும் ஆர்த்தன மறையின் கிளையும் ஆர்த்தன கிளைஞரும் ஆர்த்தனர் கெழுவும் களைகண் ஆர்த்ததொர் கருணையின் ஆர்த்தன முத்து விளையும் மா கதிர் வெண்குடை ஆர்த்தது மிசையே
பல்கு வெண்கதிர்ப் பத்திசேர் நித்திலச் சிவிகைப் புல்கு நீற்று ஒளியுடன் பொலி புகலி காவலனார் அல்கு வெல் வளை அலைத்து எழு மணி நிரைத் தரங்கம் மல்கு பால் கடல் வளர்மதி உதித்தது என வந்தார்
நீடு தொண்டர்கள் மறையவர் ஏனையோர் நெருங்கி மாடு கொண்டு எழு மகிழ்ச்சியின் மலர்க்கை மேல் குவித்தே ஆடு கின்றனர் அயர்ந்தனர் அளவில் ஆனந்தம் கூடுகின்ற கண் பொழி புனல் வெள்ளத்தில் குளித்தார்
செய்ய பொன் புனை வெண்டரளத்து அணிசிறக்க சைவ மா மறைத் தலைவர் பால் பெறும் தனிக் காளம் வையம் ஏழுடன் மறைகளும் நிறை தவத்தோரும் உய்ய ஞானசம்பந்தன் வந்தான் என ஊத
சுற்று மாமறைச் சுருதியின் பெருகு ஒலி நடுவே தெற்றினார் புரம் எரித்தவர் தரு திருச்சின்னம் முற்றும் ஆனவன் ஞானமே முலை சுரந்து ஊட்ட பெற்ற பாலறா வாயன் வந்தான் எனப் பிடிக்க
புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும் போதுவார் முன்னே இணைந்த நித்திலத்து இலங்கு ஒளி நலங்கிளர் தாரை அணைந்த மாமறை முதல் கலை அகிலமும் ஓதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான் என ஊத
தெருளும் மெய்க்கலை விளங்கவும் பார் உளோர் சிந்தை இருளும் நீங்கவும் எழுது சொன் மறை அளிப்பவர் தாம் பொருளும் ஞானமும் போகமும் போற்றி என்பாருக்கு அருளும் அங்கணர் திரு அரத் துறையை வந்து அணைந்தார்
வந்து கோபுர மணி நெடு வாயில் சேய்த்து ஆகச் சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து எழுந்து சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும் பொங்கி முன் செல்ல அந்தி நாண்மதி அணிந்தவர் கோயிலுள் அடைந்தார்
மன்னு கோயிலை வலம் கொண்டு திரு முன்பு வந்து சென்னியில் கரம் குவித்து வீழ்ந்து அன்பொடு திளைப்பார் என்னையும் பொருளாக இன் அருள் புரிந்து அருளும் பொன் அடித்தலத் தாமரை போற்றி என்று எழுந்தார்
சூடினார் கர கமலங்கள் சொரிந்து இழி கண்ணீர் ஆடினார் திரு மேனியில் அரத்துறை விரும்பி நீடினார் திரு அருள் பெரும் கருணையே நிகழப் பாடினார் திருப் பதிகம் ஏழ் இசையொடும் பயில
இசை விளங்கிட இயல்பினில் பாடி நின்று ஏத்தி மிசை விளங்கு நீர் வேணியார் அருளினால் மீண்டு திசை விளங்கிடத் திரு அருள் பெற்றவர் சில நாள் அசைவில் சீர்த் தொண்டர் தம் உடன் அப்பதி அமர்ந்தார்
தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத் தாவில் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக் காவலர் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்
விளங்கு வேணு புரத்து திருத் தோணி வீற்று இருந்த களம் கொள் கண்டர் தம் காதலியார் உடன் கூட உளம் கொளப் புகுந்து உணர்வினில் வெளிப்பட உருகி வளம் கொள் பூம் புனல் புகலிமேல் செல மனம் வைத்தார்
அண்ணலார் திரு அரத்துறை அடிகளை வணங்கி நண்ணு பேர் அருளால் விடை கொண்டு போய் நடம் கொண்டு உள் நிறைந்த பூங்கழல் இணை உச்சி மேல் கொண்டே வெள் நிலா மலர் நித்திலச் சிவிகை மேல் கொண்டார்
சிவிகை முத்தினில் பெருகு ஒளி திசை எலாம் விளக்கப் கவிகை வெண்மதிக் குளிர் ஒளி கதிர் செய்வான் கலப்பக் குவிகை மேல் கொண்டு மறையவர் குணலை இட்டு ஆடப் புவிகை மாறு இன்றிப் போற்ற வந்து அருளினார் போந்தார்
மறை முழங்கின தழங்கின வண்தமிழ் வயிரின் குறை நரன்றன முரன்றன வளைக்குலம் காளம் முறை இயம்பின இயம்பல ஒலித்தன முரசப் பொறை கறங்கின பிறங்கின போற்றிசை அரவம்
உடைய பிள்ளையார் வரும் எல்லை உள்ள அப்பதியோர் புடை இரண்டினும் கொடியொடு பூந்துகில் விதானம் நடை செய் காவணம் தோரணம் பூகம் நல் கதலி மிடையும் மாலைகள் நிறை குடம் விளக்கொடு நிரைத்தார்
அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின் வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப் புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார் பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்
அங்கு அணைந்து இளம்பிறை அணிந்த சென்னியர் பொங்கு எழில் கோபுரம் தொழுது புக்க பின் துங்க நீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன் பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்
மண்ணினில் பொலி குலமலையர் தாம் தொழுது எண் இல் சீர்ப் பணிகள் செய்து ஏத்தும் தன்மையில் நண்ணிய வகை சிறப்பித்து நாதரைப் பண்ணினில் திகழ் திருப்பதிகம் பாடினார்
பாவின இசை வழிபாடி அங்கு அகன்றி யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார் மூவுலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார் மேவிய பெரும் திரு விசய மங்கையில்
அந்தணர் விசய மங்கையினில் அங்கணர் தம் தனி ஆலயம் சூழ்ந்து தாழ்ந்து முன் வந்தனை செய்து கோ தனத்தை மன்னிய செந்தமிழ் மாலையில் சிறப்பித்து ஏத்தினார்
விசய மங்கையின் இடம் அகன்று மெய்யர் தாள் அசைவில் வைகாவினில் அணைந்து பாடிப் போந்து இசை வளர் ஞான சம்பந்தர் எய்தினார் திசை உடை ஆடையர் திருப்புறம் பயம்
புறம் பயத்து இறைவரை வணங்கிப் போற்றி செய் திறம் புரி நீர்மையில் பதிகச் செம்தமிழ் நிறம் பயில் இசையுடன் பாடி நீடிய அறம் தரு கொள்கையர் அமர்ந்து மேவினார்
அத் திருப்பதி பணிந்து அகன்று போய் அனல் கைத் தலத்தவர் பதி பிறவும் கை தொழு முத் தமிழ் விரபராம் முதல்வர் நண்ணினார் செய்த் தலைப் பணிலம் முத்து ஈனும் சேய்ஞலூர்
திரு மலி புகலி மன் சேரச் சேய் ஞலூர் அரு மறையவர் பதி அலங்கரித்து முன் பெரு மறையொடு முழவு ஒலி பிறங்கவே வருமுறை எதிர் கொள வந்து முந்தினார்
ஞான சம்பந்தரும் நாயனார் சடைத் தூ நறும் தொடையல் முன் சூட்டும் பிள்ளையார் பான்மையில் வரும் பதி என்று நித்தில யானமுன் இழிந்து எதிர் இறைஞ்சி எய்தினார்
மா மறையாளர் வண் புகலிப் பிள்ளையார் தாம் எழுந்து அருளிடத் தங்கள் பிள்ளையார் காமரும் பதியில் வந்து அருளக் கண்டனர் ஆ மகிழ் உடன் பணிந்து ஆடி ஆர்த்தனர்
களித்தனர் புண்ணியக் கரக வாசநீர் தெளித்தனர் பொரிகளும் மலரும் சிந்தினர் துளித்தனர் கண் மழை சுருதி ஆயிரம் அளித்தவர் கோயிலுள் அவர் முன்பு எய்தினார்
வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப் பொங்கிய விருப்பினால் புடை வலம் கொடு செங்கைகள் சென்னிமேல் குவித்துச் சென்று புக்கு அங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்
வேதியர் சேய்ஞலூர் விமலர் தம் கழல் காதலில் பணிந்தவர் கருணை போற்றுவார் தாதை தாள் தடிந்த சண்டீசப் பிள்ளையார் பாதகப் பயன் பெறும் பரிசு பாடினார்
இன் இசை வண் தமிழ் பாடி ஏத்தியே நன்னெடும் பதி உளோர் நயக்க வைகிய பின்னர் வெண்பிறை அணி வேணிப் பிஞ்ஞகர் மன்னிய திருப்பனந்தாள் வணங்கினார்
ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப் பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த் தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர் ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்
மற்ற நல் பதி வட தளியின் மேவிய அற்புதர் அடி பணிந்து அலர்ந்த செந்தமிழ்ச் சொல் தொடைபாடி அங்கு அகன்று சூழ் மதில் பொன் பதி வாழ் கொளி புத்தூர் புக்கனர்
சீர் வளர் கோயிலை அணைந்து தேமலர்க் கார் வளர் கண்டர் தாள் பணிந்து காண்பவர் பார் புகழ் பதிகங்கள் பாடி நீடுவார் வார் பொழில் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்
நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில் கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய வம்பலர் செந்தமிழ் மாலை பாடி நின்று எம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்
அப்பதி பணிந்து அரும் தமிழ் புனைந்து தம் மெய்ப்படு விருப்பொடு மேவு நாள் அரன் பொன் பதி பலவும் முன் பணிந்து போந்தனர் பைப் பணியவர் கருப் பறியல் ஊரினில்
பரமர் தம் திருக் கருப் பறியல் ஊரினைச் சிரபுரச் சிறுவர் கை தொழுது செந்தமிழ் உரை இசை பாடி அம் மருங்கின் உள்ளவாம் சுரர் தொழும் பதிகளும் தொழுது பாடினார்
மண் உலகு செய்த தவப் பயனாய் உள்ள வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி எணில் முரசு இரங்கி எழப் பணிலம் ஆர்ப்ப இலங்கிய காளம் சின்னம் எங்கும் ஊதக் கண் வளர் மென் கரும்பு மிடை கதிர்ச் செம்சாலி கதலி கமுகு உடன் ஓங்கும் கழனி நாட்டுத் தெண் நிலவு சூடிய தம் பெருமான் வைகும் திருப் பிரம புரம் சாரச் செல்லும்போது
பிள்ளையார் எழுந்து அருளக் கேட்ட செல்வப் பிரமபுரத்து அருமறையோர் பெருகு காதல் உள்ளம் மகிழ் சிறந்து ஓங்கத் தோணி மேவும் உமைப் பாகர் கழல் வணங்கி உவகை கூர வெள்ள மறை ஒலிபெருகு மறுகு தோறும் மிடை மகர தோரணங்கள் கதலி பூகம் தெள்ளுபுனல் நிறை குடங்கள் தீப தூபம் செழும் கொடிகள் நிரைத்து எதிர் கொள் சிறப்பில் செய்வார்
ஆரணங்கள் மதுர ஒலி எழுந்து பொங்க அரசிலையும் தருப்பையும் பெய்து அணிந்த வாசப் பூரண கும்பங்கள் நிறை கரகம் ஏந்திப் புது மலரும் நறும் துகளும் பொரியும் தூவி வாரணங்கு முலை உமையாள் குழைத்த செம்பொன் வள்ளத்தில் அமுது உண்ட வள்ளலாரைச் சீர் அணங்கு மணி முத்தின் சிவிகை மீது செழுந்தரளக் குடை நிழல் கீழ் சென்று கண்டார்
கண்ட பொழுதே கைகள் தலைமேல் கொண்டு கண் களிப்ப மனம் களிப்பக் காதல் பொங்கித் தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து சொல் இறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை எண் திசையும் நிறைவித்தார் ஆடை வீசி இரு விசும்பின் வெளி தூர்த்தார் ஏறு சீர்த்தி வண்டமிழ் நாயகரும் இழிந்து எதிரே சென்று வணங்கி அவருடன் கூடி மகிழ்ந்து புக்கார்
திங்கள் அணி மணிமாடம் மிடைந்த வீதி சென்று அணைந்து தெய்வ மறைக் கற்பின் மாதர் மங்கல வாழ்த்து இசை இரண்டு மருங்கு மல்க வானவர் நாயகர் கோயில் மருங்கு சார்ந்து துங்க நிலைக் கோபுரத்தை இறைஞ்சி புக்குச் சூழ்ந்து திருத்தோணி மிசை மேவினார்கள் தங்கள் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நின்று தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார்
பரவு திருப்பதிக இசை பாடி நீடும் பரன் கருணைத் திருவருளின் பரிசு போற்றி விரவு மலர்க் கண் பனிப்பப் கைகள் கூப்பி விழுந்து எழுந்து புறம் போந்து வேத வாய்மைச் சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது திரு நீல கண்ட யாழ்ப்பாணர் பின்னே வர அவரை வளம் பெருகு மனையில் போக அருள் செய்து தம் திரு மாளிகையின் வந்தார்
மறையவர்கள் அடி போற்றத் தந்தையாரும் மருங்கு அணைய மாளிகையில் அணையும்போதில் நிறை குடமும் மணி விளக்கும் முதலாய் உள்ள நீதி மறைக் குல மகளிர் நெருங்கி ஏந்த இறைவர் திரு நீற்றுக் காப்பு ஏந்தி முன் சென்று ஈன்ற தாயார் சாத்தி இறைஞ்சி ஏத்த முறைமை அவர்க்கு அருள் செய்து மடத்தில் புக்கார் முதல்வர் பால் மணி முத்தின் சிவிகை பெற்றார்
செல்வ நெடு மாளிகையில் அமர்ந்து நாளும் திருத் தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து மல்கு திருப் பதிகங்கள் பலவும் பாடி மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வைகுநாளில் ஒல்லை முறை உபநயனப் பருவம் எய்த உலகு இறந்த சிவஞானம் உணரப் பெற்றார் தொல்லை மறை விதிச் சடங்கு மறையோர் செய்யத் தோலொடு நூல் தாங்கினார் சுரர்கள் போற்ற
ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்தம்மை உலகு இயல்பின் உபநயன முறைமையாகும் இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி எய்துவிக்கும் மறை முனிவர் எதிரே நின்று வரு திறத்தின் மறை நான்கும் தந்தோம் என்று மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால் பொருவு இறப்ப ஓதினார் புகலி வந்த புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்
சுருதி ஆயிரம் ஓதி அங்கம் ஆன தொல் கலைகள் எடுத்து இயம்பும் தோன்றலாரைப் பரிதி ஆயிரம் கோடி விரிந்தால் என்னப் பரஞ்சோதி அருள் பெற்ற பான்மை மேன்மை கருதி ஆதரவோடும் வியப்பு உற்று ஏத்தும் கலை மறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன் வரும் தியானப் பொருள் என்று இறைஞ்சி தாம் முன் வல்ல மறை கேட்டு ஐயம் தீர்ந்து வாழ்ந்தார்
மந்திரங்கள் ஆன எல்லாம் அருளிச் செய்து மற்று அவற்றின் வைதிக நூல் சங்கின் வந்த சிந்தை மயக்குறும் ஐயம் தெளிய எல்லாம் செழு மறையோர்க்கு அருளி அவர் தெருளும் ஆற்றால் முந்தை முதல் மந்திரங்கள் எல்லாம் தோன்றும் முதல் ஆகும் முதல்வனார் எழுத்தஞ்சு என்பார் அந்தியினுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே என்று அஞ்சு எழுத்தின் திருப்பதிகம் அருளிச்செய்தார்
அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய அந்தணர்கள் அருள் தலைமேல் கொண்டு தாழ்ந்து சித்தம்மகிழ்வொடு சிறப்பத் தாமும் தெய்வத் திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து மெய்த்த இசைப் பதிகங்கள் கொண்டு போற்றி விரை மலர்த்தாள் மனம் கொண்டு மீண்டு போந்து பத்தர் உடன் இனிது அமரும் பண்பு கூடப் பரமர் தாள் பணிந்து ஏத்திப் பயிலும் நாளில்
பந்து அணை மெல் விரலாளும் பரமரும் பாய் விடை மீது வந்து பொன் வள்ளத்து அளித்த வரம்பில் ஞானத்து அமுது உண்ட செந்தமிழ் ஞான சம்பந்தர் திறம் கேட்டு இறைஞ்சு தற்காக அந்தணர் பூந்தராய் தன்னில் அணைந்தனர் நாவுக் கரையர்
வாக்கின் பெருவிறல் மன்னர் வந்து அணைந்தார் எனக் கேட்டு பூக்கமழ் வாசத் தடம் சூழ் புகலிப் பெரும் தகையாரும் ஆக்கிய நல் வினைப் பேறு என்று அன்பர் குழாத் தொடும் எய்தி ஏற்கும் பெரு விருப்போடும் எதிர் கொள எய்தும் பொழுதில்
சிந்தை இடை அறா அன்பும் திருமேனி தன்னில் அசைவும் கந்தம் மிகையாம் கருத்தும் கை உழவாரப் படையும் வந்திழி கண்ணீர் மழையும் வடிவில் பொலி திரு நீறும் அந்தம் இலாத் திரு வேடத்து அரசும் எதிர் வந்து அணைய
கண்ட கவுணியர்க் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்
பேர் இசை நாவுக்கு அரசைப் பிள்ளையார் கொண்டு உடன் போந்து போர் விடையார் திருத்தோணிப் பொன் கோயில் உட்புகும் போதில் ஆர்வம் பெருக அணையும் அவருடன் கும்பிட்டு அருளால் சீர்வளர் தொண்டரைக் கொண்டு திருமாளிகையினில் சேர்ந்தார்
அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால் இணையில் திரு அமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்துப் புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு உணரும் சொல் மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்
அந்நாள் சில நாள்கள் செல்ல அருள் திருநாவுக்கு அரசர் மின்னார் சடை அண்ணல் எங்கும் மேவிடம் கும்பிட வேண்டி பொன் மார்பில் முந்நூல் புனைந்த புகலிப் பிரான் இசைவோடும் பின்னாக எய்த இறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார்
வாக்கின் தனி மன்னர் ஏக மாறாத் திரு உளத்தோடும் பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த புகலியின் மீண்டும் புகுந்து தேக்கிய மாமறை வெள்ளத் திருத்தோணி வீற்று இருந்தாரைத் தூக்கின் தமிழ் மாலை பாடித் தொழுது அங்கு உறைகின்ற நாளில்
செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுள்களான் மொழி மாற்றும் வந்த சொல் சீர் மாலை மாற்றும் வழி மொழி எல்லா மடக்குச் சந்த வியமகம் ஏகபாதம் தமிழ் இருக்குக் குறள் சாத்தி எந்தைக்கு எழு கூற்றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு
நாலடி மேல் வைப்பு மேன்மை நடையின் முடுகும் இராகம் சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும் பதிக மூல இலக்கியமாக எல்லாப் பொருள்களும் முற்ற ஞாலத்து உயர் காழியாரைப் பாடினார் ஞான சம்பந்தர் இன்னிசை பாடின எல்லாம் யாழ்ப் பெரும் பாணனார் தாமும் மன்னும் இசை வடிவான மதங்க சூளா மணியாரும் பன்னிய ஏழ் இசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப் பொன்னின் திருத்தாளம் பெற்றார் புகலியில் போற்றி இருந்தார்
அங்கண் அமர் கின்ற நாளில் அரும் தமிழ் நாடு எத்தினுள்ளும் திங்கள் சடை அண்ணலார்தம் திருப்பதி யாவையும் கும்பிட்டு எங்கும் தமிழ் மாலை பாடி இங்கு எய்துவன் என்று தம் குலத் தாதையா ரோடும் தவ முனிவர்க்கு அருள் செய்தார்
பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும் அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவு ஆற்றேன் இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும் ஒருமையால் இன்னம் சிலநாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்
ஆண்டகையாரும் இசைந்து அங்கு அம்பொன் திருத்தேணி மேவும் நீண்ட சடையார் அடிக்கீழ் பணி உற்று நீடு அருள் பெற்றே ஈண்டு புகழ்த் தாதையார் பின் எய்திட யாழ்ப்பாணரோடும் காண் தகு காழி தொழுது காதலினால் புறம் போந்தார்
அத்திரு மூதூரின் உள்ளார் அமர்ந்து உடன்போதுவார் போத மெய்த்தவர் அந்தணர் நீங்கா விடை கொண்டு மீள்வார்கள் மீள முத்தின் சிவிகை மேல் கொண்டு மொய் ஒளித் தாமம் நிரத்த நித்தில வெண்குடை மீது நிறை மதி போல நிழற்ற
சின்னம் தனிக் காளம் தாரை சிரபுரத்து ஆண்டகை வந்தார் என்னும் தகைமை விளங்க ஏற்ற திருப் பெயர் சாற்ற முன் எம்மருங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப மன்னும் திருத்தொண்டனார் வந்து எதிர் கொண்டு வணங்க
சங்க நாதங்கள் ஒலிப்பத் தழங்கு பொன் கோடு முழங்க மங்கல வாழ்த்து உரை எங்கும் மல்க மறை முன் இயம்பத் திங்களும் பாம்பும் அணிந்தார் திருப்பதி எங்கும் முன் சென்று பொங்கிய காதலில் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார்
திருமறைச் சபையர் ஆளி சிவனார் திருக்கண்ணார் கோயில் பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும் உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ் மாலை கொண்டு ஏத்தி வரு புனல் பொன்னி வடபால் குட திசை நோக்கி வருவார்
போற்றிய காதல் பெருக புள்ளிருக்கும் திருவேளூர் நால் தடம் தோளுடை மூன்று நயனப் பிரான் கோயில் நண்ணி ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொற் பதிகம் அணிந்தார்
நீடு திரு நின்றி ஊரின் நிமலனார் நீள் கழல் ஏத்திக் கூடிய காதலில் போற்றிக் கும்பிட்டு வண் தமிழ் கூறி நாடு சீர் நீடூர் வணங்கி நம்பர் திருப் புன்கூர் நண்ணி ஆடிய பாதம் இறைஞ்சி அரும் தமிழ் பாடி அமர்ந்தார்
அங்கு நின்று ஏகி அப்பாங்கில் அரனார் மகிழ் கோயில் ஆன எங்கணும் சென்று பணிந்தே ஏத்தி இமவான் மடந்தை பங்கர் உறை பழ மண்ணிப் படிக்கரைக் கோயில் வணங்கித் தங்கு தமிழ் மாலை சாத்தித் திருக்குறுக்கைப் பதி சார்ந்தார்
திருக்குறுக்கைப் பதி மன்னித் திரு வீரட்டானத்து அமர்ந்த பொருப்புவில்லாளரை ஏத்திப் போந்து அன்னியூர் சென்று போற்றிப் பருக்கை வரை உரித்தார் தம் பந்தண நல்லூர் பணிந்து விருப்புடன் பாடல் இசைந்தார் வேதம் தமிழால் விரித்தார்
அப்பதி போற்றி அகல்வார் அரனார் திருமணம் சேரி செப்பரும் சீர்த் தொண்டரோடும் சென்று தொழுது இசை பாடி எப்பொருளும் தரும் ஈசர் எதிர் கொள் பாடிப் பதி எய்தி ஒப்பில் பதிகங்கள் பாடி ஓங்கு வேள்விக் குடி உற்றார்
செழுந்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நற்கோலம் பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில் தழும்பிய தன்னைமையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக் கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடிக் காவிற் சென்றடைந்தார்
திருக்கோடி காவில் அமர்ந்த தேவர் சிகாமணி தன்னை எருக்கோடு இதழியும் பாம்பும் இசைந்து அணிந்தானை வெள்ளேனப் பருக்கோடு பூண்ட பிரானைப் பணிந்து சொல் மாலைகள் பாடிக் கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர் கை தொழச் சென்றார்
கஞ்சனூர் ஆண்ட தம் கோவைக் கண் உற்று இறைஞ்சி முன் போந்து மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச் செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார்
வெங் கண் விடை மேல் வருவார் வியலூர் அடிகளைப் போற்றித் தங்கிய இன்னிசை கூடும் தமிழ்ப் பதிகத் தொடை சாத்தி அங்கண் அமர்வார் தம் முன்னே அருள் வேடம் காட்டத் தொழுது செங்கண் மாலுக்கு அரியார் தந்திருந்து தேவன் குடி சேர்ந்தார்
திருந்து தேவன் குடி மன்னும் சிவ பெருமான் கோயில் எய்திப் பொருந்திய காதலில் புக்குப் போற்றி வணங்கிப் புரிவார் மருந்தொடு மந்திரம் ஆகி மற்றும் இவர் வேடமாம் என்று அருந்தமிழ் மாலை புனைந்தார் அளவில் ஞானத்து அமுது உண்டார்
மொய் திகழ் சோலை அம் மூதூர் முன் அகன்று அந் நெறி செல்வார் செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்து இடை போய் மை திகழ் கண்டர் தம் கோயில் மருங்கு உள்ள எல்லாம் வணங்கி எய்தினர் ஞானசம்பந்தர் இன்னம்பர் ஈசர்தம் கோயில்
இன்னம்பர் மன்னும் பிரானை இறைஞ்சி இடை மடக்கான பன்னும் தமிழ்த் தொடை மாலைப் பாடல் புனைந்து பரவி பொன்னங் கழல் இணை போற்றிப் புறம் போந்து அணைந்து புகுந்தார் மன்னும் தடம் கரைப் பொன்னி வட குரங்காடுதுறையில்
வட குரங்காடுதுறையில் வாலியார் தாம் வழிபட்ட அடைவும் திருப்பதிகத்தில் அறிய சிறப்பித்து அருளிப் புடை கொண்டு இறைஞ்சினர் போந்து புறத்துள்ள தானங்கள் போற்றி படை கொண்ட மூவிலை வேலர் பழனம் திருப்பதி சார்ந்தார்
பழனத்து மேவிய முக்கண் பரமேட்டியார் பயில் கோயில் உழைபுக்கு இறைஞ்சி நின்று ஏத்தி உருகிய சிந்தையர் ஆகி விழை சொல் பதிகம் விளம்பி விருப்புடன் மேவி அகல்வார் அழனக்க பங்கய வாவி ஐயாறு சென்று அடைகின்றார்
மாட நிரை மணி வீதித் திருவையாற்றினில் வாழும் மல்கு தொண்டர் நாடு உய்யப் புகலிவரு ஞான போனகர் வந்து நண்ணினார் என்று ஆடலொடு பாடல் அறா அணி மூதூர் அடைய அலங்காரம் செய்து நீடு மனக் களிப்பினொடும் எதிர் கொள்ள நித்தில யானத்து நீங்கி
வந்து அணைந்த திருத்தொண்டர் மருங்கு வர மான் ஏந்து கையர் தம்பால் நந்தி திரு அருள் பெற்ற நல் நகரை முன் இறைஞ்சி நண்ணும் போதில் ஐந்து புலன் நிலை கலங்கும் இடத்து அஞ்சேல் என்பார் தம் ஐயாறு என்று புந்தி நிறை செந்தமிழின் சந்த இசை போற்றி இசைத்தார் புகலி வேந்தர்
மணி வீதி இடம் கடந்து மால் அயனுக்கு அரிய பிரான் மன்னும் கோயில் அணி நீடு கோபுரத்தை அணைந்து இறைஞ்சி உள் எய்தி அளவில் காதல் தணியாத கருத்தின் ஓடும் தம்பெருமான் கோயில் வலம் கொண்டு தாழ்ந்து பணி சூடும் அவர் முன்பு பணிந்து வீழ்ந்து எழுந்து அன்பால் பரவுகின்றார்
கோடல் கோங்கம் குளி கூவிளம் என்னும் திருப்பதிகக் குலவு மாலை நீடு பெரும் திருக்கூத்து நிறைந்த திரு உள்ளத்து நிலைமை தோன்ற ஆடுமாறு அது வல்லான் ஐயாற்று எம் ஐயனே என்று நின்று பாடினார் ஆடினார் பண்பினொடும் கண் பொழி நீர் பரந்து பாய
பல முறையும் பணிந்து எழுந்து புறம் போந்து பரவு திருத் தொண்டரோடு நிலவு திருப்பதி அதன் கண் நிகழும் நாள் நிகர் இலா நெடுநீர்க் கங்கை அலையும் மதி முடியார் தம் பெரும்புலியூர் முதலான அணைந்து போற்றிக் குலவு தமிழ்த் தொடை புனைந்து மீண்டு அணைந்து பெருகு ஆர்வம் கூரு நாளில்
குடதிசை மேல் போவதற்குக் கும்பிட்டு அங்கு அருள் பெற்றுக் குறிப்பின் ஓடும் படரும் நெறி மேல் அணைவார் பரமர் திருநெய்த்தானப் பதியில் நண்ணி அடையும் மனம் உற வணங்கி அரும் தமிழ் மாலைகள் பாடி அங்கு நின்றும் புடைவளர் மென் கரும்பினொடு பூகம் இடை மழபாடி போற்றச் சென்றார்
செங்கை மான்மறியார் தம் திருமழபாடிப் புறத்துச் சேரச் செல்வார் அங்கையார் அழல் என்னும் திருப்பதிகம் எடுத்து அருளி அணைந்த போழ்தில் மங்கை வாழ் பாகத்தார் மழபாடி தலையினால் வணங்குவார்கள் பொங்கு மா தவம் உடையார் எனத் தொழுது போற்றி இசைத்தே கோயில் புக்கார்
மழபாடி வயிர மணித் தூண் அமர்ந்து மகிழ் கோயில் வலம் கொண்டு எய்தி செழுவாச மலர்க் கமலச் சேவடிக் கீழ்ச் சென்று தாழ்ந்து எழுந்து நின்று தொழுது ஆடிப் பாடி நறும் சொல் மாலைத் தொடை அணிந்து துதித்துப் போந்தே ஒழியாத நேசம் உடன் உடையவரைக் கும்பிட்டு அங்கு உறைந்தார் சின்னாள்
அதன் மருங்கு கடந்து அருளால் திருக்கானூர் பணிந்து ஏத்தி ஆன்ற சைவ முதன் மறையோர் அன்பிலாந் துறையின் முன்னவனைத் தொழுது போற்றிப் பதம் நிறை செந்தமிழ் பாடிச் சடைமுடியார் பயில் பதியும் பணிந்து பாடி மத கரட வரை உரித்தார் வட கரை மாந்துறை அணைந்தார் மணி நூல் மார்பர்
சென்று திரு மாந்துறையில் திகழ்ந்து உறையும் துறை நதி வாழ் சென்னியார் தம் முன்றில் பணிந்து அணி நெடு மாளிகை வலம் செய்து உள்புக்கு முன்பு தாழ்ந்து துன்று கதிர்ப் பரிதிமதி மருந்துக்கள் தொழுது வழிபாடு செய்ய நின்ற நிலை சிறப்பித்து நிறை தமிழில் சொல் மாலை நிகழப் பாடி
அங்கண் அகன்று அம் மருங்கில் அங்கணர் தம் பதி பிறவும் அணைந்து போற்றிச் செங்கமலப் பொதி அவிழச் சேல் பாயும் வயல் மதுவால் சேறு மாறாப் பொங்கு ஒலி நீர் மழ நாட்டுப் பொன்னி வட கரை மிசைப் போய்ப் புகலி வேந்தர் நங்கள் பிரான் திருப்பாச்சிலாச்சிரமம் பணிய நண்ணும் போதில்
அந் நகரில் கொல்லி மழவன் பயந்த அரும் பெறல் ஆர் அமுத மென் சொல் கன்னி இள மடப்பிணையாம் காமரு கோமளக் கொழுந்தின் கதிர் செய் மேனி மன்னு பெரும் பிணியாகும் முயலகன் வந்து அணைவுற மெய் வருத்தம் எய்தித் தன்னுடைய பெரும் சுற்றம் புலம்பு எய்தத் தானும் மனம் தளர்வு கொள்வான்
மற்று வேறு ஒருபரிசால் தவிராமை மறி வளரும் கையார் பாதம் பற்றியே வரும் குலத்துப் பான்மையினான் ஆதலினால் பரிவு தீரப் பொன் தொடியைக் கொடு வந்து போர் கோலச் சேவகராய் புரங்கள் மூன்றும் செற்றவர் தம் கோயில் உட் கொடு புகுந்து திரு முன்பே இட்டு வைத்தான்
அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார் எழுந்து அருளி அணுக எய்தச் செவ்விய மெய்ஞ் ஞானம் உணர் திருஞான சம்பந்தன் வந்தான் என்றே எவ் உலகும் துயர் நீங்கப் பணி மாறும் தனிக் காளத்து எழுந்த ஓசை எவ் உயிர்க்கும் அவன் கேளா மெல் இயலை விட்டு எதிரே விரைந்து செல்வான்
மா நகரம் அலங்கரிமின் மகர தோரணம் நாட்டும் மணி நீர் வாசத் தூ நறும் பூரண கும்பம் சோதி மணி விளக்கினொடு தூபம் ஏந்தும் ஏனை அணி பிறவும் எலாம் எழில் பெருக இயற்றும் என ஏவித் தானும் வானவர் நாயகர் மகனார் வருமுன்பு தொழுது அணைந்தான் மழவர் கோமான்
பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேன் என்று ஆனந்தம் பெருகு காதல் வெள்ளம் நீர் கண் பொழியத் திருமுத்தின் சிவிகையின் முன் வீழ்ந்த போது வள்ளலார் எழுக என மலர்வித்த திருவாக்கால் மலர்க்கை சென்னி கொள்ள மகிழ்ந்து உடன் சென்று குலப்பதியின் மணிவீதி கொண்டு புக்கான்
மங்க தூரியம் முழங்கும் மணி வீதி கடந்து மதிச் சடையார் கோயில் பொங்கு சுடர்க் கோபுரத்துக்கு அணித்து ஆக புனை முத்தின் சிவிகை நின்றும் அங்கண் இழிந்து அருளும் முறை இழிந்து அருளி அணிவாயில் பணிந்து புக்கு தங்கள் பிரான் கோயில் வலம் கொண்டு திருமுன் வணங்கச் சாரும் காலை
கன்னி இளம் கொடி உணர்வு கழிந்து நிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கி என் இது என்று அருள் செய்ய மழவன்தான் எதிர் இறைஞ்சி அடியேன் பெற்ற பொன் இவளை முயலகனாம் பொருவில் அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில் முன் அணையக் கொணர்வித்தேன் இது புகுந்தபடி என்று மொழிந்து நின்றான்
அணிகிளர் தார் அவன் சொன்ன மாற்றம் அருளொடும் கேட்டு அந் நிலையின் நின்றே பணி வளர் செஞ்சடைப் பாச்சின் மேய பரம் பொருள் ஆயினாரைப் பணிந்து மணி வளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பது என்று தணிவில் பிணி தவிர்க்கும் பதிகத் தண்தமிழ் பாடினார் சண்பை நாதர்
பன்னு தமிழ் மறையாம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப் பார் மிசை நின்று எழுந்து பொன்னின் கொடி என ஒல்கிவந்து பெருவலித் தாதை புடை அணைந்தாள்
வன்பிணி நீங்கு மகளைக் கண்ட மழவன் பெரு மகிழ்ச்சி பொங்கக் தன்தனிப் பாவையும் தானும் கூடச் சண்பையர் காவலர் தாளில் வீழ நின்ற அருமறைப் பிள்ளையாரும் நீர் அணிவேணி நிமலர் பாதம் ஒன்றிய சிந்தை உடன் பணிந்தார் உம்பர் பிரான் திருத்தொண்டர் ஆர்த்தார்
நீடு திரு வாச்சிரமம் மன்னும் நேரிழை பாகத்தர் தாள் வணங்கிக் கூடும் அருளுடன் அங்கு அமர்ந்து கும்பிடும் கொள்கை மேற்கொண்டு போந்தே ஆடல் பயின்றார் பதிபிறவும் அணைந்து பணிந்து அடிபோற்றி ஏகிச் சேடர்கள் வாழும் திருப்பைஞ்ஞீலிச் சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்
பண்பயில் வண்டு இனம்பாடும் சோலைப் பைஞ்ஞீலி வாணர் கழல் பணிந்து மண் பரவும் தமிழ் மாலை பாடி வைகி வணங்கி மகிழ்ந்து போந்து திண்பெரும் தெய்வக் கயிலையில் வாழ் சிவனார் பதி பல சென்று இறைஞ்சிச் சண்பை வளம் தரும் நாடர் வந்து தடம் திரு ஈகோய் மலையைச் சார்ந்தார்
செங்கண் குறவரைத் தேவர் போற்றும் திகழ் திரு ஈங்கோய் மலையில் மேவும் கங்கை சடையார் கழல் பணிந்து கலந்த இசைப் பதிகம் புனைந்து பொங்கர்ப் பொழில் சூழ் மலையும் மற்றும் புறத்துள்ள தானங்கள் எல்லாம் போற்றிக் கொங்கில் குட புலம் சென்று அணைந்தார் கோதில் மெய்ஞ்ஞான கொழுந்து அனையார்
அண்டர் பிரான் ஆலயங்கள் அம்மருங்கு உள்ளன பணிந்து தெண்திரை நீர்த் தடம் பொன்னித் தென் கரையாம் கொங்கின் இடை வண்டு அலையும் புனல் சடையார் மகிழ் இடங்கள் தொழுது அணைந்தார் கொண்டல் பயில் நெடும் புரிசை கொடி மாடச் செங்குன்றூர்
அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து பன்னெடுந்தோரணமுதலாப் பயில் அணிகள் பல அமைத்து முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள் சென்னியுறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழுங்கோயில்
தம் பெருமான் கோயிலினுள் எழுந்து அருளித் தமிழ் விரகர் நம்பரவர் திரு முன்பு தாழ்ந்து எழுந்து நலம் சிறக்க இம்பரும் உம்பரும் ஏத்த இன்னிசை வண் தமிழ் பாடிக் கும்பிடும் ஆதரவு உடன் அக் கோ நகரில் இனிது அமர்ந்தார்
அப்பாலைக் குட புலத்தில் ஆறணிந்தார் அமர் கோயில் எப்பாலும் சென்று ஏத்தித் திரு நணாவினை இறைஞ்சிப் பைப் பாந்தள் புணைந்த வரைப் பரவிப் பண்டு அமர்கின்ற வைப்பான செங்குன்றூர் வந்து அணைந்து வைகினார்
ஆங்கு உடைய பிள்ளையார் அமர்ந்து உறையும் நாளின்கண் தூங்கு துளி முகில் குலங்கள் சுரந்து பெயல் ஒழிகாலை வீங்கு ஒலி நீர் வைப்பு எல்லாம் வெயில் பெறா விருப்பு வரப் பாங்கர் வரையும் குளிரும் பனிப் பருவம் எய்தியதால்
அளிக்குலங்கள் சுளித்து அகல அரவிந்தம் முகம் புலரப் பளிங்கு மணி மரகத வல்லியில் கோத்த பான்மை எனத் துளித் தலைமேல் அறுகு பனி தொடுத்து அசையச் சூழ் பனியால் குளிர்க் குடைந்து வெண் படாம் போர்த்து அனைய குன்றுகளும்
மொய் பனி கூர் குளிர் வாடை முழுது உலவும் பொழுதேயாய்க் கொய் தளிர் மென் சோலைகளும் குலைந்து அசைய குளிர்க்கு ஒதுங்கி வெய்யவனும் கரம் நிமிர்க்க மாட்டான் போல் விசும்பின் இடை ஐது வெயில் விரிப்பதுவும் அடங்குவதும் ஆகுமால்.
நீடிய அப் பதிகள் எலாம் நிறை மாடத் திறைகள் தொறும் பேடையுடன் பவளக்கால் புறவு ஒடுங்கப் பித்திகையின் தோடு அலர் மென் குழல் மடவார் துணைக் கலச வெம் முலையுள் ஆடவர் தம் பணைத்தோளும் மணி மார்பும் அடங்குவன
அரிசனமும் குங்குமமும் அரைத்து அமைப்பார் அயல் எல்லாம் பரிய அகில் குறை பிளந்து புகைப்பார்கள் பாங்கு எல்லாம் எரி உமிழ் பேழ் வாய்த் தோணி இரும்பு ஈர்ப்பார் இடை எல்லாம் விரி மலர் மென் புறவு அணிந்த மீப்புலத்து வைப்பு எல்லாம்
அந்நாளில் கொடி மாடச் செங் குன்றூர் அமர்ந்து இருந்த மெய்ஞ்ஞானப் பிள்ளையாருடன் மேவும் பரிசனங்கள் பன்னாளும் அந்நாட்டில் பயின்ற அதனால் பனித்த குளிர் முன் ஆன பிணி வந்து மூள்வது போல் முடுகுதலும்
அந்நிலைமை ஆளுடைய பிள்ளையார்க்கு அவர்கள் எல்லாம் முன் அறிவித்து இறைஞ்சுதலும் முதல்வனார் அருள் தொழுதே இந்நிலத்தின் இயல்பு எனினும் நமக்கு எய்தப் பெறு என்று சென்னி மதி அணிந்தாரைத் திருப்பதிகம் பாடுவார்
அவ்வினைக்கு இவ்வினை என்று எடுத்து ஐயர் அமுது செய்த வெவ்விடம் முன் தடுத்து எம் இடர் நீக்கிய வெற்றியினால் எவ்விடத்தும் அடியார் இடர் காப்பது கண்டம் என்றே செய்வினைத் தீண்டா திரு நீல கண்டம் எனச் செப்பினார்
ஆய குறிப்பினில் ஆணை நிகழ அருளிச் செய்து தூய பதிகத் திருக் கடைக் காப்புத் தொடுத்து அணிய மேய அப்பொன்பதி வாழ்பவர்க்கே அன்றி மேவும் அந்நாள் தீய பனிப் பிணி அந்நாட்டு அடங்கவும் தீர்ந்தது அன்றே
அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று துப்புறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்
பருவம் அருப் பொன்னிப் பாண்டிக் கொடு முடியார் தம்பாதம் மருவி வணங்கி வளத் தமிழ் மாலை மகிழ்ந்து சாத்தி விரி சுடர் மாளிகை வெஞ்ச மாக் கூடல் விடையவர் தம் பெருவில் தானம் பல போற்றிக் குணதிசைப் போதுகின்றார்
செல்வக் கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்று இறைஞ்சி நல் இசை வண் தமிழ்ச் சொல் தொடை பாடி அந்நாடு அகன்று மல்கிய மாணிக்க வெற்பு முதலா வணங்கி வந்து மல்கு திரைப் பொன்னித் தென் கரைத் தானம் பல பணிவார்
பன்னெடும் குன்றும் படர் பெரும் கானும் பல பதியும் அந் நிலைத் தானங்கள் ஆயின எல்லாம் அமர்ந்து இறைஞ்சி மன்னு புகலியில் வைதிக வாய்மை மறையவனார் பொன் இயல் வேணிப் புனிதர் பராய்த் துறையுள் புகுந்தார்
நீடும் பராயத் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக் கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோதில் தமிழ்ச் சொல் மாலை பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச் சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்
தொழுது புறம்பு அணைந்து அங்கு நின்று ஏகிச் சுரர் பணிவு உற்று எழு திரு ஆலந்துறை திருச்செந்துறையே முதலா வழுவில் பல் கோயில்கள் சென்று வணங்கி மகிழ்ந்து அணைவார் செழு மலர்ச் சோலைத் திருக் கற்குடி மலை சேர வந்தார்
கற்குடி மாமலை மேல் எழுந்த கனகக் கொழுந்தினைக் கால் வளையப் பொன் திரள் மேருச் சிலை வளைத்த போர் விடையாளியைப் போற்றி இசைத்து நற்றமிழ் மாலை புனைந்து அருளி ஞான சம்பந்தர் புலன்கள் ஐந்தும் செற்றமிழ் மூக்கீச்சரம் பணிந்து திருச்சிராப் பள்ளிச் சிலம்பு அணைந்தார்
செம்மணி வாரி அருவி தூங்கும் சிராப் பள்ளி மேய செழும் சுடரை கைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண் நுதலாரைக் கழல் பணிந்து மெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கிய சொல் தமிழ் மாலை வேய்ந்து மைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவை வணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்
விண்ணவர் போற்றி செய் ஆனைக் காவில் வெண் நாவல் மேவிய மெய்ப் பொருளை நண்ணி இறைஞ்சி முன் வீழ்ந்து எழுந்து நால் கோட்டு நாகம் பணிந்ததுவும் அண்ணல் கோச் செங்கண் அரசன்செய்த அடிமையும் அஞ்சொல் தொடையில் வைத்துப் பண் உறு செந்தமிழ் மாலைப் பாடி பரவி நின்று ஏத்தினர் பான்மையினால்
நாரணன் நான்முகன் காணா உண்மை வெண் நாவல் உண்மை மயேந்திரமும் சீரணி நீடு திருக்கயிலை செல்வத் திருவாரூர் மேய பண்பும் ஆரணத்து உட் பொருள் ஆயினாரை ஆனைக் காவின் கண் புகழ்ந்து பாடி ஏர் அணியும் பொழில் சூழ்ந்த சண்பை ஏந்தலார் எல்லை இல் இன்பம் உற்றார்
கை தொழுது ஏத்திப் புறத்து அணைந்து காமர் பதி அதன் கண் சில நாள் வைகி வணங்கி மகிழ்ந்து அணைவார் மன்னும் தவத்துறை வானவர் தாள் எய்தி இறைஞ்சி எழுந்து நின்றே இன் தமிழ் மாலை கொண்டு ஏத்திப் போந்து வைதிக மாமணி அம்மருங்கு மற்று உள்ள தானம் வழுத்திச் செல்வார்
ஏறு உயர்த்தார் திருப்பாற்றுறையும் எறும்பியூர் மாமலையே முதலா வேறு பதிகள் பலவும் போற்றி விரவும் திருத்தொண்டர் வந்து சூழ ஈறில் புகழ்ச் சண்பை ஆளியார் தாம் எண் திசையோரும் தொழுது இறைஞ்ச நீறணி செம்பவளப் பொருப்பின் நெடுங்கள மா நகர் சென்று சேர்ந்தார்
நெடுங்களத்து ஆதியை அன்பால் நின்பால் நெஞ்சம் செலாவகை நேர் விலக்கும் இடும்பைகள் தீர்த்து அருள் செய்வாய் என்றும் இன் இசை மாலை கொண்டு ஏத்தி ஏகி அடும் பணிச் செஞ்சடையார் பதிகள் அணைந்து பணிந்து நியமம் போற்றிக் கடும் கைவரை உரித்தார் மகிழ்ந்த காட்டுப் பள்ளிப்பதி கை தொழுவார்
சென்று திகழ் திருக்காட்டு பள்ளிச் செம் சடை நம்பர் தம் கோயில் எய்தி முன்றில் வலம் கொண்டு இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கை தொழுவார் கன்று அணை ஆவின் கருத்து வாய்ப்பக் கண் நுதலாரை முன் போற்றி செய்து மன்றுள் நின்று ஆடல் மனத்துள் வைப்பார் வாரு மன்னும் முலை பாடி வாழ்ந்தார்
அங்கு அப்பதி நின்று எழுந்தருளி அணிந்திரு வாலம் பொழில் வணங்கி பொங்கு புனல் பொன்னிப் பூந்துருத்தி பொய் இலியாரைப் பணிந்து போற்றி எங்கும் நிகழ் திருத் தொண்டர் குழாம் எதிர் கொள்ள எப்பதியும் தொழுது செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக் கண்டியூர் தொழச் சென்று அணைந்தார்
கண்டியூர் வீரட்டர் கோயில் எய்திக் கலந்து அடியாருடன் காதல் பொங்கக் கொண்ட விருப்புடன் தாழ்ந்து இறைஞ்சிக் குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால் தொண்டர் குழாத்தினை நோக்கி நின்று தொடுத்த இசைத்தமிழ் மாலை தன்னில் அண்டர் பிரான் தன் அருளின் வண்ணம் அடியார் பெருமையில் கேட்டு அருளி
வினவி எடுத்த திருப் பதிகம் மேவு திருக்கடைக் காப்பு தன்னில் அனைய நினைவு அரியேன் செயலை அடியாரைக் கேட்டு மகிழ்ந்த தன்மை புனைவுறு பாடலில் போற்றி செய்து போந்து புகலிக் கவுணியனார் துனை புனல் பொன்னித் திரை வலம் கொள் சோற்றுத் துறை தொழச் சென்று அடைவார்
. அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்று ஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால் செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார் முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்
தொல்லை நீள் திருச் சோற்றுத் துறை உறை செல்வர் கோயில் வலம் கொண்டு தேவர்கள் அல்லல் தீர்க்க நஞ்சு உண்ட பிரான் அடி எல்லையில் அன்பு கூர இறைஞ்சினார்
இறைஞ்சி ஏத்தி எழுந்து நின்று இன் இசை நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவி அங்கு உறைந்து வந்து அடியாருடன் எய்தினார் சிறந்த சீர்த் திரு வேதிக் குடியினில்
வேத வேதியர் வேதி குடியினில் நாதர் கோயில் அணைந்து நலம் திகழ் பாத பங்கயம் போற்றிப் பணிந்து எழுந்து ஓதினார் தமிழ் வேதத்தின் ஓங்கு இசை
எழுது மா மறையாம் பதிகத்து இசை முழுதும் பாடி முதல்வரைப் போற்றி முன் தொழுது போந்து வந்து எய்தினார் சோலை சூழ் பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்
வெண்ணி மேய விடையவர் கோயிலை நண்ணி நாடிய காதலின் நாண் மதிக் கண்ணியார் தம் கழல் இணை போற்றியே பண்ணில் நீடும் பதிக முன் பாடினார்
பாடி நின்று பரவிப் பணிந்து போய் ஆடும் அங்கணர் கோயில் அங்கு உள்ளன மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர் நீடு சண்பை நிறை புகழ் வேதியர்
மொய் தரும் சோலை சூழ் முளரி முள்ளடவி போய் மெய் தரும் பரிவிலான் வேள்வியைப் பாழபடச் செய்த சங்கரர் திருச்சக்கரப் பள்ளி முன் பெய்தவம் அருளினார் இயல் இசைத் தலைவனார்
சக்கரப் பள்ளியார் தம் திருக் கோயில் உள் புக்கு அருத்தியின் உடன் புனை மலர்த் தாள் பணிந்து அக்கரைப் பரமர்பால் அன்பு உறும் பரிவு கூர் மிக்க சொல் தமிழினால் வேதமும் பாடினார்
தலைவர் தம் சக்கரப் பள்ளி தன் இடை அகன்று அலைபுனல் பணைகளின் அருகு போய் அருமறைப் புலன் உறும் சிந்தையார் புள்ள மங்கைப் பதி குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்
மன்னும் அக் கோயில் சேர் மான் மறிக் கையர்தம் பொன் அடித்தலம் உறப் புரிவொடும் தொழுது எழுந்து இன் இசைத் தமிழ் புனைந்து இறைவர் சேல் ஊருடன் பன்னு பாலைத் துறைப் பதி பணிந்து ஏகினார்
காவின் மேல் முகில் எழும் கமழ் நறும் புறவு போய் வாவி நீடு அலவன் வாழ் பெடை உடன் மலர் நறும் பூவின் மேல் விழை உறும் புகலியார் தலைவனார் சேவின் மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்
மன்றலங் கழனி சூழ் திரு நலூர் மறைவலோர் துன்று மங்கல வினைத் துழனியால் எதிர் கொளப் பொன் தயங்கு ஒளி மணிச் சிவிகையில் பொலிவு உறச் சென்று அணைந்து அருளினார் சிரபுரச் செம்மலார்
நித்திலச் சிவிகை மேல் நின்று இழிந்து அருளியே மொய்த்த அந்தணர் குழாம் முன் செலப் பின் செலும் பத்தரும் பரிசனங்களும் உடன் பரவவே அத்தர் தம் கோபுரம் தொழுது அணைந்து அருளினார்
வெள்ளி மால் வரையை நேர் விரிசுடர்க் கோயிலைப் பிள்ளையார் வலம் வரும் பொழுதினில் பெருகு நீர் வெள்ள ஆனந்தம் பொழிய மேல் ஏறி நீர் துள்ளுவார் சடையரைத் தொழுது முன் பரவுவார்
பரவு சொல் பதிகம் முன் பாடினார் பரிவுதான் வர அயர்த்து உருகு நேர் மனன் உடன் புறம் அணைந்து அரவு உடைச் சடையர் பேர் அருள் பெறும் பெருமையால் விரவும் அப்பதி அமர்ந்து அருளியே மேவினார்
அன்ன தன்மையில் அப்பதியினில் அமர்ந்து அருளி மின் நெடும் சடை விமலர் தாள் விருப்பொடு வணங்கிப் பன்னும் இன்னிசைப் பதிகமும் பல முறை பாடி நல் நெடும் குல நான் மறையவர் தொழ நயந்தார்
நீடும் அப்பதி நீங்குவார் நிகழ் திருநல்லூர் ஆடுவார் திரு அருள் பெற அகன்று போந்து அங்கண் மாடும் உள்ளன வணங்கியே பரவி வந்து அணைந்தார் தேடும் மால் அயற்கு அரியவர் திருக்கருகாவூர்
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச் சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே அந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்று சிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்
பதிக இன் இசை பாடிப் போய்ப் பிறப்பதி பலவும் நதி அணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள் அதிர் சிலம்பு அடியார் மகிழ் அவள் இவள் நல்லூர்
. மன்னும் அப்பதி வானவர் போற்றவும் மகிழ்ந்த தன்மையார் பயில் கோயில் உள் தம்பரிசு உடையார் என்னும் நாமமும் நிகழ்ந்திட ஏத்தி முன் இறைஞ்சிப் பன்னு சீர்ப் பதி பலவும் அப்பால் சென்று பணிவார்
பழுது இல் சீர்த் திருப் பரிதி நல் நியமும் பணிந்து அங்கு எழுது மாமறையாம் பதிகத்து இசை போற்றி முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே முறைமை வழுவு இலார் திருப்பூவனூர் வணங்கி வந்து அணைந்து
பொங்கு காதலில் போற்றி அங்கர் அருளுடன் போந்து பங்கயத் தடம் பணைப் பதி பலவும் முன் பணிந்தே எங்கும் அன்பர்கள் ஏத்து ஒலி எடுக்க வந்து அணைந்தார் அங்கணர்க்கு இடம் ஆகிய பழம்பதி ஆவூர்
பணியும் அப்பதிப் பசுபதி ஈச்சரத்தின் இனிது இருந்த மணியை உள் புக்கு வழிபடும் விருப்பினால் வணங்கித் தணிவு இல் காதலினால் தண் தமிழ் மாலைகள் சாத்தி அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்
மறை விளங்கும் அப்பதியினில் மணிகண்டர் பொன் தாள் நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர் நிலவும் பிறை அணிந்தவர் அருள் பெறப் பிரச மென் மலர் வண்டு அறை நறும் பொழில் திரு வலம் சுழியில் வந்து அணைந்தார்
மதி புணைந்தவர் வலம் சுழி மருவு மாதவத்து முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர் தம் முன் வந்து எதிர் கொள் போழ்தினில் இழிந்தவர் எதிர் செல மதியைக் கதிர் செய் வெண் முகில் குழாம் புடை சூழ்ந்தெனக் கலந்தார்
கலந்த அன்பர்கள் தொழுது எழக் கவுணிய தலைவர் அலர்ந்த செம் கமலக் கரம் குவித்து உடன் அணைவார் வலம் சுழிப் பெருமான் மகிழ் கோயில் வந்து எய்திப் பொலம் கொள் நீள் சுடர்க் கோபுரம் இறைஞ்சி உள் புகுந்தார்
மருவலார் புரம் முனிந்தவர் திரு முன்றில் வலம் கொண்டு உருகும் அன்புடன் உச்சி மேல் அஞ்சலியினராய்த் திருவலம் சுழி உடையவர் சேவடித் தலத்தில் பெருகும் ஆதரவு உடன் பணிந்து எழுந்தனர் பெரியோர்
ஞான போனகர் நம்பர் முன் தொழுது எழும் விருப்பால் ஆன காதலில் அங்கணவர் தமை வினவும் ஊனமில் இசையுடன் விளங்கிய திருப்பதிகம் பான் அலார் மணிகண்டரைப் பாடினார் பரவி
புலன் கொள் இன் தமிழ் போற்றினர் புறத்தினில் அணைந்தே இலங்கு நீர்ப் பொன்னி சூழ் திருப்பதியினில் இருந்து நலம் கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி வலம் சுழிப் பெருமான் தொண்டர் தம் உடன் மகிழ்ந்தார்
மகிழ்ந்த தன்தலை வாழும் அந் நாள் இடை வானில் திகழ்ந்த ஞாயிறு துணைப் புணர் ஓரை உள் சேர்ந்து நிகழ்ந்த தன்மையில் நிலவும் ஏழ் கடல் நீர்மை குன்ற வெகுண்டு வெம் கதிர் பரப்பலின் முதிர்ந்தது வேனில்
தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர் நண்புடைத் துணை நகை மணி முத்தணி நாளும் உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப
அறல் மலியும் கான் ஆற்றின் நீர் நசையால் அணையுமான் பெறல் அரிய புனல் என்று பேத்தேரின் பின் தொடரும் உறை உணவு கொள்ளும் புள் தேம்பிஅயல் இரை தேரும் பறவை சிறை விரித்து ஒடுங்கப் பனிப் புறத்து வதியுமால்
நீண் நிலை மாளிகை மேலும் நிலா முன்றின் மருங்கினும் வாண் நிழல் நல் சோலையிலும் மலர் வாவிக் கரை மாடும் பூண் நிலவு முத்து அணிந்த பூங்குழலார் முலைத் தடத்தும் காணும் மகிழ்ச்சியின் மலர்ந்து மாந்தர் கலந்து உறைவாரால்
மயில் ஒடுங்க வண்டு ஆட மலர்க் கமல முகை விரிய குயில் ஒடுங்காச் சோலையின் மென் தளிர் கோதிக் கூவி எழத் துயில் ஒடுங்கா உயிர் அனைத்தும் துயில் பயிலச் சுடர் வானில் வெயில் ஒடுங்கா வெம்மை தரும் வேனில் விரி தரு நாளில்
சண்பை வரும் பிள்ளையார் சடா மகுடர் வலம் சுழியை எண் பெருகத் தொழுது ஏத்திப் பழையாறை எய்துதற்கு நண்பு உடைய அடியார்களுடன் போத நடந்து அருளி விண் பொரு நீள் மதிள் ஆறை மேல் தளி சென்று எய்தினார்
திருவாறை மேல் தளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின் உருவாளன் அடிவணங்கி உருகிய அன்பொடு போற்றி மருவாரும் குழல் மலையாள் வழிபாடு செய்ய அருள் தருவார் தம் திரு சத்தி முற்றத்தின் புறம் சேர்ந்தார்
திருச் சத்தி முற்றத்தில் சென்று எய்தித் திருமலையாள் அருச்சித்த சேவடிகள் ஆர்வம் உறப் பணிந்து ஏத்திக் கருச் சுற்றில் அடையாமல் கை தருவார் கழல் பாடி விருப்பு உற்றுத் திருப் பட்டீச்சரம் பணிய மேவும் கால்
வெம்மை தரு வேனில் இடை வெயில் வெப்பம் தணிப்பதற்கு மும்மை நிலைத் தமிழ் விரகர் முடிமீதே சிவபூதம் தம்மை அறியாதபடி தண் தரளப் பந்தர் எடுத்து எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டீசர் என்று இயம்ப
அவ்வுரையும் மணி முத்தின் பந்தரும் ஆகாயம் எழச் செவ்விய மெய்ஞ்ஞானம் உணர் சிரபுரத்துப் பிள்ளையார் இவ் வினைதான் ஈசர் திரு அருளால் ஆகில் இசைவது என மெய் விரவு புளகம் உடன் மேதினியின் மிசைத் தாழ்ந்தார்
அது பொழுதே அணி முத்தின் பந்தரினை அருள் சிறக்கக் கதிர் ஒளிய மணிக் காம்பு பரிசனங்கள் கைக் கொண்டார் மதுர மொழி மறைத் தலைவர் மருங்கு இமையோர் பொழிவாசப் புது மலரால் அப்பந்தர் பூம் பந்தரும் போலும்
தொண்டர் குழாம் ஆர்ப்பு எடுப்பச் சுருதிகளின் பெருந்துழனி எண் திசையும் நிறைந்து ஓங்க எழுந்து அருளும் பிள்ளையார் வெண் தரளப் பந்தர் நிழல் மீது அணையத் திருமன்றில் அண்டர்பிரான் எடுத்த திருவடி நீழல் என அமர்ந்தார்
பாரின் மிசை அன்பர் உடன் வருகின்றார் பன்னகத்தின் ஆரம் அணிந்தவர் தந்த அருள் கருணைத் திறம் போற்றி ஈர மனம் களி தழைப்ப எதிர் கொள்ள முகம் மலர்ந்து சேர வரும் தொண்டர் உடன் திருப்பட்டீச்சரம் அணைந்தார்
சென்று அணைந்து திருவாயில் புறத்து இறைஞ்சி உள்புக்கு வென்றி விடையவர் கோயில் வலம் கொண்டு வெண் கோட்டுப் பன்றி கிளைத்து அறியாத பாத தாமரை கண்டு முன் தொழுது விழுந்து எழுந்து மொழி மாலை போற்றி இசைத்தார்
அருள் வெள்ளத் திறம் பரவி அளப்பரய ஆனந்தப் பெரு வெள்ளத்து இடை மூழ்கிப் பேராத பெருங்காதல் திரு உள்ளப் பரிவுடனே செம்பொன் மலை வல்லியார் தரு வள்ளத்து அமுது உண்ட சம்பந்தர் புறத்து அணைந்தார்
அப்பதியில் அமர்கின்ற ஆளுடைய பிள்ளையார் செப்பரும் சீர் திருவாறை வட தளியில் சென்று இறைஞ்சி ஒப்பு அரிய தமிழ் பாடி உடன் அமரும் தொண்டரொடு எப்பொருளுமாய் நின்றார் இரும் பூளை எய்தினார்
தேவர் பிரான் அமர்ந்த திரு இரும் பூளை சென்று எய்தக் காவண நீள் தோரணங்கள் நாட்டி உடன் களி சிறப்பப் பூவண மாலைகள் நாற்றிப் பூரண பொன் குடம் நிரைத்து அங்கு யாவர்களும் போற்றி இசைப்பத் திருத் தொண்டர் எதிர் கொண்டார்
வண் தமிழின் மொழி விரகர் மணிமுத்தின் சிவிகையினைத் தொண்டர் குழாத்து எதிர் இழிந்து அங்கு அவர் தொழத் தாமும் தொழுதே அண்டர்பிரான் கோயிலினை அணைந்து இறைஞ்சி முன் நின்று பண்டு அரும் இன் இசைப் பதிகம் பரம் பொருளைப் பாடுவார்
நிகர் இலா மேருவரை அணுவாக நீண்டானை நுகர்கின்ற தொண்டர் தமக்கு அமுதாகி நொய்யானை தகவு ஒன்ற அடியார்கள் தமை வினவித் தமிழ் விரகர் பகர்கின்ற அருமறையின் பொருள் விரியப் பாடினார்
பாடும் அரதைப் பெரும் பாழியே முதலாகச் சேடர் பயில் திருச்சேறை திருநாலூர் குட வாயில் நாடிய சீர் நறையூர் தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி நீடு தமிழ் தொடை புனைந்து அந்நெடு நகரில் இனிது அமர்ந்தார்
அங்கண் இனிது அமரு நாள் அடல் வெள் ஏனத்து உருவாய் செங்கண் நெடுமால் பணியும் சிவபுரத்துச் சென்று அடைந்து கங்கைச் சடை கரந்தவர் தம் கழல் வணங்கிக் காதலினால் பொங்குமிசைத் திருப்பதிகம் முன் நின்று போற்றி இசைத்தார்
போற்றி இசைத்துப் புனிதர் அருள் பெற்றுப் போந்து எவ் உயிரும் தோற்றுவித்த அயன் போற்றும் தோணிபுரத்து அண்ணனார் ஏற்றும் இசை ஏற்று உகந்த இறைவர் தமை ஏத்துதற்கு நாற்றிசை யோர் பரவும் திருக் குடமூக்கு நண்ணினார்
தேமருவு மலர்ச் சோலைத்திரு குடமூக்கினில் செல்வ மாமறையோர் பூந்தராய் வள்ளலார் வந்து அருளத் தூமறையின் ஒலி பெருகத் தூரிய மங்கலம் முழங்க கோ முறைமை எதிர் கொண்டு தம்பதி உள் கொடு புக்கார்
திருஞான சம்பந்தர் திருக்குட மூக்கினைச் சேர வருவார் தம் பெருமானை வண் தமிழின் திருப்பதிகம் உருகா நின்று உளம் மகிழ்க் குட மூக்கை உவந்து இருந்த பெருமான் எம் இறை என்று பெருகு இசையால் பரவினார்
வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளை சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டருடன் செல்வார் அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரொடும் கந்த மலர் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்
பூ மருவும் கங்கை முதல் புனிதமாம் பெரும் தீர்த்தம் மா மகம் தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் தூ மருவும் மலர்க் கையால் தொழுது வலம் கொண்டு அணைந்து காமர் கெட நுதல் விழித்தார் கழல் பணிந்து கண் களித்தார்
கண்ணாரும் அருமணியைக் காரோணத்து ஆர் அமுதை நண்ணாதார் புரம் எரித்த நான் மறையின் பொருளானைப் பண் ஆர்ந்த திருப்பதிகம் பணிந்து ஏத்திப் பிறபதியும் எண் ஆர்ந்த சீர் அடியார் உடன் பணிவுற்று எழுந்து அருளி
. திரு நாசேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக் குன்றை கரு நாகத்து உரி புணைந்த கண் நுதலைச் சென்று இறைஞ்சி அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள் செய்து பெரு ஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்தின் புற்றார்
மா நாகம் அர்ச்சித்த மலர் கமலத் தாள் வணங்கி நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி பால் நாறும் மணி வாயார் பரமர் திருவிடை மருதில் பூ நாறும் புனல் பொன்னித் தடங்கரை போய் புகுகின்றார்
ஓங்கு திருப்பதிகம் ஓடேகலன் என்று எடுத்து அருளித் தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலை சிறக்கும் தன்மையினால் ஈங்கு எனை ஆளுடைய பிரான் இடை மருது ஈதோ என்று பாங்கு உடைய இன் இசையால் பாடி எழுந்து அருளினார்
அடியவர்கள் எதிர் கொள்ள எழுந்து அருளி அங்கு அணைந்து முடிவில் பரம் பொருள் ஆனார் முதல் கோயில் முன் இறைஞ்சிப் படியில் வலம் கொண்டு திரு முன்பு எய்திப் பார் மீது நெடிது பணிந்து எழுந்து அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய
பரவுறு செந்தமிழ்ப் பதிகம் பாடி அமர்ந்த அப்பதியில் விரவுவார் திருப்பதிகம் பல பாடி வெண் பதியோடு அரவு சடைக்கு அணிந்தவர் தம் தாள் போற்றி ஆர்வத்தால் உரவு திருத் தொண்டருடன் பணிந்து ஏத்தி உறையும் நாள்
மருங்கு உள நல் பதிகள் பல பணிந்து மா நதிக்கரை போய்க் குரங்கு ஆடு துறை அணைந்து குழகனார் குரை கழல்கள் பெரும் காதலினால் பணிந்து பேணிய இன்னிசை பெருக அரும் கலை நூல் திருப்பதிகம் அருள் செய்து
அம் மலர்த் தடம் பதிபணிந்து அகன்று போந்து அருகு கைம்மலர்க் களத்து இறைவர் தம் கோயில்கள் வணங்கி நம் மலத்துயர் தீர்க்க வந்து அருளிய ஞானச் செம்மலார் திரு ஆவடு துறையினைச் சேர்ந்தார்
மூவர்க்கு அறிவரும் பொருள் ஆகிய மூலத் தேவர் தம் திரு ஆவடு துறைத் திருத் தொண்டர் பூ அலம்பு தண் பொரு புனல் தடம் பணைப் புகலிக் காவலர்க்கு எதிர் கொள்ளும் ஆதரவு உடன் கலந்தார்
வந்து அணைவார் தொழா முனம் மலர் புகழ்ச் சண்பை அந்தணர்க்கு எலாம் அருமறைப் பொருள் என வந்தார் சந்த நித்திலச் சிவிகை நின்று இழிந்து எதிர் தாழ்ந்தே சிந்தை இன்புற இறைவர் தம் கோயில் முன் சென்றார்
நீடு கோபுரம் இறைஞ்சி உள் புகுந்து நீள் நிலையான் மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கி ஆடும் ஆதியை ஆவடு துறையுள் ஆர் அமுதை நாடு காதலில் பணிந்து எழுந்து அரும் தமிழ் நவின்றார்
அன்பு நீடிய அருவி கண் பொழியும் ஆர்வத்தால் முன்பு போற்றியே புறம்பு அணை முத்தமிழ் விரகர் துன்பு போம் மனத் திருத்தொண்டர் தம்முடன் தொழுதே இன்பம் மேவி அப்பதியினில் இனிது அமர்ந்து இருந்தார்
மேவி அங்கு உறை நாளினில் வேள்வி செய்வதனுக்கு ஆவது ஆகிய காலம் வந்து அணை உற அணைந்து தாவில் சண்பையர் தலைவர்க்குத் தாதையார் தாமும் போவதற்கு அரும் பொருள் பெற எதிர் நின்று புகன்றார்
தந்தையார் மொழி கேட்டலும் புகலியார் தலைவர் முந்தை நாளிலே மொழிந்தமை நினைந்து அருள் முன்னி அந்தமில் பொருள் ஆவன ஆவடு துறையுள் எந்தையார் அடித் தலங்கள் அன்றோ என எழுந்தார்
சென்று தேவர் தம்பிரான் மகிழ் கோயில் முன்பு எய்தி நின்று போற்றுவார் நீள் நிதி வேண்டினார்க்கு ஈவது ஒன்றும் மற்றிலேன் உன்னடி அல்லது ஒன்று அறியேன் என்று பேர் அருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்
எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர் தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார் மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்தி அடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்
நச்சி இன் தமிழ் பாடிய ஞான சம்பந்தர் இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால் அச் சிறப்பு அருள் பூதம் முன் விரைந்த கல் பீடத்து உச்சி வைத்தது பசும் பொன் ஆயிரக் கிழி ஒன்று
வைத்த பூதம் அங்கு அணைந்து முன் நின்று நல் வாக்கால் உய்ந்த இக்கிழி பொன் உலவாக் கிழி உமக்கு நித்தனார் அருள் செய்தது என்று உரைக்க நேர் தொழுதே அத்தனார் திரு அருள் நினைந்து தவ மேனி மேல் பணிந்தார்
பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள் துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் தணிந்த சிந்தை அத் தாதையார்க்கு அளித்து உரைசெய்வார்
ஆதி மாமறை விதியினால் ஆறு சூழ் வேணி நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி தீது நீங்க நீர் செய்யவும் திருக் கழுமலத்து வேத வேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்
என்று கூறி அங்கு அவர்தமை விடுத்த பின் அவரும் நன்றும் இன்புறும் மனத்தொடும் புகலி மேல் நண்ண வென்றி ஞான சம்பந்தரும் விருப்பொடு வணங்கி மன்றல் ஆவடு துறையினில் மகிழ்ந்து இனிது இருந்தார்
அண்ணலார் திரு ஆவடுதுறை அமர்ந்தாரை உள் நிலாவிய காலினால் பணிந்து உறைந்து மண் எலாம் உய வந்தவர் போந்து வார் சடைமேல் தெள் நிலா அணிவார் திருக் கோழம்பம் சேர்ந்தார்
கொன்றைவார் சடைமுடியரைக் கோழம்பத்து இறைஞ்சி என்றும் நீடிய இன் இசைப் பதிகம் முன் இயம்பி மன்று உளார் மகிழ் வைகல் மாடக் கோயில் மருங்கு சென்று சார்ந்தனர் திருவளர் சிரபுரச் செல்வர்
வைகல் நீடு மாடக் கோயில் மன்னிய மருந்தைக் கைகள் அஞ்சலி கொண்டு தாழ்ந்து எழுந்து கண் அருவி செய்ய இன் இசைச் செந்தமிழ் மாலைகள் மொழிந்து நையும் உள்ளத்தர் ஆய்த்திரு நல்லத்தில் நண்ணி
நிலவு மாளிகைத் திரு நல்லம் நீடு மாமணியை இலகு சேவடி இறைஞ்சி இன் தமிழ் கொடு துதித்துப் பலவும் ஈசர் தம் திருப்பதி பணிந்து செல்பவர் தாம் அலை புனல் திருவழுந்தூர் மாடக் கோயில் அடைந்தார்
மன்னுமாடம் மகிழ்ந்த வான் பொருளினை வணங்கிப் பன்னு பாடலில் பதிக இன் இசை கொடு பரவிப் பொன்னி மா நதிக் கரையினில் மீண்டு போந்து அணைந்து சொன்னவாறு அறிவார் தமைத் துருத்தியில் தொழுதார்
திரைத் தடம் புனல் பொன்னி சூழ் திருத்துருத்தியினில் வரைத்தலைப் பசும் பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம் உரைத்து மெய் உறப் பணிந்து போந்து உலவும் அந்நதியின் கரைக் கண் மூவலூர்க் கண் நுதலார் கழல் பணிந்தார்
. மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால் மேவு காதலில் ஏத்தியே விருப்பொடும் போந்து பூ அலம்பு தண் புனல் பணைப் புகலியார் தலைவர் வாவி சூழ் திரு மயிலாடு துறையினில் வந்தார்
மல்கு தண் தலை மயிலாடு துறையினில் மருவும் செல்வ வேதியர் தொண்டரொடு எதிர் கொளச் சென்று கொல்லை மான்மறிக் கையரைக் கோயில் புக்கு இறைஞ்சி எல்லை இல்லதோர் இன்பம் முன் பெருகிட எழுந்தார்
உள்ளம் இன்புற உணர் உறும் பரிவு கொண்டு உருகி வெள்ளம் தாங்கிய சடையரை விளங்கு சொல் பதிகத் தெள்ளும் இன்னிசைத் திளைப்பொடும் புறத்து அணைந்து அருளி வள்ளலார் மற்ற வளம் பதி மருவுதல் மகிழ்ந்தார்
அத்திருப்பதி அன்று போய் அணிகிளர் சூலங் கைத்தலப் படை வீரர் செம் பொன் பள்ளி கருதி மெய்த்த காதலில் விள நகர் விடையவர் பாதம் பத்தர் தம் உடன் பணிந்து இசைப் பதிகம் முன் பகர்ந்தார்
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும் தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும் காடு கொண்ட செம் சடைமுடிக் கடவுளர் கருது நீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்
பரமர் தம் திருப் பறியலூர் வீரட்டம் பரவி விரவு காதலின் வேலையின் கரையினை மேவி அரவு அணிந்தவர் பதி பல அணைந்து முன் வணங்கிச் சிரபுரத்தவர் திருத்தொண்டர் எதிர் கொளச் செல்வார்
அடியவர்கள் களி சிறப்பத் திருவேட்டக்குடி பணிந்து அங்கு அலைவாய்ப் போகிக் கடி கமழும் மலர் பழனக் கழிநாடு அகன் பதிகள் கலந்து நீங்கிக் கொடி மதில் சூழ் தரும புரம் குறுகினார் குண்டர் சாக்கியர் தம் கொள்கை படி அறியப் பழுது என்றே மொழிந்து உய்யும் நெறி காட்டும் பவள வாயர்
தருமபுரம் பெரும்பாணர் திருத்தாயர் பிறப்பு இடம் ஆம் அதனால் சார வரும் அவர் தம் சுற்றத்தார் வந்து எதிர் கொண்டு அடி வணங்கி வாழ்த்தக் கண்டு பெருமை உடைப் பெரும்பாணர் அவர்க்கு
உரைப்பார் பிள்ளையார் அருளிச் செய்த
அருமை உடைப் பதிகம் தாம் யாழினால் பயிற்றும் பேறு அருளிச் செய்தார்
கிளைஞரும் மற்று அது கேட்டுக் கெழுவு திரு பதிகத்திற்கு கிளர்ந்த ஓசை அளவு பெறக் கருவியில் நீர் அமைத்து இயற்றும் அதனாலே அகிலம் எல்லாம் வளர இசை நிகழ்வது என விளம்புதலும் வளம் புகலி மன்னர் பாதம் உளம் நடுங்கிப் பணிந்து திருநீல கண்டப் பெரும்பாணர் உணர்த்து கின்றார்
அலகில் திருப்பதிக இசை அளவு படா வகை இவர்கள் அன்றி ஏயும் உலகில் உளோரும் தெரிந்து அங்கு உண்மையினை அறிந்து உய்ய உணர்த்தும் பண்பால் பலர் புகழும் திருப்பதிகம் பாடி அருளப் பெற்றால் பண்பு நீடி இலகும் இசை யாழின்கண் அடங்காமையான் காட்டப் பெறுவன் என்றார்
வேத நெறி வளர்பவரும் விடையவர் முன் தொழுது திருப்பதிகத்து உண்மை பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலும் நிலத்த நூல் புகன்ற பேத நாத இசை முயற்சிகளால் அடங்காத வகை காட்ட நாட்டுகின்றார் மாதர் மடப்பிடி பாடி வணங்கினார் வானவரும் வணங்கி ஏத்த
வண் புகலி வேதியனார் மாதர் மடப்பிடி எடுத்து வனப்பில் பாடிப் பண் பயிலும் திருக்கடைக் காப்பு சாத்த அணைந்து பெரும் பாணர் தாம் நண்புடை யாழ்க் கருவியினில் முன்பு போல் கைக்கொண்டு நடத்தப்புக்கு எண் பெருகும் அப் பதிகத்து இசை நரம்பில் இட அடங்கிற்று இல்லை அன்றே
அப்பொழுது திருநீல கண்ட இசைப் பெரும்பாணர் அதனை விட்டு மெய்ப் பயமும் பரிவும் உறப் பிள்ளையார் கழல் இணை வீழ்ந்து நோக்கி இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசை யாழில் ஏற்பன் என்னச் செப்பியது இக் கருவியை நான் தொடுதலின் நன்றோ என்று தெளிந்து செய்வார்
வீக்கு நரம்பு உடையாழினால் விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்க ஓக்குதலும் தடுத்து அருளி ஐயரே உற்ற இசை அளவினால் நீர் ஆக்கிய இக்கருவியினைத் தாரும் என வாங்கிக் கொண்டு அவனி செய்த பாக்கியத்தின் மெய் வடிவாம் பால் அறா வாயர் பணித்து அருளுகின்றார்
451. ஐயர் நீர் யாழ் இதனை முரிக்கும் அதென் ஆள் உடையாள் உடனே கூடச் செய்ய சடையார் அளித்த திருவருளின் பெருமை எலாம் தெரிய நம்பால் எய்திய இக் கருவியினில் அளவு படுமோ நம் தம் இயல்புக்கு ஏற்ப வையகத்தோர் அறிவு உற இக்கருவி அளவையின் இயற்றல் வழக்கே என்றார்
சிந்தையால் அளவு படா இசைப் பெருமை செயல் அளவில் எய்துமோ நீர் இந்த யாழினைக் கொண்டே இறைவர் திருப் பதிக இசை இதனில் எய்த வந்தவாறே பாடி வாசிப்பீர் எனக் கொடுப்பப் புகலி மன்னர் தந்த யாழினைத் தொழுது கைக் கொண்டு பெரும் பாணர் தலை மேல் கொண்டார்
அணைவுறும் அக் கிளைஞர் உடன் பெரும் பாணர் ஆள் உடைய பிள்ளையார் தம் துணை மலர்ச் சேவடி பணிந்து துதித்து அருளத் தோணிபுரத் தோன்றலாரும் இணையில் பெரும் சிறப்பு அருளித் தொண்டருடன் அப்பதியில் இனிது மேவிப் பணை நெடும் கை மதயானை உரித்தவர் தம் பதி பிறவும் பணியச் செல்வார்
பங்கய பாசடைத் தடம் சூழ் பழன நட்டு அகன் பதிகள் பலவும் நண்ணி மங்கை ஒரு பாகத்தார் மகிழ் கோயில் எனைப் பலவும் வணங்கிப் போற்றித் தங்கி இசை யாழ்ப் பெரும் பாணர் உடன் மறையோர் தலைவனார் சென்று சார்ந்தார் செங்கை மான் மழு ஏந்தும் சின விடையார் அமர்ந்து அருளும் திரு நள்ளாறு
நள்ளாற்றில் எழுந்து அருள நம்பர் திருத்தொண்டர் குழாம் நயந்து சென்று கொள்ளாற்றில் எதிர் கொண்டு குலவி உடன் சூழ்ந்து அணையக் குறுகிக் கங்கைத் தெள்ளாற்று வேணியர் தம் திருவளர் கோபுரம் இறைஞ்சிச் செல்வக் கோயில் உள்ளாற்ற வலம் கொண்டு திருமுன்பு தாழ்ந்து எழுந்தார் உணர்வின் மிக்கார்
உருகிய அன்புறு காதல் உள் உருகி நனை ஈரம் பெற்றால் போல மருவு திருமேனி எலாம் முகிழ்த்து எழுந்த மயிர்ப் புளகம் வளர்க்கும் நீராய் அருவி சொரி திரு நயனத்து ஆனந்த வெள்ளம் இழிந்து அலைய நின்று பொருவில் பதிகம் போகம் ஆர்த்த பூண் முலையாள் என்று எடுத்துப் போற்றி
யாழ்நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண்ணில் கற்பச் சேணளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்பு சாத்திச் செங்கண் நாகப் பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும் பாணனார் யாழில் இடப் பால் அறா வாயர் அருள் பணித்த போது
பிள்ளையார் திருத்தாளம் கொடு பாடப் பின்பு பெரும் பாணனார் தாம் தெள் அமுத இன் இசையின் தேம் பொழி தந்திரி யாழை சிறக்க வீக்கிக் கொள்ள இடும் பொழுதின் கண் குவலத்தோர் களிகூரக் குலவு சண்பை வள்ளலார் திரு உள்ளம் மகிழ்ந்து திருத் தொண்டர் உடன் மருவும் காலை
மன்னு திரு நள்ளாற்று மருந்தை வணங்கிப் போந்து வாச நன்னீர்ப் பொன்னி வளம் தரு நாட்டுப் புறம்பு அணை சூழ் திருப்பதிகள் பலவும் போற்றிச் செந் நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச் சாத்த மங்கை மூதூர் தன்னில் எழுந்து அருளினார் சைவ சிகா மணியார் மெய்த் தவத்தோர் சூழ
நிறை செல்வத் திருச்சாத்த மங்கையினில் நீல நக்கர் தாமும் சைவ மறையவனார் எழுந்து அருளும் படி கேட்டு வாழ்ந்து வழி விளக்கி எங்கும் துறை மலி தோரணம் கதலி கமுகு நிறை குடம் தூப தீபம் ஆக்கி முறைமையில் வந்து எதிர் கொள்ள உடன் அணைந்து முதல்வனார் கோயில் சார்ந்தார்
அயவந்தி அமர்ந்து அருளும் அங்கணர் தம் கோயில் மருங்கு அணைந்து வானோர் உயவந்தித்து எழு முன்றில் புடை வலம் கொண்டு உள்புக்கு ஆறு ஒழுகும் செக்கர் மய வந்தி மதிச் சடையார் முன் தாழ்ந்து மாதவம் இவ் வையம் எல்லாம் செய வந்த அந்தணனார் செங்கைமேல் குவித்து எழுந்து திருமுன் நின்றார்
போற்றி இசைக்கும் பாடலினால் பொங்கி எழும் ஆதரவு பொழிந்து விம்ம ஏற்றின் மிசை இருப்பவர் தம் எதிர் நின்று துதித்துப் போந்து எல்லை இல்லா நீற்று நெறி மறையவனார் நீல நக்கர் மனையில் எழுந்து அருளி அன்பால் ஆற்றும் விருந்தவர் அமைப்ப அன்பருடன் இன்புற்று அங்கு அமுது செய்தார்
நீடு திரு நீல நக்கர் நெடு மனையில் விருந்து அமுது செய்து நீர்மைப் பாடும் யாழ்ப் பெரும் பாணரும் தங்க அங்கு இரவு பள்ளி மேவி ஆடும் அவர் அயவந்தி பணிவதனுக்கு அன்பருடன் அணைந்து சென்று நாடிய நண்புடை நீல நக்க அடிகளுடன் நாதர் கழலில் தாழ்ந்து
கோது இலா ஆர் அமுதைக் கோமளக் கொம்புடன் கூடக் கும்பிட்டு ஏத்தி ஆதி ஆம் மறைப் பொருளால் அரும் தமிழின் திருப்பதிகம் அருளிச் செய்வார் நீதியால் நிகழ்கின்ற நீல நக்கர் தம் பெரும் சீர் நிகழ வைத்துப் பூதி சாதனர் பரவும் புனித இயல் இசைப் பதிகம் போற்றி செய்தார்
பரவிய காதலில் பணிந்து பால் அறா வாயர் புறத்து அணைந்து பண்பு விரவிய நண்பு உடை அடிகள் விருப்பு உறு காதலில் தங்கி மேவும் நாளில் அரவு அணிந்தார் பதி பிறவும் பணிய எழும் ஆதரவால் அணைந்து செல்வார் உரவு மனக் கருத்து ஒன்றாம் உள்ளம் உடையவர்க்கு விடை உவந்து நல்கி
மற்றவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம் பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக் கண் நுதலைக் கைதொழுது கலந்த ஓசைச் சொல் தமிழ் மாலைகள் பாடிச் சில நாள் வைகித் தொழுது அகன்றார் தோணி புரத் தோன்றலாம் தாம்
கழிக் கானல் மருங்கு அணையும் கடல் நாகை அது நீங்கிக் கங்கையாற்றுச் சுழிக் கானல் வேணியர் தம் பதிபலவும் பரவிப் போய்த் தோகைமார் தம் விழிக் காவி மலர் பழனக் கீழ் வேளூர் விமலர் கழல் வணங்கி ஏத்தி மொழிக் காதல் தமிழ் மாலை புனைந்தருளி அங்கு அகன்றார் மூதூர் நின்றும்
அருகு அணையும் திருப்பதிகள் ஆனவெலாம் அங்கணரைப் பணிந்து போற்றிப் பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார் எழுந்து அருளும் பெருமை கேட்டுத் திரு மருவு செங் காட்டங் குடி நின்றும் சிறுத் தொண்டரோடிச் சென்று அங்கு குருகு மனம் களி சிறப்ப எதிர் கொண்டு தம் பதியுள் கொண்டு புக்கார்
சிறுத் தொண்டர் உடன் கூடச் செங்காட்டங் குடியில் எழுந்து அருளிச் சீர்த்தி நிறுத்த எண் திக்கிலும் நிலவும் தொண்டர் அவர் நண்பு அமர்ந்து நீல கண்டம் பொறுத்து அண்டர் உயக் கொண்டார் கணபதீச் சரத்தின் கண் போகம் எல்லாம் வெறுத்து உண்டிப் பிச்சை நுகர் மெய்த் தொண்டருடன் அணைந்தார் வேதகீதர்
அங்கு அணைந்து கோயில் வலம் கொண்டு அருளி அரவு அணிந்தார் அடிக் கீழ் வீழ்ந்து செங்கண் அருவிகள் பொழியத் திருமுன்பு பணிந்து எழுந்து செங்கை கூப்பித் தங்கள் பெரும் தகையாரைச் சிறுத் தொண்டர் தொழ இருந்த தன்மை போற்றிப் பொங்கி எழும் இசைபாடிப் போற்றி இசைத்து அங்கு ஒரு பரிசு புறம்பு போந்தார்
போந்து மா மாத்திரர் தம் போர் ஏற்றின் திருமனையில் புகுந்து சிந்தை வாய்ந்த மாதவர் அவர் தாம் மகிழ்ந்து அருள அமர்ந்து அருளி மதில்கள் மூன்றும் காய்ந்த மால் விடையார் தம் கணபதீச் சரம் பரவு காதல் கூர ஏந்து நூல் அணி மார்பர் இன்புற்று அங்கு அன்பருடன் இருந்த நாளில்
திருமருகல் நகரின் கண் எழுந்து அருளித் திங்களுடன் செங்கண் பாம்பு மருவு நெடும் சடைமவுலி மாணிக்க வண்ணார் கழல் வணங்கிப் போற்றி உருகிய அன்புறு காதல் உள் அலைப்பத் தெள்ளும் இசையுடனே கூடப் பெருகு தமிழ்த் தொடை சாத்தி அங்கு இருந்தார் பெரும் புகலிப் பிள்ளையார்தாம்
அந் நாளில் ஒரு வணிகன் பதிகன் ஆகி அணைவான் ஓர் கன்னியையும் உடன் கொண்டு பொன்னார் மேருச் சிலையார் கோயில் மாடு புறத்தில் ஒரு மடத்து இரவு துயிலும் போது மினார் வெள் எயிற்று அரவு கவ்வுதலும் கிளர்ந்த விட வேகம் கடிது தலை மீக் கொண்டு ஏறத் தன் ஆவி நீங்கும் அவன் தன்மை கண்டு சாயல் இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்வான்
வாள் அரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள் மறு மாற்றம் மற்று ஒருவர் கொடு பார் இன்றி ஆளரியேறு அனையானை அணுக வீழ்ந்தே அசைந்த மலர்க்கொடி போல்வாள் அரற்றும் போது கோள் உருமும் புள் அரசும் அனையார் எல்லாக் கொள்கையினாலும் தீர்க்கக் குறையாதாக நீள் இரவு புலர் காலை மாலை வாச நெறி குழலாள் நெடிது அயர்ந்து புலம்புகின்றாள்
அன்னையையும் அத்தனையும் பிரிந்து நின்னை அடைவாக உடன் போந்தேன் அரவால் வீடி என்னை உயிர் விட்டு அகன்றாய் யான் என் செய்கேன் இவ்விடுக்கண் தீர்க்கின்றார் யாரும் இல்லை மன்னிய சீர் வணிகர் குல மணியே யானும் வாழேன் என்று என்று அயர்வாள் மதியினாலே சென்னி இளம் பிறை அணிவார் கோயில் வாயில் திசை நோக்கித் தொழுது அழுதாள் செயல் ஒன்று இல்லாள்
அடியாராம் இமையவர் தம் கூட்டம் உய்ய அலை கடல் வாய் நஞ்சு உண்ட அமுதே செங்கண் நெடியானும் நான்முகனும் காணாக் கோல நீலவிட அரவு அணிந்த நிமலா வெந்து பொடியான காமன் உயிர் இரதி வேண்டப் புரிந்து அளித்த புண்ணியனே பொங்கர் வாசக் கடியாரும் மலர்ச் சோலை மருங்கு சூழும் கவின் மருகற் பெருமானே காவாய் என்றும்
வந்து அடைந்த சிறு மறையோன் உயிர் மேல் சீறி வரும் காலன் பெருங்கால வலயம் போலும் செந்தறு கண் வெள் எயிற்றுக் கரிய கோலம் சிதைந்து உருள உதைத்து அருளும் செய்யதாளா இந்த விடக் கொடு வேகம் நீங்குமாறும் யான் இடுக்கண் குழி நின்றும் ஏறு மாறும் அந்தி மதிக் குழவி வளர் செய்ய வேணி அணி மருகற் பெருமானே அருளாய் என்றும்
இத் தன்மை சிவன் அருளே சிந்தித்து ஏங்கும் இளங்கொடி போல் நுடங்கும் இடை ஏழை ஏத்தும் அத் தன்மை ஓசை எழுந்து எங்கள் சண்பை ஆண்டகையார் கும்பிட வந்து அணைகின்றார் தம் மெய்த் தன்மை விளங்கு திருச் செவியில் சார மேவுதலும் திரு உள்ளக் கருணை மேல் மேல் வைத் தன்னம் என அயர்வாள் மாடு நீடு மா தவத்தோர் சூழ எழுந்து அருளி வந்தார்
சிரபுரத்து மறையவனார் சென்று நின்று சிவபெருமான் அருள் போற்றிச் சிந்தை நைந்து பரிவுறுவாள் தனை நோக்கிப் பயப்படேல் நீ பருவரலும் நும் பரிசும் பகர்வாய் என்னக் கரமலர் உச்சியின் மேல் குவித்துக் கொண்டு கண் அருவி சொரிந்து இழியக் காழி வேதப் புரவலனார் சேவடிக் கீழ் வீழ்ந்து தாங்கள் போந்ததுவும் புகுந்ததுவும் புகலல் உற்றாள்
வளம் பொழில் சூழ் வைப்பூர் கோன் தாமன் எந்தை மருமகன் மற்று இவன் அவற்கு மகளிர்நல்ல இளம் பிடியார் ஓர் எழுவர் இவரில் மூத்தாள் இவனுக்கு என்றே உரை செய்தே ஏதிலானுக்குக் குளம் பெருகத் தனம் பெற்றுக் கொடுத்த பின்னும் ஓர் ஒருவராக எனை ஒழிய ஈந்தான் தளர்ந்து அழியும் இவனுக்காத் தகவு செய்து அங்கு அவரை மறைத்து இவன் தனையே சார்ந்துபோந்தேன்
மற்று இவனும் வாள் அரவு தீண்ட மாண்டான் மறி கடலில் கலம் கவிழ்த்தால் போல்நின்றேன் சுற்றத்தார் என வந்து தோன்றி என்பால் துயரம் எலாம் நீங்க அருள் செய்தீர் என்னக் கற்றவர்கள் தொழுது ஏத்தும் காழி வேந்தர் கருணையினால் காரிகையாள் தனக்கு நல்கப் பற்றியவாள் அரவு விடம் தீரு மாறு பணைமருகர் பெருமானைப் பாடலுற்றார்
சடையானை எவ்வுயிர்க்கும் தாயானானை சங்கரனை சசி கண்ட மவுலியானை விடையானை வேதியனை வெண் நீற்றானை விரவாதார் புரம் மூன்றும் எரியச் செற்ற படையானைப் பங்கயத்து மேவினானும் பாம்பு அணையில் துயின்றானும் பரவும் கோலம் உடையானை உடையானே தகுமோ இந்த ஒள்ளிழையார் உள் மெலிவு என்று எடுத்துப் பாட
பொங்கு விடம் தீர்ந்து எழுந்து நின்றான் சூழ்ந்த பொருவில் திருத் தொண்டர் குழாம் பொலிய ஆர்ப்ப அங்கையினை உச்சியின் மேல் குவித்துக் கொண்டு அங்கு அருள் காழிப் பிள்ளையார் அடியில்வீழ்ந்த நங்கை அவள் தணை நயந்த நம்பியோடு நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம் மங்குல் தவழ் சோலை மலி புகலி வேந்தர் மணம் புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்
மற்றவர்க்கு விடை கொடுத்து அங்கு அமரும் நாளில் மருகல் நகரினில் வந்து வலியபாசம் சொற்ற புகழ்ச் சிறுத் தொண்டர் வேண்ட மீண்டும் செங்காட்டங் குடியில் எழுந்து அருள வேண்டிப் பற்றி எழும் காதல் மிக மேல் மேல் சென்று பரமனார் திறத்து உன்னிப் பாங்கர் எங்கும் சுற்றும் அருந்தவரோடும் கோயில் எய்திச் சுடர் மழு ஆண்டவர் பாதம் தொழுவான் புக்கார்
புக்கு இறைஞ்சி எதிர் நின்று போற்றுகின்றார் பொங்கு திரை நதிப்புனலும் பிறையும்சேர்ந்த செக்கர் முடிச் சடை மவுலி வெண்ணீற்றார் தம் திருமேனி ஒரு பாகம் பசுமை ஆக மைக் குலவு கண்டத்தார் மருகர் கோயில் மன்னு நிலை மனம் கொண்டு வணங்குவார் முன் கைக் கனலார் கணபதீச் சரத்தின் மேவும் காட்சி கொடுத்து அருளுவான் காட்டக் கண்டார்
மருகல் அமர்ந்து நிறைந்த கோலம் மல்கு செங் காட்டங் குடியின் மன்னிப் பெருகு கணபதி ஈச்சரத்தார் பீடு உடைக் கோலமே ஆகித் தோன்ற உருகிய காதலும் மீது பொங்க உலகர் முன் கொள்ளும் உணர்வு நீட அருவி கண் வார் உறப் பாடலுற்றார் அங்கமும் வேதமும் என்று எடுத்து
கண்டு எதிர் போற்றி வினவிப் பாடிக் கணபதி ஈச்சரம் காதலித்த அண்டர் பிரானை வணங்கி வைகும் அப்பதியில் சில நாள் போற்றித் தொண்டருடன் அருள் பெற்று மற்றத் தொல்லைத் திருப்பதி எல்லை நீங்கிப் புண்டரிகத் தடம் சூழ் பழனப் பூம் புகலூர் தொழப் போதுகின்றார்
சீரின் மலிந்த சிறப்பின் மேவும் சிறுத் தொண்டர் நண்பருடன் செல்ல நல்ல வேரி நறும் தொங்கல் மற்றவரும் விடை அருளப் பெற்று மீண்ட பின்பு நீரின் மலிந்த சடையர் மேவி நிகழும் பதிகன் பல பணிந்து பாரின் மலிந்து நிறைந்த செல்வம் பயில் புகலூர் நகர்ப் பாங்கு அணைந்தார்
திருப்புகலூர் திருத் தொண்டரோடும் செம்மை முருகனார் மெய்ம் மகிழ்ந்த விருப்பொடு சென்று எதிர் கொள்ள வந்து வேத முதல்வர் தம் கோயில் எய்திப் பொருப்பு உறழ் கோபுரத்து உட் புகுந்து பூமலி முன்றில் புடை வலம் கொண்டு ஒருப் படு சிந்தையொடு உள் அணைந்தார் ஓதாது ஞானம் எலாம் உணர்ந்தார்
புக்கு எதிர் தாழ்ந்து விழுந்து எழுந்து பூம் புகலூர் மன்னு புண்ணியரை நெக்கு உருகும் சிந்தை அன்பு பொங்க நிறை மலர் கண்ணீர் அருவி செய்ய மிக்க தமிழ்த் தொடை மாலை சாத்தி மேவிய ஏழ் இசை பாடிப் போந்து திக்கு நிறை சீர் முருகர் முன்பு செல்ல அவர் மடம் சென்று புக்கார்
ஆங்கு அவர் போற்றும் சிறப்பின் மேவி அப் பதி தன்னில் அமரு நாளில் வாங்கு மலைச் சிலையார் மகிழ்ந்த வர்த்த மானீச்சரம் தான் வணங்கி ஓங்கிய அன்பின் முருகனார் தம் உயர் திருத்தொண்டு சிறப்பித்து ஓங்கும் பாங்கு உடை வண்தமிழ் பாடி நாளும் பரமர் தம் பாதம் பணிந்து இருந்தார்
மற்றத் திருப்பதி வைகு நாளில் வாக்கின் பெரு விறல் மன்னனார் தாம் புற்றிடம் கொண்டாரை வந்து இறைஞ்சிப் பொன் மதில் ஆரூர் புகழ்ந்து போற்றிச் சிறு இடைப் பொன் தொடிப் பாங்கர் தங்கும் திருப்புகலூர் தொழச் சிந்தை செய்து கொற்றவனார் அருள் பெற்ற தொண்டர் குழாத்துடன் அவ்வூர் குறுக வந்தார்
நாவுக்கு அரசர் எழுந்து அருளும் நல்ல திருவார்த்தை கேட்ட போதே சேவில் திகழ்ந்தவர் மைந்தர் ஆன திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு மேவுற்ற காதல் மிகப் பெருக விரைந்து எதிர் கொள்ள மெய் அன்பர் ஓடும் பூவில் பொலி பொய்கை சூழ் புகலூர் புறம்பு அணை எல்லை கடந்து போந்தார்
அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த அரசும் எதிர் வந்து அணைய வாசப் பொங்கு புனல்தண் புகலி வந்த பூசுரர் சிங்கமும் பொற்பின் எய்தித் தங்களின் அன்பின் முறைமை யாலே தாழ்ந்து வணங்கித் தனித் தனியே மங்கலம் ஆகிய நல் வரவின் வாய்மை வினவி மகிழும் போது
மெய்த்திரு ஞான சம்பந்தர் வாக்கின் வேந்தரை விருப்பினாலே அப்பரை இங்கு அணையப் பெறும் பேர் அருள் உடையோம் அந்தனர் ஆரூர் எப்பரிசால் தொழுது உய்ந்தது என்று வினவிட ஈறில் பெரும் தவத்தோர் செப்பிய வண் தமிழ் மாலையாலே திருவாதிரை நிகழ் செல்வம் சொன்னார்
2394 அரசர் அருளிச் செய்த வாய்மை
அப்பொழுதே அருள் ஞானம் உண்ட சிரபுர வேந்தரும் சிந்தையின் கண் தென் திருவாரூர் வணங்குதற்கு விரவிய காதலில் சென்று போற்றி மீண்டும் வந்து உம்முடன் மேவுவன் என்று உரவு கடல் கல் மிதப்பின் வந்தார்க்கு உரைத்து உடன்பாடு கொண்டு ஒல்லை போந்தார்
சொல் பெரு வேந்தரும் தோணி மூதூர் தோன்றல் பின் காதல் தொடத் தாமும் பொன் புகலூர் தொழச் சென்று அணைந்தார் புகலிப் பிரானும் புரிந்த சிந்தை விற்குடி வீரட்டம் சென்று மேவி விடையவர் பாதம் பணிந்து போற்றிப் பற்பல ஆயிரம் தொண்டரோடும் பாடலன் நான் மறைப் பாடிப் போந்தார்
துணர் இணர்ச் சோலையும் சாலி வேலித் துறை நீர்ப் பழனமும் சூழ் கரும்பின் மண மலி கானமும் ஞானமும் உண்டார் மருங்கு உற நோக்கி மகிழ்ந்து அருளி அணைபவர் அள்ளல் கழனி ஆரூர் அடைவோம் என மொழிந்து அன்பு பொங்கப் புணர் இசைச் செந்தமிழ் கொண்டு போற்றிப் பொன் மதில் ஆரூர்ப் புறத்து அணைந்தார்
வான் உயர் செங்கதிர் மண்டலத்து மருங்கு அணையும் கொடி மன்னும் ஆரூர் தான் ஒரு பொன் உலகு என்னத் தோன்றும் தயங்கு ஒளி முன் கண்டு சண்பை வந்த பால் நிற நீற்றர் பருக்கையானைப் பதிகத் தமிழ் இசைபாடி ஆடித் தேனொடு வண்டுமுரலும் சோலைத் திருப்பதி மற்று அதன் எல்லை சேர்ந்தார்
பொங்கிய சிந்தை விருப்பின் வெள்ளம் பொழிந்து புவிமேல் பொலிவது என்ன எங்கும் குளிர் ஒளி வீசு முத்தின் இலங்கு சிவிகை இழிந்தருளிச் செங்கை நிறை மலர் கொண்டு தூவித் திரு இருக் குறள் பாடி ஏத்தித் தங்கள் பிரான் அருள் ஆளும் ஆரூர் தனைப் பணிவு உற்றார் தமிழ் விரகர்
படியில் ஞானம் உண்டு அருளிய பிள்ளையைப் பணிதற்கு அடியர் சென்று எதிர் கொள எழுந்து அருளும் அஞ்ஞான்று வடி கொள் சூலத்தர் மன்னிய பொன்மதில் ஆரூர்க் கடி கொள் பேரணிப் பொலிவையார் முடிவுறக் காண்பார்
நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன் தூ நறுந்துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை யான வீதிகள் அடி வலித்து அவை கரைந்தலைய வான மாரியில் பொழிந்தது மலர் மது மாரி
ஆடல் நீடுவ துகில் கொடி அணி குழல் கொடிகள் தோடு சூழ்வன சுரும்பொடு தமனியத் தசும்பு காடு கொண்டன கதலி தோரணம் நிரைக் கமுகு மாட மாளிகை மண்டபங்களின் மருங்கு எல்லாம்
மாலை சூழ் புறம் கடைகளின் மணி நிரை விளக்கின் கோல நீள் சுடர் ஒளியுடன் கோத்து இடை தூக்கும் நீல மா மணி நிழல் பொர நிறம்புகர் படுக்கும் பால வாயின பவன வேதிகை மலர்ப் பந்தர்
தழை மலர்த்தடம் சாலைகள் தெற்கள் சதுக்கம் குழை முகத்தவர் ஆட அரங்கு இமையவர் குழாமும் விழை சிறப்பின வியல் இடம் யாவையும் மிடைந்து மழை முழக்கு என இயம்பின மங்கல இயங்கள்
விரவு பேர் அணி வேறு வேறு இன்னன விளங்கும் பிரசமென்மலர் சோலை சூழ் பெரும் திருவாரூர் அரசு அளிப்பவர் அருளினால் அடியவர் குழுவும் புரிசனங்களும் புறத்து அணைந்து எதிர் கொள்ளும் பொழுது
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச் சந்த முத்தமிழ் விரகராம் சண்பையர் தலைவர் அந்தமாய் உலகு ஆதியாம் பதிகம் அங்கு எடுத்தே எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்
ஆன அத்திரு பதிகம் முன் பாடிவந்து அணையும் ஞான வித்தகர் மெய்த்தவர் சூழ அந் நகரார் தூ நறும் சுண்ண மலர் பொரி தூஉய்த் தொழுது ஏத்த வான நாயகர் கோயில் வாயிலின் மருங்கு அணைந்தார்
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம் பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச் சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்
. மாடு சூழ் திரு மாளிகை வலம் கொண்டு வணங்கிக் கூடு காதலில் கோபுரம் பணிந்து கை குவித்துத் தேடு மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப் புற்றில் நீடு வாழ் முன்பு நிலமுறப் பல முறை பணிந்தார்
பணிந்து வீழ்ந்தனர் பதைத்தனர் பரவிய புளகம் அணிந்த மேனியோடு ஆடினர் பாடினர் அறிவில் துணிந்த மெய்ப் பொருள் ஆனவர் தமைக் கண்டு துதிப்பார் தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில் தாழ்ந்தார்
செஞ் சொல் வண் தமிழ்த் திருப்பதிகத்து இசை எடுத்து நஞ்சு போனகம் ஆக்கிய நம்பர் முன் பாடி மஞ்சு சூழ் திரு மாளிகை வாயிலின் புறம் போந்து அஞ்சு எழுத்தின் மெய் உணர்ந்தவர் திருமடத்து அணைந்தார்
அங்கு அணைந்து அமர்ந்து அருளுவார் அரன் நெறி அமர்ந்த செங்கண் ஏற்றவர் சேவடி வணங்கி முன் திளைத்துப் பொங்கு பேர் ஒளிப் புற்று இடம் கொண்டவர் புனிதப் பங்கயப் பதம் தொழுது காலம் தொறும் பணிந்தார்
புற்றிடம் கொளும் புனிதரைப் போற்றி இசை பெருக பற்றும் அன்பொடு பணிந்து இசைப் பதிகங்கள் பாடி நல்தவத் திருத்தொண்டர்கள் ஒடு நலம் சிறப்ப மற்ற வண்பதி தன் இடை வைகும் அந் நாளில்
மல்லல் நீடிய வலி வலம் கோளிலி முதலாத் தொல்லை நான் மறை முதல்வர் தம் பதி பல தொழுதே எல்லை இல் திருப்பதிகங்களால் பணிந்து ஏத்தி அல்லல் தீர்ப்பவர் மீண்டும் ஆரூர் தொழ அணைந்தார்
ஊறு காதலில் ஒளி வளர் புற்றிடம் கொண்ட ஆறு உலாவிய சடை முடி ஐயரைப் பணிந்து நீறு வாழ் என நிகழ் திருத் தொண்டர் களோடும் ஈறிலாத் திரு ஞான சம்பந்தர் அங்கு இருந்தார்
அங்கு நன்மையில் வைகும் அந்நாள் சில அகல நங்கள் தம் திரு நாவினுக்கு அரசரை நயந்து பொங்கு சீர்ப் புகலூர் தொழ அருளினால் போவார் தங்கும் அப்பதிப் புறம்பணை சார்ந்து அருள் செய்வார்
புவன ஆரூரினில் புறம் போந்து அதனையே நோக்கி நின்றே அவம் இலா நெஞ்சமே அஞ்சல் நீ உய்யும் ஆறு அறிதி அன்றே சிவனது ஆரூர் தொழாய் நீ மறவாது என்று செங்கை கூப்பி பவனமாய்ச் சோடையாய் எனும் திருப்பதிகம் முன் பாடினாரே
காழியார் வாழ வந்து அருள் செயும் கவுணியப் பிள்ளையார் தாம் ஆழியான் அறிஒணா அண்ணல் ஆரூர் பணிந்து அரிது செல்வார் பாழி மால் யானையின் உரி புணைந்தார் பனையூர் பணிந்து வாழி மாமறை இசைப் பதிகமும் பாடி அப் பதியினில் வைகி
அங்கு நின்று அரிது எழுந்து அருளுவார் அகில காரணமும் ஆனார் தங்கு நல் பதிகளும் பிற பணிந்து அருளி வண் தமிழ் புனைந்தே எங்கும் மெய்த்தவர் குழாம் எதிர் கொளத் தொழுது எழுந்து அருளி வந்தார் பொங்கு தண் பாசடைப் பங்கயப் புனல் வயல் புகலூர் சார
நாவினுக்கு அரசரும் நம்பி சீர் முருகரும் மற்று நாமச் சேவுகைத்தவர் திருத் தொண்டர் ஆனவர்கள் முன் சென்று சீதப் பூவினில் பொலி புனல் புகலியார் போதகத்து எதிர் பணிந்தே மேவ மற்று அவருடன் கூடவே விமலர் கோயிலை அடைந்தார்
தேவர் தம் தலைவனார் கோயில் புக்கு அனைவரும் சீர் நிலத்து உற வணங்கி பாவரும் தமிழ் இசைப் பதிகமும் பாடி முன் பரவுவார் புறம்பு அணைந்தே தாவில் சீர் முருகனார் திருமனைக்கு எய்தி அத் தனி முதல் தொண்டர் தாமே யாவையும் குறை அறுத்து இட அமர்ந்து அருளுவார் இனிதின் அங்கு உறையும் நாளில்
நீல நக்க அடிகளும் நிகழ் சிறுத் தொண்டரும் உடன் அணைந்து எய்தும் நீர்மைச் சீலம் மெய்த்தவர்களும் கூடவே கும்பிடும் செய்கை நேர் நின்று வாய்மை சாலமிக்கு உயர் திருத் தொண்டின் உண்மை திறம் தன்னையே தெளிய நாடிக் காலம் உய்த்தவர்களோடு அளவளாவிக் கலந்து அருளினார் காழி நாடார்
கும்பிடும் கொள்கையில் குறி கலந்து இசை எனும் பதிக முன் ஆன பாடல் தம் பெரும் தலைமையால் நிலைமை சால் பதிய தன் பெருமை சால்புற விளம்பி உம்பரும் பரவுதற்கு உரிய சொல் பிள்ளையார் உள்ளம் மெய்க் காதல் கூர நம்பர் தம் பதிகள் ஆயின ஏனைப் பலவும் முன் நண்ணியே தொழ நயந்தார்
புள்ளல் அம்பு தண்புனல் புகலூர் உறை புனிதனார் அருள் பெற்றுப் பிள்ளையார் உடன் நாவினுக்கு அரசரும் பிற பதி தொழச் செல்வார் வள்ளலார் சிறுத் தொண்டரும் நீல நக்கரும் வளம் பதிக்கு ஏக உள்ளம் அன்புறும் முருகர் அங்கு ஒழியவும் உடன்பட இசைவித்தார்
கண்ணகன் புகல் ஊரினைத் தொழுது போம் பொழுதினில் கடல் காழி அண்ணலார் திரு நாவினுக்கு அரசர் தம் அருகு விட்டு அகலாதே வண்ண நித்திலச் சிவிகையும் பின் வர வழிகொள உறும் காலை எண்ணில் சீர்த்திரு நாவினுக்கு அரசரும் மற்று அவர்க்கு இசைக்கின்றார்
நாயனார் உமக்கு அளித்து அருள் செய்த இந் நலம் கிளர் ஒளி முத்தின் தூய யானத்தின் மிசை எழுந்து அருளுவீர் என்றலும் சுடர்த் திங்கள் மேய வேணியர் அருளும் இவ்வாறு எனில் விரும்பு தொண்டர்களோடும் போய தெங்குநீர் அங்கு யான் பின் வரப் போவது என் அருள் செய்தார்
என்று பிள்ளையார் மொழிந்து அருள் செய்திட இரும் தவத்து இறையோரும் நன்று நீர் அருள் செய்ததே செய்வன் என்று அருள் செய்து நயப்பு உற்ற அன்றை நாள் முதல் உடன் செல்லும் நாள் எலாம் அவ் இயல்பினில் செல்வார் சென்று முன் உறத் திருவம்பர் அணைந்தனர் செய்தவக் குழாத்தோடும்
சண்பை மன்னரும் தம்பிரான் அருள் வழி நிற்பது தலைச் செல்வார் பண்பு மேம் படு பனிக்கதிர் நித்திலச் சிவிகையில் பணிந்து ஏறி வண் பெரும் புகல் ஊரினைக் கடந்து போய் வரும் பரிசனத்தோடும் திண் பெரும் தவர் அணைந்தது எங்கு என்று போய்த் திருவம்பர் நகர் புக்கார்
அம்பர்மா நகர் அணைந்து மா காளத்தில் அண்ணலார் அமர்கின்ற செம் பொன் மாமதில் கோயிலை வலம் கொண்டு திருமுன்பு பணிந்து ஏத்தி வம்புலாம் மலர் தூவி முன் பரவியே வண் தமிழ் இசை மாலை உம்பர் வாழ நஞ்சு உண்டவர் தமைப் பணிந்து உருகும் அன்பொடு தாழ்ந்தார்
தாழ்ந்து நாவினுக்கு அரசுடன் தம்பிரான் கோயில் முன்புறம் எய்திச் சூழ்ந்த தொண்டரோடு அப்பதி அமர்பவர் சுரநதி முடிமீது வீழ்ந்த வேணியர் தமைப் பெரும் காலங்கள் விரும்பினால் கும்பிட்டு வாழ்ந்து இருந்தனர் காழியர் வாழ வந்து அருளிய மறை வேந்தர்
பொருவு இலாத சொல் புல்கு பொன் நிறம் முதல் பதிகங்களால் போற்றித் திருவின் ஆர்ந்த கோச் செங்கணான் அந்நகர் செய்த கோயிலைச் சேர்ந்து மருவு வாய்மை வண் தமிழ் மாலை அவ்வளவனைச் சிறப்பித்துப் பெருகு காதலில் பணிந்து முன் பரவினார் பேணிய உணர்வோடும்
இன்ன வாறு சொல் மாலைகளால் துதித்து இறைஞ்சி அங்கு அமர் நாளில் கன்னி மா மதில் திருக்கடவூர் தொழக் காதல் செய்து அருளிப்போய் மன்னு கோயில்கள் பிறபதி வணங்கியே வாக்கின் மன்னவ ரோடும் அந்நெடும்பதி அணை உறக் அயலரோடு அடியவர் எதிர்கொண்டார்
மற்ற வண் பதி அணைந்து வீர அட்டத்து மழவிடையார் கோயில் சுற்று மாளிகை வலம் கொண்டு காலனை உதைத்து உருட்டிய செய்ய பொன் சிலம்பு அணி தாமரை வணங்கிமுன் போற்றி உய்ந்து எதிர் நின்று பற்று அறுப்பவர் சடை உடையான் எனும் பதிக இன் இசை பாடி
பரவி ஏத்தி அங்கு அரிதினில் போந்து பார் பரவு சீர் அரசோடு விரவு நண்பு உடை குங்கிலிய பெருங் கலயர் தம் மனை மேவிக் கரை இல் காதல் மற்று அவர் அமைத்து அருளிய விருந்து இனிது அமர்ந்து சிரபுரத்தவர் திரு மயானமும் பணிந்து இருந்தனர் சிறப்பு எய்தி
சிறப்பு உடைத் திருப்பதி அதன் இடைச் சில நாள் அமர்ந்து அருளோடும் விறல் பெரும் கரி உரித்தவர் கோயில்கள் தொழச் செல்வார் மறைப் பெரும் திருக் கலயரும் உடன்பட வணங்கிய மகிழ்வோடும் அறப் பெரும் பயன் அனைய அத் தொண்டரோடு அணைந்தனர் திருவாக்கூர்
தக்க அந்தணர் மேவும் அப் பதியினில் தான் தோன்றி மாடத்துச் செக்கர் வார் சடை அண்ணலைப் பணிந்து இசைச் செந்தமிழ் தொடைபாடி மிக்க கோயில்கள் பிறவுடன் தொழுது போய் மீச்சூர் பணிந்து ஏத்திப் பக்கம் பாரிடம் பரவ நின்று ஆடுவார் பாம்புரம் நகர் சேர்ந்தார்
பாம்புரத் துறை பரமரைப் பணிந்து நல் பதிக இன் இசை பாடி வாம்புனல் சடை முடியினார் மகிழ் இடம் மற்றும் உள்ளன போற்றிக் காம்பினில் திகழ் கரும்பொடு செம் நெலின் கழனி அம்பணை நீங்கித் தேம் பொழில் திரு வீழி நன் மிழலையின் மருங்கு உறச் செல்கிறார்
அப்பொழுதின் ஆண்ட அரசை எதிர் கொண்ட மெய்ப் பெருமை அந்தணர்கள் வெங்குரு வாழ் வேந்தனார் பிற்பட வந்து எய்தும் பெரும் பேறு கேட்டு உவப்பார் எப் பரிசினால் வந்து அணைந்து அங்கு எதிர் கொண்டார்
நிறை குடம் தூபம் தீபம் நீட நிரைத்து ஏந்தி நறை மலர் பொன் சுண்ணம் நறும் பொரியும் தூவி மறை ஒலி போய் வான் அளப்ப மா முரசம் ஆர்ப்ப இறைவர் திரு மைந்தர் தமை எதிர் கொள் வரவேற்றார்
வந்து திரு வீழி மிழலை மறை வல்ல அந்தணர்கள் போற்றி இசைப்பத் தாமும் மணி முத்தின் சந்த மணிச் சிவிகை நின்று இழிந்து தாழ்ந்து அருளி உய்ந்த மறையோர் உடன் அணைந்து அங்கு உள் புகுவார்
அப்போது அரையார் விரிகோவண ஆடை ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியர்
நாவின் தனி மன்னர் தாமும் உடன் நண்ண மேவிய விண் இழிந்த கோயில் வலம் கொள்வார் பூவியலும் உந்தியான் போற்றப் புவிக் கிழிந்த தேவியலும் மெய் கண்டு சிந்தை வியப்பு எய்தினார்
வலம் கொண்டு புக்கு எதிரே வந்து வர நதியின் சலம் கொண்ட வேணித் தனி முதலைத் தாழ்ந்து நிலம் கொண்ட மேனியராய் நீடு பெரும் காதல் புலம் கொண்ட சிந்தையினால் பொங்கி இசை மீப்பொழிந்தார்
போற்றிச் சடையார் புனல் உடையான் என்று எடுத்து சாற்றிப் பதிகத் தமிழ் மாலை சந்த இசை ஆற்ற மிகப் பாடி ஆனந்த வெள்ளத்தில் நீற்றழகர் சேவடிக் கீழ் நின்று அலைந்து நீடினார்
நீடிய பேரன்பு உருகி உள்ளலைப்ப நேர் நின்று பாடி எதிர் ஆடிப் பரவிப் பணிந்து எழுந்தே ஆடிய சேவடிகள் ஆர்வம் உற உட்கொண்டு மாடுயர் கோயில் புறத்து அரிது வந்து அணைந்தார்
வந்து அணைந்து வாழ்ந்து மதில்புறத்து ஓர் மா மடத்துச் செம் தமிழ்ச் சொல் வேந்தரும் செய்தவரும் சேர்ந்து அருளச் சந்த மணிக் கோபுரத்துச் சார்ந்த வடபால் சண்பை அந்தணர் சூளா மணியார் அங்கு ஓர் மடத்து அமர்ந்தார்
அங்கண் அமர்வார் அரனார் அடி இணைக் கீழ்த் தங்கிய காதலினால் காலங்கள் தப்பாமே பொங்கு புகழ் வாகீசரும் கூடப் போற்றி இசைத்தே எங்கும் இடர் தீர்ப்பார் இன்புற்று உறைகின்றார்
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட பாங்கர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து வீங்கு ஒலி நீர் வீழி மழலையினில் மீண்டும் அணைந்து ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் நாளில்
சேண் உயர் மாடப் புகலி உள்ளார் திரு ஞான சம்பந்தப் பிள்ளையாரைக் காணும் விருப்பில் பெருகும் ஆசை கைம் மிகு காதல் கரை இகப்பப் பூணும் மனத்தொடு தோணி மேவும் பொருவிடை யார் மலர்ப் பாதம் போற்றி வேணு புரத்தை அகன்று போந்து வீழி மிழலையில் வந்து அணைந்தார்
ஊழி முடிவில் உயர்ந்த வெள்ளத்து ஓங்கிய காழி உயர் பதியில் வாழி மறையவர் தாங்கள் எல்லாம் வந்து மருங்கு அணைந்தார்கள் என்ன வீழி மிழலையின் வேதியர்கள் கேட்டு மெய் ஞானம் உண்டாரை முன்னா ஏழ் இசை சூழ்மறை எய்த ஓதி எதிர் கொள் முறைமையில் கொண்டு புக்கார்
சண்பைத் திருமறையோர்கள் எல்லாம் தம் பிரானாரைப் பணிந்து போந்து நண்பில் பெருகிய காதல் கூர்ந்து ஞான சம்பந்தர் மடத்தில் எய்திப் பண்பில் பெருகும் கழுமலத்தார் பிள்ளையார் பாதம் பணிந்து பூண்டே எண் பெற்ற தோணிபுரத்தில் எம்மோடு எழுந்து அருளப் பெற வேண்டும் என்றார்
என்று அவர் விண்ணப்பம் செய்த போதில் ஈறு இல் சிவ ஞானப் பிள்ளை யாரும் நன்று இது சாலவும் தோணி மேவும் நாதர் கழல் இணை நாம் இறைஞ்ச இன்று கழித்து மிழலை மேவும் இறைவர் அருள் பெற்று போவது என்றே அன்று புகலி அருமறையோர்க்கு அருள் செய்து அவர்க்கு முகம் அளித்தார்
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் பொருள் ஆனார் தமைப் பரவும் சீர் பட்ட எல்லை இனிது செல்லத் திருத் தோணி மேவிய செல்வர் தாமே கார் பட்ட வண்கைக் கவுணியர்க்கு கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார்
தோணியில் நாம் அங்கு இருந்த வண்ணம் தூமறை வீழி மிழலை தன்னுள் சேண் உயர் விண்ணினின்று இழிந்த இந்தச் சீர் கொள் விமானத்துக் காட்டுகின்றோம் பேணும் படியால் அறிதி என்று பெயர்ந்து அருள் செய்யப் பெரும் தவங்கள் வேணு புரத்தவர் செய்ய வந்தார் விரவும் புளகத் தொடும் உணர்ந்தார்
அறி உற்ற சிந்தையராய் எழுந்தே அதிசயித்து உச்சிமேல் அங்கை கூப்பி வெறி உற்ற கொன்றையினார் மகிழ்ந்த விண் இழி கோயிலில் சென்று புக்கு மறி உற்ற கையரைத் தோணி மேல் முன் வணங்கும்படி அங்குக் கண்டு வாழ்ந்து குறியில் பெருகும் திருப்பதிகம் குலவிய கொள்கையில் பாடுகின்றார்
மைம் மரு பூங்குழல் என்று எடுத்து மாறில் பெரும் திருத்தோணி தன் மேல் கொம்மை முலையினாள் கூட நீடு கோலம் குலாவு மிழலை தன்னுள் செம்மை தரு விண் இழிந்த கோயில் திகழ்ந்தபடி இது என் கொல் என்று மெய்ம்மை விளங்கும் திருப்பதிகம் பாடி மகிழ்ந்தனர் வேதவாயர்
செஞ்சொல் மலர்ந்த திருப்பதிகம் பாடி திருக் கடைக் காப்புச் சாத்தி அஞ்சலி கூப்பி விழுந்து எழுவார் ஆனந்த வெள்ளம் அலைப்பப் போந்து மஞ்சிவர் சோலைப் புகலி மேவும் மா மறையோர் தமை நோக்கி வாய்மை நெஞ்சில் நிறைந்த குறிப்பில் வந்த நீர்மை திறத்தை அருள் செய்கின்றார்
பிரம புரத்தில் அமர்ந்த முக்கண் பெரிய பிரான் பெருமாட்டி யோடும் விரவிய தானங்கள் எங்கும் சென்று விரும்பிய கோலம் பணிந்து போற்றி வருவது மேல் கொண்ட காதல் கண்டு அங்கு அமர்ந்த வகை இங்கு அளித்தது என்று தெரிய உரைத் தருள் செய்து நீங்கள் சிரபுர மாநகர் செல்லும் என்றார்
என்று கவுணியப் பிள்ளையார் தாம் இயம்பப் பணிந்தருள் ஏற்றுக் கொண்டே ஒன்றிய காதலின் உள்ளம் அம் கண் ஒழிய ஒருவாறு அகன்று போந்து மன்றுள் நடம் புரிந்தார் மகிழ்ந்த தானம் பலவும் வணங்கிச் சென்று நின்ற புகழ்த் தோணி நீடுவாரைப் பணியும் நியதியராய் உறைந்தார்
சிரபுரத்து அந்தணர் சென்ற பின்னைத் திருவீழி மேவிய செல்வர் பாதம் பரவுதல் செய்து பணிந்து நாளும் பண்பின் வழாத் திருத் தொண்டர் சூழ உரவுத் தமிழ்த் தொடை மாலை சாத்தி ஓங்கிய நாவுக்கு அரசரோடும் விரவிப் பெருகிய நண்பு கூர மேவி இனிது அங்கு உறையும் நாளில்
மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவக் கண்டு பண் அமரும் மொழி உமையாள் முலையின் ஞானப் பால் அறா வாயருடன் அரசும் பார் மேல் கண் நுதலான் திருநீற்றுச் சார் வினோர்க்கும் கவலை வருமோ என்று கருத்தில் கொண்டார்
வானாகி நிலனாகி அனலுமாகி மாருதமாய் இரு சுடராய் நீரும் ஆகி ஊனாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள் அனைத்தும் ஆய் உலகுக்கு அப்பால் ஆனாத வடிவாகி நின்றார் செய்ய அடி பரவி அன்று இரவு துயிலும் போது கான் ஆடு கங்காளர் மிழலை மூதூர் காதலித்தார் கனவில் அணைந்து அருளிச் செய்வார்
உலகியல்பு நிகழ்ச்சியால் அணைந்த தீய உறுபசி நோய் உமை அடையாது எனினும் உம்பால் நிலவு சிவ நெறி சார்ந்தோர் தம்மை வாட்டம் நீங்குதற்கு நித்தம் ஓர் ஓர் காசு நீடும் இலகு மணிப் பீடத்துக் குணக்கும் மேற்கும் உமக்கு இந்தக் காலம் தீர்ந்தால் அலகில் புகழீர் தவிர்வ தாகும் என்றே அருள் புரிந்தார் திருவீழி மிழலை ஐயர்
தம்பிரான் அருள் புரிந்து கனவின் நீங்கச் சண்பையர் இள ஏறு தாமும் உணர்ந்து நம்பிரான் அருள் இருந்த வண்ணம் என்றே நாவின் இசை அரசரொடும் கூட நண்ணி வம்புலா மலர் இதழி வீழிநாதர் மணிக் கோயில் வலம் செய்யப் புகுந்த வேலி அம்பிகா பதி அருளால் பிள்ளையார் தாம் அபிமுகத்துப் பீடிகை மேல் காசு கண்டார்
காதலொடும் தொழுது எடுத்துக் கொண்டு நின்று கை குவித்துப் பெரு மகிழ்ச்சி கலந்துபொங்க நாதர் விரும்பு அடியார்கள் நாளும் நாளும் நல் விருந்தாய் உண்பதற்கு வருக என்று தீது இல் பறை நிகழ்வித்துச் சென்ற தொண்டர் திருவமுது கறி நெய்பால் தயிர் என்று இன்ன ஏதம் உறாது இனிது உண்ண ஊட்டி அங்கண் இருதிறத்து பெரும் தவரும் இருந்த நாளில்
நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர் நாட் கூறு திரு அமுது செய்யக் கண்டு சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம் திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித் தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர் திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு மேவு மிக்க அடியவருக்கு அளியா வண்ணம் விளைந்தவாறு என் கொலோ விளம்பும் என்றார்
திருமறையோர் தலைவர் தாம் அருளிச் செய்யத் திருமடத்தில் அமுது அமைப்போர் செப்புவார்கள் ஒரு பரிசும் அறிந்திலோம் இதனை உம்மை உடையவர் பால் பெறும் படிக்காசு ஒன்றும் கொண்டு கருதிய எல்லாம் கொள்ள வேண்டிச் சென்றால் காசு தனை வாசி பட வேண்டும் என்பார் பெரு முனிவர் வாகீசர் பெற்ற காசு பேணியே கொள்வர் இது பிற்பாடு என்றார்
திரு ஞான சம்பந்தர் அதனைக் கேட்டுச் சிந்திப்பார் சிவபெருமான் நமக்குத் தந்த ஒரு காசு வாசிபட மற்றக் காசு நன்று ஆகி வாசி படாது ஒழிவான் அந்தப் பெரு வாய்மை திருநாவுக்கரசர் தொண்டால் பெறும் காசாம் ஆதலினால் பெரியோன் தன்னை வருநாள்கள் தரும் காசு வாசி தீரப் பாடுவன் என்று எண்ணியது மனதுள் கொண்டார்
மற்றை நாள் தம்பிரான் கோயில் புக்கு வாசி தீர்த்து அருளும் எனப் பதிகம் பாடிப் பெற்றபடி நல் காசு கொண்டு மாந்தர் பெயர்ந்து போய் ஆவண வீதியினில் காட்ட நல் தவத்தீர் இக் காசு சால நன்று வேண்டுவன நாம் தருவோம் என்று நல்க அற்றை நாள் தொடங்கி நாள் கூறு தன்னில் அடியவரை அமுது செய்வித்து ஆர்வம் மிக்கார்
அருவிலையில் பெரும் காசும் அவையே ஆகி அமுது செய்யத் தொண்டர் அளவு இறந்துபொங்கி வரும் அவர்கள் எல்லார்க்கும் வந்தாருக்கும் மகிழ்ந்து உண்ண இன் அடிசில் மாளாது ஆகத் திரு முடி மேல் திங்களொடு கங்கை சூடும் சிவ பெருமான் அருள் செய்ய சிறப்பின் மிக்க பெருமை தரு சண்பை நகர் வேந்தர் நாவுக்கு அரசர் இவர் பெரும் சோற்றுப் பிறங்கல் ஈந்தார்
அவனி மிசை மழை பொழிய உணவு மல்க்¢ அனைத்து உயிரும் துயர் நீங்கி அருளினாலே புவனம் எலாம் பொலிவு எய்தும் காலம் எய்த புரி சடையார் கழல் பலநாள் போற்றி வைகிப் 2 தவ முனிவர் சொல் வேந்தரோடும் கூடத் தம்பிரான் அருள் பெற்றுத் தலத்தின் மீது சிவன் மகிழும் தானங்கள் வணங்கப் போவார் தென் திருவாஞ்சிய மூதூர் சென்று சேர்ந்தார்
நீடு திரு வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண் நீல மிடற்று அருமணியை வணங்கிப் போற்றிப் பாடொலி நீர்த் தலையாலம்காடு மாடு பரமர் பெருவேளூரும் பணிந்து பாடி நாடு புகழ்த் தனிச் சாத்தங் குடியில் நண்ணி நம்பர் திருக்கர் வீரம் நயந்து பாடித் தேடு மறைக்கு அரியார் தம் விளமர் போற்றித் திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கார்
நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து நலம் கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப் பைம் புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப் பரமர் திருநெல்லிக்காப் பணிந்து பாடி உம்பர் பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர் ஓங்கு புகழ்த் திருக் கொள்ளிக்காடும் போற்றி செம் பொன் மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித் திரு மலி வெண் துறை தொழுவான் சென்று சேர்ந்தார்
மற்றவ்வூர் தொழுது ஏத்தி மகிழ்ந்து பாடி மால் அயனுக்கு அரிய பிரான் மருவும் தானம் பற் பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப் பரவும் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தக் கற்றவர் வாழ் தண்தலை நீள் நெறி உள்ளிட்ட கனக மதில் திருக் களரும் கருதார் வேள்வி செற்றவர் சேர் பதி பிறவும் சென்று போற்றித் திருமறைக் காட்டு அதன் மருங்கு சேர்ந்தார் அன்றே
கார மண் வெஞ்சுரம் அருளால் கடந்தார் தாமும் கடல் காழி கவுணியர் தம் தலைவர் தாமும் சேர எழுந்து அருளிய அப் பேறு கேட்டுத் திறை மறைக் காட்டு அகன்பதியோர் சிறப்பில் பொங்கி ஊர் அடைய அலங்கரித்து விழவு கொள்ள உயர் கமுகு கதலி நிறை குடம் தீபங்கள் வார் முரசம் மங்கள் நாள் தங்கள் மல்க எதிர் கொள்ள அடியாருடன் மகிழ்ந்து வந்தார்
முன் அணைந்த திருநாவுக்கு அரசர் தம்மை முறைமையால் எதிர் கொண்டு களிப்பின் மூழ்கிப் பின் அணைய எழுந்து அருளும் பிள்ளையார் தம் பெருகிய பொன் காளத்தின் ஓசை கேட்டுச் சென்னி மிசை கரம் குவித்து முன்பு சென்று சேண் நிலத்து வணங்குதலும் திருந்து சண்பை மன்னவரும் மணிமுத்தின் சிவிகை நின்று வந்து இழிந்து வணங்கி மகிழ்ந்து உடன் போந்தார்
சொல் அரசர் உடன் கூடப் பிள்ளையாரும் தூமணி நீர் மறைக் காட்டுத் தொல்லை மூதூர் மல்கு திரு மறுகின் கண் புகுந்த போது மாதவர்கள் மறையவர்கள் மற்றும் உள்ளோர் எல்லை இல்லா வகை அர என்று எடுத்த ஓசை இரு விசும்பும் திசை எட்டும் நிறைந்து பொங்கி ஒல் ஒலி நீர் வேலை ஒலி அடக்கி விண்மேல் உம்பர் நாட்டு அப்புறத்தும் உற்றது அன்றே
அடியவரும் பதியவரும் மருங்கு போற்ற அணி மறுகின் உடன் எய்தி அருகு சூழ்ந்த கொடி நுடங்கு செழும் திரு மாளிகையின் முன்னர்க் கோபுரத்தைத் தாழ்ந்து இறைஞ்சிக்குறுகிப் புக்கு முடிவில் இமையவர் முனிவர் நெருங்கும் தெய்வ முன்றில் வலம் கொண்டு நேர் சென்று முன்னாள் படியின் மறை அருச்சித்துக் காப்பு செய்த பைம் பொன் மணித் திருவாயில் பாங்கு வந்தார்
அரு மறைகள் திருக் காப்புச் செய்து வைத்த அக்கதவம் திறந்திட அம் மறைகள் ஓதும் பெருகிய அன்பு உடை அடியார் அணைந்து நீக்கப் பெருமையினால் அன்று முதலாகப் பின்னை ஒரு புடை ஓர் வாயில் அமைத்து ஒழுகும் தன்மை உள்ளபடி கேட்டு அருளி உயர்ந்த சண்பைத் திருமறையோர் தலைவர் வியப்பு எய்தி நின்று திருநாவுக்கு அரசருக்குச் செப்புகின்றார்
அப்பரே வேத வனத்து ஐயர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும் நீரே இவ்வாயில் திருக்காப்பு நீங்கு மாறு மெய்ப் பொருள் வண் தமிழ் பாடி அருளும் என்ன விளங்கு மொழி வேந்தர் அது மேற்கொண்டு என்னை இப்பரிசு நீர் அருளிச் செய்தீர் ஆகில் இது செய்வேன் எனப் பதிகம் எடுத்துப் பாட
பாடிய அப் பதிகப் பாட்டு ஆன பத்தும் பாடல் நிரம்பிய பின்னும் பைம் பொன் வாயில் சேடு உயர் பொன் கதவு திருக் காப்பு நீங்காச் செய்கையினால் வாகீசர் சிந்தை நொந்து நீடு திருக் கடைக் காப்பில் அரிது வேண்டி நின்று எடுக்கத் திருக்காப்பு நீக்கம் காட்ட ஆடிய சேவடியார் தம் அடியார் விண்ணோர் ஆர்ப்பு எழுந்த அகிலாண்டம் அனைத்தும் மூழ்க
மற்றது கண்ட போதே வாக்கின் மன்னவரை நோக்கிப் பொற்புறு புகலி மன்னர் போற்றிட அவரும் போற்றி அற்பது நிலையினார்கள் அணி திரு மறைக்காடு ஆளும் கொற்றவர் கோயில் வாயில் நேர்வழி குறுகிப் புக்கார்
கோயில் உட்புகுவார் உச்சி குவித்த செங்கைகளோடும் தாயினும் இனிய தங்கள் தம்பிரானாரைக் கண்டார் பாயும் நீர் அருவி கண்கள் தூங்கிடப் படியின் மீது மேயின மெய்யர் ஆகி விதிர்புற்று விரைவின் வீழ்ந்தார்
அன்பினுக்கு அளவு காணார் ஆனந்த வெள்ளம் மூழ்கி என்பு நெக்கு உருக நோக்கி இறைஞ்சி நேர் விழுந்து நம்பர் முன்பு நிற்பதுவும் ஆற்றார் மொழி தடுமாற ஏத்தி மின்புரை சடையார் தம்மைப் பதிகங்கள் விளம்பிப் போந்தார்
புறம்பு வந்து அணைந்த போது புகலி காவலரை நோக்கி நிறம் கிளர் மணிக் கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்கத் திறிந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர் என்றார் தீய மறம் புரி அமணர் செய்த வஞ்சனை கடக்க வல்லார்
அன்று அரசு அருளிச் செய்ய அருமறைப் பிள்ளையாரும் வென்றி வெள் விடையார் தம்மை விருப்பினால் சதுரம் என்னும் இன் தமிழ்ப் பதிகப் பாடல் இசைத்திட இரண்டு பாலும் நின்ற அக் கதவு காப்பு நிரம்பிட அடைத்தது அன்றே
அடைத்திடக் கண்டு சண்பை ஆண்டகை யாரும் அஞ்சொல் தொடைத் தமிழாளி யாரும் தொழுது எழத் தொண்டர் ஆர்த்தார் புடைப்பு ஒழிந்து இழிந்தது எங்கும் பூ மழை புகலி வேந்தர் நடைத் தமிழ்ப் பதிக மாலை நிரம்பிட நவின்று போற்றி
அத்திரு வாயில் தன்னில் அற்றை நாள் தொடங்கி நேரே மெய்த்திரு மறைகள் போல மேதினி புக்குப் போற்ற வைத்து எதிர் வழக்கம் செய்த வரம்பு இலாப் பெருமையோரை கைத்தலம் குவித்துத் தாழ்ந்து வாழ்ந்தது கடல் சூழ் வையம்
அருமறை ஆன எல்லாம் அகல் இரு விசும்பில் ஆர்த்துப் பெருமையின் முழங்கப் பஞ்ச நாதமும் பிறங்கி ஓங்க இரு பெரும் தகையோர் தாமும் எதிர் எதிர் இறைஞ்சிப் போந்து திரு மடங்களின் முன் புக்கார் செழும்பதி விழவு கொள்ள
வேதங்கள் எண்ணில் கோடி மிடைந்து செய் பணியை மிக்க ஏதங்கள் நம்பால் நீப்பார் இருவரும் செய்து வைத்தார் நாதம் கொள் வடிவாய் நின்ற நதி பொதி சடையார் செய்ய பாதங்கள் போற்றும் மேலோர் பெருமையார் பகரும் நீரார்
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும் ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்க வரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால் பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே
இவ்வகை திருமறைக் காட்டு இறையவர் அருளை உன்னி மெய் வகை தெரிந்த வாக்கின் வேந்தர் தாம் துயிலும் போதில் மை வளர் கண்டர் சைவ வேடத்தால் வந்து வாய்மூர் அவ்விடை இருத்தும் அங்கோ வா என்று அங்கு அருளிப் போக
. கண்ட அப்போதே கைகள் குவித்து உடன் கடிது செல்வார் மண்டிய காதலோடு மருவுவார் போன்றும் காணார் எண்திசை நோக்குவாருக்கு எய்துவார் போல எய்தா அண்டர் தம்பிரானார் தம் பின் போயினார் ஆர்வத் தோடும்
அங்கு அவர் ஏகச் சண்பை ஆண்டகையாரும் அப்பர் எங்கு உற்றது என்று கேட்ப எய்தினார் திருவாய்மூரில் பொங்கிய காதலால் என்று உரைத்திடப் போன தன்மை சங்கை உற்று என்கொல் என்று தாமும் அங்கு அணையப் போந்தார்
அந்நிலை அணைந்த போதில் அம்பிகை உடனே கூட மன்னிய ஆடல் காட்டத் தளர் இளவள ரும் பாடிச் சென்னியால் வணங்கி வாய்மூர் அரசொடும் சென்று புக்கு அங்கு இன் இயல்பு உற முன் கூடி இருவரும் போற்றி செய்தார்
நீடு சீர்த் திருவாய் மூரில் நிலவிய சிவனார் தம்மைப் பாடு சொல் பதிகம் தன்னால் பரவி அப் பதியில் வைகிக் கூடு மெய் அன்பு பொங்க இருவரும் கூடி மீண்டு தேடு மா மறைகள் கண்டார் திரு மறைக்காடு சேர்ந்தார்
சண்பை நாடு உடைய பிள்ளை தமிழ் மொழித் தலைவரோடு மண் பயில் சீர்த்திச் செல்வ மா மறைக் காட்டு வைகிக் கண் பயில் நெற்றியார் தம் கழல் இணை பணிந்து போற்றிப் பண் பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு இருந்தார் அன்றே
இவ் வகை இவர்கள் அங்கண் இருந்தனர் ஆக இப்பால் செய் வகை இடையே தப்பும் தென்னவன் பாண்டி நாட்டு மெய் வகை நெறியில் நில்லா வினை அமண் சமயம் மிக்குக் கை வகை முறைமைத் தன்மை கழிய முன் கலங்கும் காலை
தென்னவன் தானும் முன் செய் தீவினைப் பயத்தினாலே அந் நெறிச் சார்வு தன்னை அறம் என நினைந்து நிற்ப மன்னிய சைவ வாய்மை வைதிக வழக்கம் ஆகும் நன் நெறி திரிந்து மாறி நவை நெறி நடந்தது அன்றே
பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடு மூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப
பறிமயிர்த் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் மேனிச் செறியும் உக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி அறியும் அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினில் சித்தம் செல்லா நிலைமையில் நிகழும் காலை
வரிச் சிலைத் தென்னவன் தான் உய்வதற்கு வளவர் கோமான் திரு உயிர்த்து அருளும் செல்வப் பாண்டிமா தேவியாரும் குரை கழல் அமைச்சனாராங் குலச் சிறையாரும் என்னும் இருவர் தம் பாங்கும் அன்றிச் சைவம் அங்கு எய்தாதாக
ஆங்கு அவர் தாங்கள் அம் கண் அரும் பெறல் தமிழ் நாடு உற்ற தீங்கினுக்கு அளவு தேற்றாச் சிந்தையில் பரிவு கொண்டே ஓங்கிய சைவ வாய்மை ஒழுக்கத்தில் நின்ற தன்மை பூங்கழல் செழியன் முன்பு புலப்படா வகை கொண்டு உய்த்தார்
இந் நெறி ஒழுகு கின்றார் ஏழ் உலகு உய்ய வந்த மன்னிய புகலி வேந்தர் வைதிக வாய்மைச் சைவச் செந்நெறி விளக்கு கின்றார் திரு மறைக்காடு சேர்ந்த நல்நிலை கன்னி நாட்டு நல்வினைப் பயத்தால் கேட்டார்
கேட்ட அப்பொழுதே சிந்தை கிளர்ந்து எழு மகிழ்ச்சி பொங்க நாள் பொழுது அலர்ந்த செந்தாமரை நகை முகத்தர் ஆகி வாள் படை அமைச்சனார் உம் மங்கையர்க்கு அரசியாரும் சேட் படு புலத்தார் ஏனும் சென்று அடி பணிந்தார் ஒத்தார்
காதலால் மிக்கோர் தாங்கள் கை தொழும் கருத்தினாலே போது அவிழ் சோலை வேலிப் புகலி காவலனார் செய்ய பாதங்கள் பணிமின் என்று பரிசன மாக்கள் தன்மை மா தவம் சுருதி செய்த மா மறைக் காட்டில் விட்டார்
ஆங்கு அவர் விட முன் போந்த அறிவு உடைமாந்தர் அம் கண் நீங்கி வண்தமிழ் நாட்டு எல்லை பின் பட நெறியின் ஏகி ஞாங்கர் நீர் நாடும் காடும் நதிகளும் கடந்து வந்து தேன் கமழ் கை தை நெய்தல் திருமறைக் காடு சேர்ந்தார்
திருமறைக்காடு நண்ணிச் சிரபுர நகரில் வந்த அருமறைப் பிள்ளையார் தாம் அமர்ந்து இனிது அருளும் செல்வ பெருமடத்து அணைய வந்து பெருகிய விருப்பில் தாங்கள் வரு முறைத் தன்மை எல்லாம் வாயில் காவலர்க்குச் சொன்னார்
மற்றவர் சென்று புக்கு வளவர் கோன் மகளார் தென்னர் கொற்றவன் தேவி யாரும் குலச்சிறையாரும் ஏவப் பொற்கழல் பணிய வந்தோம் எனச் சிலர் புறத்து வந்து சொற்றனர் என்று போற்றித் தொழுது விண்ணப்பம் செய்தார்
புகலி காவலர் தாம் கேட்டுப் பொருவிலா அருள் முன் கூர அகம் மலர்ந்து அவர்கள் தம்மை அழையும் என்று அருளிச் செய்ய நகை முகச் செவ்வி நோக்கி நல்தவ மாந்தர் கூவத் தகவு உடை மாந்தர் புக்குத் தலையினால் வணங்கி நின்றார்
நின்றவர் தம்மை நோக்கி நிகரில் சீர்ச் சண்பை மன்னர் மன்றல் அங்குழலியாராம் மானியார் தமக்கும் மானக் குன்று என நின்ற மெய்ம்மை குலச் சிறையார் தமக்கும் நன்று தான் வினவக் கூறி நல் பதம் போற்றுவார்கள்
கன்னி நாடு அமணர் தம்பால் கட்டு அழிந்து இழிந்து தங்கள் மன்னனும் அவர்கள் மாயத்து அழுந்த மா தேவியாரும் கொன்னவில் அயில் வேல் வென்றிச் குலச் சிறையாரும் கூடி இந்நிலை புகலி வேந்தர்க்கு இயம்பும் என்று இறைஞ்சி விட்டார்
என்று அவர்கள் விண்ணப்பம் செய்த பின்னர் ஏறு உயர்த்த சிவபெருமான் தொண்டர்எல்லாம் நன்று நமை ஆள் உடைய நாதன் பாதம் நண்ணாத எண்ணில் அமண் குண்டர் தம்மை வென்று அருளி வேதநூல் நெறியே ஆக்கி வெண்ணீறு வேந்தனையும் இடுவித்து அங்கு நின்ற செயல் சிவனடியார் செயலே ஆக நினைந்து அருள வேண்டும் என நின்று போற்ற
மற்று அவர்கட்கு அருள் புரிந்து பிள்ளையாரும் வாகீச முனிவருடன் கூடச் சென்று பெற்றம் உயர்த்தவர் பாதம் பணிந்து போந்து பெரிய திருக் கோபுரத்துள் இருந்து தென் நாடு உற்ற செயல் பாண்டிமா தேவியாரும் உரிமை அமைச்சரும் உரைத்து விட்ட வார்த்தை சொற்ற தனி மன்னவருக்குப் புகலி மன்னர் சொல்லி எழுந்து அருளுதற்குத் துணிந்தபோது
அரசர் அருளிச் செய்கிறார் பிள்ளாய் அந்த அமண் கையர் வஞ்சனைக்கு ஓர் அவதி இல்லை உரை செய்வது உளது உறு கோள் தானும் தீய எழுந்து அருள உடன்படுவது ஒண்ணாது என்ன பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய விரை செய் மலர்த்தாள் போற்றி புகலி வேந்தர் வேய் உறு தோளியை எடுத்து விளம்பினாரே
2515 சிரபுரத்துப் பிள்ளையார் அருளிச் செய்த
திருப்பதிகம் கேட்டு அதன் பின் திருந்து நாவுக்கு அரசும் அதற்கு உடன்பாடு செய்து தாமும் அவர் முன்னே எழுந்து அருள அமைந்த போது புரம் எரித்தார் திருமகனார் அப்பர் இந்தப் புனல் நாட்டில் எழுந்து அருளி இருப்பீர் என்று கரகமலம் குவித்து இறைஞ்சித் தவிர்ப்ப வாக்கின் காவலரும் தொழுது அரிதாம் கருத்தில் நேர்ந்தார்
வேதம் வளர்க்கவும் சைவம் விளக்குதற்கும் வேதவனத்து அருமணியை மீண்டும் புக்குப் பாதம் உறப் பணிந்து எழுந்து பாடிப் போற்றிப் பரசி அருள் பெற்று விடை கொண்டு போந்து மா தவத்து வாகீசர் மாறாத வண்ணம் வணங்கி அருள் செய்து விடை கொடுத்து மன்னும் காதலினால் அருமை உறக் கலந்து நீங்கிக் கதிர்ச் சிவிகை மருங்கு அணைந்தார் காழி நாதர்
திருநாவுக் கரசரும் அங்கு இருந்தார் இப்பால் திருஞான சம்பந்தர் செழுநீர் முத்தின் பெருநாமச் சிவிகையின் மீது ஏறி பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஓதி வெண்ணீற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார் நெஞ்சில் வருநாமத்து அன்பு உருகும் கடலாம் என்ன மாதவர் ஆர்ப்பு ஒலி வையம் நிறைந்தது அன்றே
பொங்கி எழும் திருத்தொண்டர் போற்று எடுப்பார் நால் திசையும் மங்கல தூரியம் தழங்க மறை முழங்க மழை முழங்கும் சங்க படகம் பேரி தாரை காளம் தாளம் எங்கும் எழுந்து எதிர் இயம்ப இரு விசும்பு கொடி தூர்ப்ப
மலர் மாரி பொழிந்து இழிய மங்கல வாழ்த்து இனிது இசைப்ப அலர் வாசப் புனல் குடங்கள் அணி விளக்குத் தூபம் உடன் நிலை நீடு தோரணங்கள் நிரைத்து அடியார் எதிர் கொள்ளக் கலை மாலை மதிச் சடையார் இடம் பலவும் கை தொழுவார்
தெண் திரை சூழ் கடல் கானல் திரு அகத்தியன் பள்ளி அண்டர் பிரான் கழல் வணங்கி அருந்தமிழ் மா மறை பாடிக் கொண்டல் பயில் மணல் கோடு சூழ் கோடிக் குழகர் தமைத் தொண்டருடன் தொழுது அணைந்தார் தோணிபுரத் தோன்றலார்
கண் ஆர்ந்த திரு நுதலார் மகிழ்ந்த கடிக்குளம் இறைஞ்சி எண் ஆர்ந்த திரு இடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி மண் ஆர்ந்த பதி பிறவும் மகிழ் தரும் அன்பால் வணங்கிப் பண் ஆர்ந்த தமிழ் பாடிப் பரவியே செல்கின்றார்
திரு உசாத் தானத்துத் தேவர் பிரான் கழல் பணிந்து மருவிய செந்தமிழ்ப் பதிகமால் போற்றும் படி பாடி இரு வினையும் பற்று அறுப்பார் எண் இறந்த தொண்டருடன் பெருகு விருப்பினர் ஆகிப் பிற பதியும் பணிந்து அருள்வார்
கருங்கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித் திருந்திய சீர் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி மருங்கு மிடை தடஞ் சாலி மாடு செறி குலத்தெங்கு நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார்
சங்கங்கள் வயல் எங்கும் சாலி கழைக் கரும்பு எங்கும் கொங்கு எங்கும் நிறை கமலக் குளிர் வாசத் தடம் எங்கும் அங்கு அங்கே உழவர் குழாம் ஆர்க்கின்ற ஒலி எங்கும் எங்கும் எங்கும் மலர்ப் படுகர் இவை கழிய எழுந்து அருளி
தடம் எங்கும் புனல் குடையும் தையலார் தொய்யில் நிறம் இடம் எங்கும் அந்தணர்கள் ஓதும் இடையாக நிலை மடம் எங்கும் தொண்டர் குழாம் மனை எங்கும் புனைவதுவை நடம் எங்கும் ஒலி ஓவா நல் பதிகள் அவை கடந்து
நீர் நாடு கடந்து அருளி நெடும் புறவில் குறும்புதல்கள் கார் நாடு முகை முல்லைக் கடி நாறு நிலம் கடந்து போர் நாடும் சிலை மறவர் புன் புலவை பிடை போக்கிச் சீர் நாடும் தென் பாண்டி நல் நாடு சென்று அணைவார்
மன்றல் மலர் பிறங்கல் மருங்கு எறிந்து வரும் நதிகள் பல சென்று அணைந்து கடந்து ஏறித் திரி மருப்பின் கலை புணர்மான் கன்று தெறித்தன உகைக்கும் கான அதர் கடந்து அணைந்தார் கொன்றை நறும் சடை முடியார் மகிழ்ந்த திருக்கொடும் குன்றம்
கொடும் குன்றத்து இனிது அமர்ந்த கொழும்பவளச் செழுங் குன்றை அடும் குன்றம் உரித்தானை வணங்கி அரும் தமிழ் பாடி நெடும் குன்றும் படர் காணும் நிறை நாடும் கடந்து மதி தொடும் குன்ற மதில் மதுரைத் தொன் நகர் வந்து அணைகின்றார்
இந்நிலை இவர் வந்து எய்த எண் பெரும் குன்றம் மேவும் அந்நிலை அமணர் தங்கள் கழிவு முன் சாற்றல் உற்றுப் பல்முறை வெருக் கொண்டு உள்ளம் பதைப்பத்தீக் கனாக்களோடும் துன் நிமித்தங்கள் அங்கு நிகழ்ந்தன சொல்லல் உற்றாம்
பள்ளிகள் மேலும் மாடு பயில் அமண் பாழி மேலும் ஓள்ளிதழ் அசோகின் மேலும் உணவு செய் கவளம் கையில் கொள்ளு மண்டபங்கள் மேலும் கூகையோடு ஆந்தை தீய புள் இனம் ஆன தம்மில் பூசல் இட்டு அழிவு சாற்றும்
பீலியும் தடுக்கும் பாயும் பிடித்தகை வழுவி வீழக் கால்களும் தடுமாறும் ஆடிக் கண்களும் இடமே ஆடி மேல் வரும் அழிவுக்கு ஆக வேறு காரணமும் காணார் மால் உழந்து அறிவு கெட்டு மயங்கினர் அமணர் எல்லாம்
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச் சிந்தையில் செற்றம் முன்னாத் தீக் குணம் தலை நின்றார்கள்
இப்படி அமணர் வைகும் எப் பெயர்ப் பதியும் எய்தும் ஒப்பில் உற்பாதம் எல்லாம் ஒருவரின் ஒருவர் கூறி மெய்ப்படு தீக்கனாவும் வேறு வேறு ஆகக் கண்டு செப்புவான் புறத்து உளோரும் தென்னவன் மதுரை சேர்ந்தார்
அந்நகர் தன்னில் வாழ்வார் புறம் நின்று அணைவார் கூடி மன்னவன் தனக்கும் கூறி மருண்ட உள்ளத்தர் ஆகித் துன்னிய அழுக்கு மெய்யில் தூசு இலார் பலரும் ஈண்டி இன்னன கனவு கண்டோம் என எடுத்து இயம்பல் உற்றார்
சீர் மலி அசோகு தன் கீழ் இருந்த நம் தேவர் மேலே வேரொடு சாய்ந்து வீழக் கண்டனம் அதன் பின் ஆக ஏர் கொள் முக்குடையும் தாமும் எழுந்து கை நாற்றிப் போக ஊர் உளோர் ஓடிக் காணக் கண்டனம் என்று உரைப்பார்
குண்டிகை தகர்த்துப் பாயும் பீறியோர் குரத்தி ஓடப் பண்டிதர் பாழி நின்றும் கழுதை மேல் படர்வார் தம்பின் ஒண்தொடி இயக்கி யாரும் உளை இட்டுப் புலம்பி ஓடக் கண்டனம் என்று சொன்னார் கையறு கவலை உற்றார்
கான் இடை நட்டம் ஆடும் கண் நுதல் தொண்டர் எல்லாம் மீனவன் மதுரை தன்னில் விரவிடக் கண்டோம் என்பார் கோன் அவன் தானும் வெய்ய கொடும் தழல் முழுகக் கண்டோம் ஆனபின் எழவும் கண்டோம் அதிசயம் இதுவாம் என்பார்
மழவிடை இளம் கன்று ஒன்று வந்து நம் கழகம் தன்னை உழறிடச் சிதறி ஓடி ஒருவரும் தடுக்க அஞ்சி விழ ஒரு புகலும் இன்றி மேதினி தன்னை விட்டு நிழல் இலா மரங்கள் ஏறி நின்றிடக் கண்டோம் என்பர்
ஆவது என் பாவிகாள் இக் கனாத்திறம் அடிகள் மார்க்கு மேவிய தீங்கு தன்னை விளைப்பது திடமே என்று நோவுறு மனத்தர் ஆகி நுகர் பெரும் பதமும் கொள்ளார் யாவது செயல் என்று எண்ணி இடர் உழன்று அமுங்கினார்கள்
அவ்வகை அவர்கள் எல்லாம் அந்நிலைமையர்கள் ஆகச் சைவ நன் மரபில் வந்த தட மயில் மட மென் சாயல் பை வளர் அரவேர் அல்குல் பாண்டி மா தேவியார்க்கும் மெய் வகை அமைச்சனார்க்கும் விளங்கும் நன் நிமித்தம் மேன் மேல்
அளவு இலா மகிழ்ச்சி காட்டும் அரும் பெரும் நிமித்தம் எய்த உள மகிழ் உணரும் காலை உலகெலாம் உய்ய வந்த வளர் ஒளி ஞானம் உண்டார் வந்து அணைந்து அருளும் வார்த்தை கிளர் உறும் ஓகை கூறி வந்தவர் மொழியக் கேட்டார்
அம்மொழி விளம்பினோர்க்கு வேண்டுவ அடைய நல்கி மெய்ம்மையில் விளங்கு காதல் விருப்புறு வெள்ளம் ஓங்கி தம்மையும் அறியா வண்ணம் கை மிக்குத் தழைத்துப் பொங்கி விம்மிய மகிழ்ச்சி கூர மேவிய சிறப்பின் மிக்கார்
மங்கையர்க் கரசியார் பால் வந்து அடி வணங்கி நின்ற கொங்கு அலர் தெரியல் ஆராம் குலச்சிறை யாரை நோக்கி நங்கள் தம்பிரானாராய ஞான போனகர் முன்பு எய்தி இங்கு எழுந்து அருள உய்ந்தோம் என எர் கொள்ளும் என்றார்
மன்றலங் குழலினாரை வணங்கப் போந்த அமைச்சனாரும் வென்றிவேல் அரசனுக்கும் உறுதியே என விரைந்து பொன் திகழ் மாட வீதி மதுரையின் புறத்துப் போகி இன் தமிழ் மறை தந்தாரை எதிர்கொள எய்தும் காலை
அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக் கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறி தம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்று நம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்
திரு நிலவு மணி முத்தின் சிவிகையின் மேல் சேவித்து வரு நிலவு தரு மதி போல் வளர் ஒளி வெண் குடை நிழற்றப் பெருகு ஒளிய திரு நீற்றுத் தொண்டர் குழாம் பெருகிவர அருள் பெருக வரும் ஞானத்து அமுது உண்டார் அணைகின்றார்
துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே அந்தணராம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப வந்து எழும் மங்கல நாத மாதிரம் உட்பட முழங்கச் செந்தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப
பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த எண்ணில் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட மண் உலகமே அன்றி வான் உலகம் செய்த பெரும் புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த
துன்னும் முழு உடற்றுகளால் சூழும் உணர்வின் இற்றுகளால் அன்னெறியில் செறிந்து அடைந்த அமண் மாசு கழுவுதற்கு மன்னி ஒளிர் வெண்மையினால் தூய்மையினால் வழுதியர் தம் கன்னி நாட்டு இடைக் கங்கை அணைந்தது எனும் கவின் காட்ட
பானல் வயல் தமிழ் நாடு பழி நாடும்படி பரந்த மானம் இலா அமண் என்னும் வல் இருள் போய் மாய்வதனுக்கு ஆன பெருகு ஒளி பரப்பால் அண்டம் எலாம் கொண்டதொரு ஞான மணி விளக்கு எழுந்து வருவது என நலம் படைப்ப
புரசை வயக் கட களிற்றுப் பூழியர் வண் தமிழ் நாட்டுத் தரை செய் தவப் பயன் விளங்கச் சைவ நெறி தழைத்து ஓங்க உரை செய்து இருப்போர் பலவும் ஊது மணிச் சின்னம் எலாம் பர சமயக் கோளரி வந்தான் என்று பணிமாற
இப்பரிசு அணையும் சண்பையர் பெருமான் எழுந்து அருளும் பொழுது இசைக்கும் ஒப்பில் நித்திலப் பொன் தனிப் பெரும் கானம் உலகு உய்ய ஒலித்து எழும் ஓசை செப்பரும் பெருமைக் குலச் சிறையார் தம் செவி நிறை அமுது எனத் தேக்க அப்பொழுது அறிந்து தலத்தின் மேல் பணிந்தே அளப்பு அரும் களிப்பினர் ஆனார்
அஞ்சலி குவித்த கரங்களும் தலைமேல் அணைந்திடக் கடிது சென்று அணைவார் நஞ்சு அணி கண்டர் தம் திருமகனார் உடன் வரும் நல்தவக் கடலை நெஞ்சினில் நிறைந்த ஆர்வம் முன் செல்லக் கண்டு நீள் நிலத்து இடைத் தாழ்ந்து பஞ்சவர் பெருமான் மந்திரித் தலைவர் பாங்கு உற அணைந்து முன் பணிந்தார்
நிலமிசை பணிந்த குலச் சிறையாரை நீடிய பெரும் தவத் தொண்டர் பலரும் முன் அணைந்து வணங்கி மற்று அவர்தாம் படியின் நின்று எழாவகை கண்டு மலர் மிசைப் புத்தேள் வழிபடும் புகலி வைதிகச் சேகரர் பாதம் குலவி அங்கு அணைந்தார் தென்னவன் அமைச்சர் குலச்சிறையார் எனக் கூற
சிரபுரச் செல்வர் அவர் உரை கேட்டுத் திருமுகத் தாமரை மலர்ந்து விரவு ஒளி முத்தின் சிவிகை நின்று இழிந்து விரைந்து சென்றவர் தமை அணைந்து கரகமலங்கள் பற்றியே எடுப்பக் கை தொழுது அவரும் முன் நிற்ப வரமிகு தவத்தால் அவரையே நோக்கி வள்ளலார் மதுர வாக்கு அளிப்பார்
செம்பியர் பெருமான் குல மகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம் பெருமான் தன் திரு அருள் பெருகும் நன்மை தான் வாலிதே என்ன வம்பு அலர் அலங்கல் மந்திரி யாரும் மண் மிசைதாழ்ந்து அடி வணங்கித் தம் பெரும் தவத்தின் பயன் அனையார்க்குத் தன்மை ஆம் நிலை உரைக்கின்றார்
சென்ற காலத்தின் பழுது இலாத் திறமும் இனி எதிர் காலத்தின் சிறப்பும் இன்று எழுந்து அருளப் பெற்ற பேறு இதனால் எற்றைக்கும் திரு அருள் உடையோம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் நற்றமிழ் வேந்தனும் உய்ந்து வென்றி கொள் திரு நீற்று ஒளியினால் விளங்கும் மேன்மையும் படைத்தனம் என்பார்
இங்கு எழுந்து அருளும் பெருமை கேட்டு அருளி எய்துதற்கு அரிய பேறு எய்தி மங்கையர்க் கரசியாரும் நம்முடைய வாழ்வு எழுந்து அருளியது என்றே அங்கு நீர் சென்று அடிபணிவீர் என்று அருள் செய்தார் எனத் தொழுதார்வம் பொங்கிய களிப்பால் மீளவும் பணிந்து போற்றினார் புரவலன் அமைச்சர்
ஆங்ஙனம் போற்றி அடி பணிந்து அவர் மேல் அளவுஇலா அருள் புரி கருணை தாங்கிய மொழியால் தகுவன விளம்பி தலை அளித்து அருளும் அப்பொழுதில் ஓங்கு எயில் புகழ் சூழ் மதுரைத் தோன்றுதலும் உயர் தவ தொண்டரை நோக்கி ஈங்கு நம் பெருமான் திரு ஆலவாய் மற்று எம்மருங்கினது என வினவ
அன்பராய் அவர் முன் பணிந்த சீர் அடியார் அண்ணலார் அடி இணை வணங்கி முன்பு நின்று எடுத்த கைகளால் காட்டி முருகு அலர் சோலைகள் சூழ்ந்து மின் பொலி விசும்பை அளக்கும் நீள் கொடி வியன் நெடும் கோபுரம் தோன்றும் என்பு அணி அணிவார் இனிது அமர்ந்து அருளும் திருவாலவாய் இது என்றார்
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு துணைமலர்க் கரம் குவித்து அருளி மண்டு பேரன்பால் மண்மிசைப் பணிந்து மங்கையர்க்கரசி என்று எடுத்தே எண் திசையும் பரவும் ஆலவாய் ஆவது இதுவே என்று இருவர் தம் பணியும் கொண்டமை சிறப்பித்து அருளி நல் பதிகம் பாடினார் குவலயம் போற்ற
பாடிய பதிகம் பரவியே வந்து பண்பு உடை அடியவரோடும் தேடுமால் அயனுக்கு அரியவர் மகிழ்ந்த ¢ரு ஆலவாய் மருங்கு அணைந்து நீடுயர் செல்வக் கோபுரம் இறைஞ்சி நிறை பெரு விருப்புடன் புக்கு மாடு சூழ் வலம் கொண்டு உடையவர் கோயில் மந்திரியாருடன் புகுந்தார்
ஆளும் அங்கணர் ஆலவாய் அமர்ந்து இனிது இருந்த கான கண்டரைக் கண்களின் பயன் பெறக் கண்டு நீள வந்து எழும் அன்பினால் பணிந்து எழ நிறையார் மீளவும் பல முறை நிலம் உற விழுந்து எழுவார்
அங்கம் எட்டினும் ஐந்தினும் அளவு இன்றி வணங்கிப் பொங்கு காதலின் மெய்ம் மயிர் புளகமும் பொழியும் செம் கண் நீர் தரும் அருவியும் திகழ் திரு மேனி எங்கும் ஆகி நின்று ஏத்தினார் புகலியர் இறைவர்
நீல மா மிடற்று ஆலவாயான் என நிலவும் மூலம் ஆகிய திரு இருக்குக் குறள் மொழிந்து சீல மாதவத் திருத் தொண்டர் தம் ஒடும் திளைத்தார் சாலும் மேன்மையில் தலைச்சங்கப் புலவனார் தம்முன்
சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச் சாத்தி நல் இசை தண் தமிழ் சொல் மலர் மாலை பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய
பிள்ளையார் எழுந்து அருளி முன் புகுதும் அப் பொழுது வெள்ள நீர் பொதி வேணியார் தம்மைத் தொழும் விருப்பால் உள் அணைந்திட எதிர் செலாது ஒரு மருங்கு ஓங்கும் தெள்ளு நீர் விழித் தெரிவையார் சென்று முன்பு எய்த
மருங்கின் மந்திரியார் பிள்ளையார் கழல் வணங்கிக் கரும் குழல் கற்றை மேல் குவிகைத்து அருளி உடையார் பருங்கை யானை வாழ் வளவர் கோன் பாவையார் என்னப் பெரும் களிப்புடன் விரைந்து எதிர் பிள்ளையார் அணைந்தார்
தென்னவன் பெருந் தேவியார் சிவக் கன்றின் செய்ய பொன்னடிக் கமலங்களில் பொருந்த முன் விழுந்தார் மன்னு சண்பையர் வள்ளலார் மகிழ் சிறந்து அளிக்கும் இன்னருட் பெரும் சிறப் பொடும் திருக்கையால் எடுத்தார்
ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே பானலங் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி யானும் என் பதியும் செய்த தவம் என் கொல் என்றார்
யாழின் மென் மொழியார் மொழிந்து எதிர் கழல் வணங்கக் காழி வாழ வந்து அருளிய கவுணியர் பிரானும் சூழும் ஆகிய பர சமயத்து இடைத் தொண்டு வாழும் நீர் மையீர் உமைக் காண வந்தனம் என்றார்
இன்னவாறு அருள் செய்திடத் தொழுது அடி வீழ்ந்தார் மன்னும் மந்திரியார் வரும் திறம் எலாம் மொழிய அன்ன மென் நடையார் தமக்கு அருள் செய்து போக்கித் துன்னு மெய்த் தொண்டர் சூழ வந்து அருளும் அப் பொழுது
செல்வம் மல்கிய திரு ஆல வாயினில் பணி செய்து அல்கு தொண்டர்கள் பிள்ளையார் மருங்கு அணைந்து இறைஞ்சி மல்குகார்அமண் இருள் கெட ஈங்கு வந்து அருள எல்லையில் தவம் செய்தனம் என எடுத்து இசைத்தார்
அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச் சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப் பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார்
பரவு காதலில் பாண்டிமா தேவியார் அருளால் விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக் சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார் இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய
வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர் பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால்
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள் எங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய்
மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச் சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார் கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார்
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார் பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார்
புக்க போது அவர் அழிவுறு மனத்து இடைப் புலர்ச்சி மிக்க தன்மையை வேந்தனும் கண்டு எதிர் வினவி ஒக்க நீர் திரண்டு அணைவதற்கு உற்றது என் என்னத் தக்கது அல்ல தீங்கு அடுத்தது சாற்றுதற்கு என்றார்
ஆவதேல் நுமக்கு அடுத்தது கூறுவீர் என்று காவலன் பரிந்து உரைத்தலும் கார் அமண் கையர் மாவலாய் உன் தன் மதுரையில் சைவ வேதியர் தாம் மேவலால் இன்று கண்டுமுட்டியாம் என்று விளம்ப
என்று கூறலும் கேட்டு முட்டி யானும் என்று இயம்பி நன்று நல் அறம் புரிந்தவா நான் என்று நகுவான் கன்றும் உள்ளத்தன் ஆகி அக் கண் நுதல் அடியார் இன்று இம் மாநகர் அணைந்தது என் அவர்கள் யார் என்றான்
மாலை வெண் குடை வளவர் சோணாட்டு வண்புகலிச் சூல பாணிபால் ஞானம் பெற்றான் என்று சுருதிப் பாலன் அன்பர் தம் குழாத்தொடும் பனி முத்தின் சிவிகை மேல் அணைந்தனன் எங்களை வாதினில் வெல்ல
என்று கூறுவார் இத்திறம் முன்பு தாம் அறிந்தது ஒன்றும் அங்கு ஒழியா வகை உரைத்தலும் தென்னன் மன்றலம் பொழில் சண்பையார் வள்ளலார் நாமம் சென்று தன் செவி நிறைத்தலும் செயிர்த்து முன் கொல்வான்
மற்ற மா மறை மைந்தன் இம் மருங்கு அணைந்தானேல் உற்ற செய் தொழில் யாது செய்கோம் என உரைப்ப செற்றம் மீக் கொண்ட சிந்தையும் செய்கையும் உடையோர் கொற்ற மன்னவன் மொழிக்கு எதிர் குறித்து உரை செய்வார்
வந்த அந்தணன் தன்னை நாம் வலிது செய்து போக்கும் சிந்தை அன்றி அச் சிறு மறையோன் உறை மடத்தில் வெம் தழல் பட விஞ்சை மந்திரத் தொழில் விளைத்தால் இந்த நன்னகர் இடத்திரான் ஏகும் என்று இசைத்தார்
ஆவது ஒன்று இதுவே ஆகில் அதனையே விரைந்து செய்யப் போவது என்று அவரைப் போக்கிப் பொய் பொருளாகக் கொண்டான் யாவதும் உரை ஆடாதே எண்ணத்தில் கவலையோடும் பூவணை அமளி புக்கான் பொங்கு எழில் தேவி சேர்ந்தாள்
மன்னவன் உரைப்பது இன்றி இருக்க மா தேவியார்தாம் என் உயிருக்கு உயிராய் உள்ள இறைவா நீ உற்றது என்னோ முன் உள மகிழ்ச்சி இன்றி முகம் புலர்ந்து இருந்தாய் இன்று பன்னிய உள்ளத்து எய்தும் பருவரல் அருள் செய் என்றார்
தேவியார் தம்மை நோக்கித் தென்னவன் கூறுகின்றான் காவி நீள் கண்ணினாய் கேள் காவிரி நாட்டில் மன்னும் தாவில் சீர்க் கழுமலத்தான் சங்கரன் அருள் பெற்று இங்கு மேவினான் அடிகள் மாரை வாதினில் வெல்ல என்றான்
வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம் கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டியானும் காதல் வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த பண்பு மற்று இதுவேயாகும் பரிசு வேறு இல்லை என்றான்
மன்னவன் உரைப்பக் கேட்டு மங்கையர்க்கு அரசியார் தாம் நின்னிலை இதுவே யாகில் நீடிய தெய்வத் தன்மை அன்னவர் வாது செய்தால் வென்றவர் பக்கம் சேர்ந்து துன்னுவது உறுதியாகும் சுழிவுறேல் மன்ன என்றார்
சிந்தையில் களிப்பு மிக்குத் திருக் கழு மலத்தார் வேந்தன் வந்தவாறு எம்மை ஆள என வரு மகிழ்ச்சி யோடும் கொந்தலர் குழலார் போதக் குலச் சிறையார் அங்கு எய்த இந்த நன் மாற்றம் எல்லாம் அவர்க்கு உரைத்து இருந்த பின்னர்
கொற்றவன் அமைச்சனாரும் கைதலை குவித்து நின்று பெற்றனம் பிள்ளையார் இங்கு அணைந்திடப் பெறும் பேறு என்பார் இற்றை நாள் ஈசன் அன்பர் தம்மை நாம் இறைஞ்சப் பெற்றோம் மற்று இனிச் சமணர் செய்யும் வஞ்சனை அறியோம் என்றார்
மானியார் தாமும் அஞ்சி வஞ்சகப் புலையர் தாங்கள் ஈனமே புரிய வல்லார் செய்வது என் நாம் என்று எண்ணி ஞான சம்பந்தர் தம்பால் நன்மை அல்லாது செய்யும் ஊனம் வந்து அடையில் யாமும் உயிர் துறந்து ஒழிவது என்றார்
இவர் நிலை இதுவே ஆக இலங்குவேல் தென்னவன் ஆன அவன் நிலை அதுவாம் அந்நாள் அருகர் தம் நிலை யாது என்னில் தவம் மறைந்து அல்ல செய்வார் தங்கள் மந்திரத்தால் செந்தீ சிவ நெறி வளர்க்க வந்தார் திரு மடம் சேரச் செய்தார்
ஆதி மந்திரம் அஞ்சு எழுத்து ஓதுவார் நோக்கும் மாதிரத்தினும் மற்றை மந்திர விதி வருமே பூதி சாதனர் மடத்தில் தாம் புனைந்த சாதனைகள் சாதியா வகை கண்ட அமண் குண்டர்கள் தளர்ந்தார்
தளர்ந்து மற்று அவர் தாம் செய்த தீத்தொழில் சரியக் கிளர்ந்த அச்சம் முன் கெழுமிய கீழ்மையோர் கூடி விளங்கு நீள் முடி வேந்தன் ஈது அறியின் நம் மேன்மை உளம் கொள்ளான் நமர் விருத்தியும் ஒழிக்கும் என்று உணர்வார்
மந்திரச் செயல் வாய்த்து இல மற்று இனிச் செய்யும் புந்தியாவது இங்கு இது எனப் பொதி தழல் கொடு புக்கு அந்தண் மாதவர் திரு மடப் புறத்து அயல் இருள் போல் வந்து தம் தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர்